‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில், தென் மாநிலங்களுக்கான முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் எழுதியுள்ள கட்டுரை:
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது, தலித் என்ற ஒரே காரணத்துக்காக கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் பெண் பஞ்சாயத்துத் தலைவர் அமிர்தத்தை தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், சுதந்திர தினத்தின் போது இதுபோன்ற செய்திகளுடன் நாம் கண்விழிக்க வேண்டியிருப்பது ஏன்? குடிமக்கள் தேசபக்தியின் நிகழ்வுகளை நினைவுகூறும்போதும், நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒரு நவீன, சுதந்திர தேசமே காரணம் என அதிகாரிகள் நினைவுகூறும்போதும், இத்தகைய நிகழ்வுகள் நம்மை கடந்து போகின்றன.
தலித் என்பதால் அமிர்தத்தை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததின் மூலம் ஆத்துக்குப்பம் பஞ்சாயத்து நிர்வாகிகள் வெட்கக்கேடான குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். மேலும் நம் நாட்டின் அரசியல் சாசன உத்வேகத்தையும் மீறியுள்ளனர்.
1938 முதல் 1939 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீண்டாமை தடுப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதிலிருந்து தீண்டாமையை தடை செய்வதில் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. ராஜாஜி முதல்வராக இருந்தபோது, சென்னை மாகாணத்தின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில், குடிமக்கள் குறைபாடுகளை நீக்கும் சட்டம், 1939 ஆம் ஆண்டு கோயில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீட்டுச் சட்டம் என, முக்கிய சட்டங்களை நிறைவேற்றினார். முதலாவதாக, ஒடுக்கப்பட்ட சாதிகள் பொது இடங்களில் எதிர்கொள்ளும் பாகுபாட்டை நீக்கி ஹரிஜன் என்று குறிப்பிடுவது என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது, தலித்துகள் கோயிலுக்குள் சென்று வழிபட அங்கீகாரம் அளித்தது.
1934 ஆம் ஆண்டு அகில இந்திய ஹரிஜன் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை வந்த மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவத்தால் ஏற்பட்ட உந்துதல் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் மத்தியிலான சமூக சிந்தனையை கருத்தில் கொண்டு இந்த சட்டங்கள் இயற்றப்பட்டன.
மதுரைக்கு வந்த மகாத்மா காந்தி, கக்கனுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல முயன்றார். கக்கன் தலித் என்பதால், காந்தியையும் உள்ளே அனுமதிக் கவில்லை. எல்லா ஹரிஜனர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட பிறகே, இந்த கோயிலுக்குள் நுழைவேன் என்று சொல்லிவிட்டு காந்தி திரும்பிச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, கடந்த 1939 ஆம் ஆண்டு ஜுலை 8 ஆம் தேதி கோயில் நுழைவு அதிகாரம் மற்றும் இழப்பீட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டபின், தமிழ்நாடு ஹரிஜன் சேவா சங்கத் தலைவராக இருந்த ஏ.வைத்தியநாத ஐயர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜனர்களையும், சாணார்களையும்( இப்போதைய நாடார் சமுதாயத்தினர்) அழைத்துச் செல்லப்போவதாக அறிவித்தார். உயர் சாதி இந்துக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கத் தேவர் விடுத்த அறிக்கையில், மீனாட்சி அம்மன் கோயிலின் நுழைவு வாயில் அருகே நான் நிற்கின்றேன். ஹரிஜன்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் தைரியமுள்ளவர்கள் அல்லது என்னை எதிர்கொள்ளும் எவர் வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு நான் சரியான பதிலடி கொடுப்பேன் என்று அறிவித்தார்.
இதன்பிறகு, கக்கன் உள்ளிட்ட 6 ஹரிஜனர்கள் மற்றும் ஒரு சாணார் சமுதாயத்தை சேர்ந்தவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்றதன் மூலம், வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. நினைத்ததை சாதித்த மகாத்மா காந்தி, கடந்த 1946 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் காலடி எடுத்துவைத்தார்.
அரசியல் சாசனத்தின் 17 ஆவது பிரிவில், ” எந்த ரூபத்தில் வந்தாலும் தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. தீண்டாமையை பின்பற்றுவது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக அளிக்கப்பட்டுவந்த அநீதிக்கு இத்தகைய சக்திவாய்ந்த வார்த்தைகள் முற்றுப்புள்ளி வைத்தன. அரசியல் சாசனத்தின் 17 ஆவது பிரிவுக்கு வலுவூட்டும் வகையில், நாடாளுமன்றத்தில் தீண்டாமை தண்டனைச் சட்டம் ( 1955 ஆம் ஆண்டு 22 ஆவது பிரிவு) நிறைவேறியது.
இந்த சட்டம் அமலில் இருக்கும்போதே, கடந்த 1976 ஆம் ஆண்டு 1955 ஆம் ஆண்டு குடிமக்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் என்று பெயர் மாற்றியமைக் கப்பட்டது. தீண்டாமைக் கொடுமை ஒரு பகுதியில் நடந்தால், குற்றமிழைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.
இதனையடுத்து, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு எதிரான ( வன்கொடுமை தடுப்பு) சட்டம் ( 1989 ஆண்டு 33 ஆவது பிரிவு) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் 16 ஆவது பிரிவில், 1955 ஆம் ஆண்டு குடிமக்கள் உரிமைச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் 10 ஏ விதியின் கீழ், கூட்டு அபராதம் விதிக்க மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, இந்த சட்டத்தின் கீழ் மேலும் சில அதிகாரங்களும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றம் புரிந்தவர்களுக்கு கூட்டு அபராதம் விதிப்பதால் மட்டும், செய்த தவறை அவர்கள் உணர இந்த இரு சட்டங்கள் பயன்படவில்லை. எனினும், இந்த சட்டங்கள் குற்றவாளிகளுக்கு ஒரு தடையாக செயல்படும் நோக்கம் கொண்டவையாக இருந்தன.
ஆத்துக்குப்பம் சம்பவத்தைப் பொறுத்தவரை, 1989 ஆம் ஆண்டு எஸ்சி.,எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது ஒரு சமூக மீறலாகும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், இந்த சாதிய பாகுபாட்டை எதிர்த்துப் போராடாவிட்டால், அத்தகைய சாதிய பாகுபாட்டை, அவர்கள் ஊக்குவிக்கிறார்கள் என்று பொருள்.
இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், அமிர்தத்தை தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த அரசியலமைப்பு மீறலை நேரில் பார்த்த கிராம மக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தனி நபர்கள் மற்றும் சமூக அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாவிட்டால், தலித்துகளுக்கோ அல்லது வேறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ எதிரான மதவெறி மற்றும் சாதிய பாகுபாட்டை எந்த சட்டத்தாலும் ஒழிக்க முடியாது. இன்று வரை நாட்டின் பல பகுதிகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. இந்த அமைப்பின் தீமைகள் குறித்து, கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான் அரசு இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும். வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்த தமிழக அரசு தவறியதையே ஆத்துப்பாக்கம் சம்பவம் படம்பிடித்துக் காட்டுகிறது.