2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக டாக்டர் கபீல் கான் மீது உத்தரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த இறப்புகளுக்கு கான் மீது குற்றம் சாட்டடிய உத்தரப்பிரதேச அரசு, இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது.
இக்குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், டாக்டர் கான் மீது தவறில்லை என்றும், அவர் சொந்த பணத்தைப் போட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், டாக்டர் கான் மீது அலட்சியம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்த உத்தரப்பிரதேச அரசு, அவரை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.
இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக, டாக்டர் கான் மீது அலிகார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, ஜனவரி 29 ஆம் தேதி மும்பையில் வைத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் கானை கைது செய்தனர்.
பிப்ரவரி 10 ஆம் தேதி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உத்தரப்பிரதேச அரசு கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து, கபீர் கானை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதனையடுத்து, அவரை பிப்ரவரி 13 ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரப்பிரதேச அரசு கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது.
இதனையடுத்து, தொடர்ந்து 7 மாதங்கள் சிறையில் இருந்த அவரை, அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஒன்றாம் தேதி விடுதலை செய்தது. பழிவாங்கும் நோக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்தரப்பிரேதச அரசு பயன்படுத்தியிருப்பது உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
பசுக்களை இறைச்சிக்காக வெட்டியவர்கள் மீது சமீபத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தையும் எந்த விசாரணையும் இன்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரப்பிரதேச அரசு சிறையில் அடைத்தது.
கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளை மறுத்து, நீண்ட நாள் அவர்களை சிறையில் வைக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை காவல் துறையினர் பயன்படுத்துகின்றனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை அணுகினால், நீதி கிடைப்பதற்கு தாமதமாகிறது. 9 மாதங்கள் கழித்துத்தான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகளை அவசர வழக்குகளாக நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கபீல் கானை தன்னிச்சையாக தடுப்புக் காவலில் கைது செய்ததன் மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அதிகாரத்தை ஏன் குறைக்கக் கூடாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆகவேண்டும்.