”முஸ்லிம் பெயரைக் கேட்டாலே, குருவியைப் போல் சுட்டுக் கொல்லும் காவல் துறை..முஸ்லிம் பெயரைக் கேட்டாலே சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்…”
- உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கும் கொடுங்கோல் ஆட்சியில் சிறுபான்மை மக்கள் படும் துயர்தான் மேலே உள்ள வரிகள்…இல்லையில்லை வலிகள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த 2019 ஆம் ஆண்டு வட இந்தியாவில் போராட்டம் தீவிரமாக நடந்தது. முஸ்லிம் சமுதாயத்தினர் மட்டுமின்றி, இதர சமுதாயத்தினரும் மனிதநேய மிக்கவர்களும் இதில் பங்கேற்றனர்.
டெல்லியில் பாஜகவின் தூண்டுதலில் வெடித்த போராட்டத்தில், அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. காவல் துறையினரே வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டு கோரத் தாண்டவம் ஆடினர்.
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துக் கடந்த டிசம்பர் மாதம் பல மாவட்டங்களில் போராட்டங்களில் நடந்தன. இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, 23 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கீழே விழுந்து உயிருக்குப் போராடியவர்களை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல் துறையின் மிருகத்தனம் உத்தரப்பிரதேசத்தில் வெளிப்பட்டது.
இந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் முன்ஷி புர்வா பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியைச் சேர்ந்த அஃப்டாப் அலாம், முகமது சைஃப் மற்றும் ராயிஸ் கான் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
3 பேருமே 23 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். கூலித் தொழிலாளர்கள். இவர்கள் வேலைக்குச் சென்றால்தான், அந்த குடும்பங்களின் வயிறு நிறையும். இதில் கொடுமை என்னவென்றால், மசூதிக்குத் தொழுகை நடத்தச் சென்ற போது, இவர்களை வழிமறித்துச் சுட்டுக் கொன்றிருக்கிறது கொலைகாரக் காவல் துறை.
தங்கள் மகன்களை சுட்டுக் கொன்ற காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு 3 பெற்றோர்களும் காவல் நிலையத்துக்கு அலையாய் அலைந்தனர். காவல் துறை செவிசாய்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்து போனார்கள் என்று, பச்சைப் பொய்யைக் கூறியது காவல் துறை. எதுவும் தெரியாதது போல் உத்தரப் பிரதேச அரசு உறங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலான ஊடகங்கள் விவாதம் என்ற பெயரில், பிரச்சினையைத் திசை திருப்பிக் கொண்டிருந்தன.
வழக்குப் பதிவு செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்திய பெற்றோரிடமே, பேரம் பேசத் தொடங்கினர் காவல் துறையினர். மறுத்தபோது, அவர்களை மிரட்டத் தொடங்கினார். எதற்கும் அஞ்சாமல் துணிந்து நின்று போராடினார் அஃப்டாப் அலாமின் 55 வயது தாயார் நஜ்மா. கிட்டத்தட்ட 11 மாத போராட்டத்துக்குப் பிறகு, 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இவர்களது புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைப் பதியுமாறு, உத்தரப்பிரதேச காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகன்களை இழந்து கதறிக் கொண்டிருந்த அந்தப் பெற்றோர்களின் கண்களில் முதல்முறையாக ஆனந்தக் கண்ணீர் வந்தது. எவ்வளவு தடைகள், எவ்வளவு மிரட்டல்கள்…அனைத்தையும் கடந்து சாதித்தனர் அந்தப் பரிதாபப் பெற்றோர்கள்.
இவர்களுக்குக் கடைசிவரை உறுதுணையாக நின்றவர், அவர்களது வழக்குரைஞர் நஸீம் கான். அவருக்கு ஆளும் தரப்பிடம் இருந்தும், காவல் துறையிடம் இருந்தும் மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன. உயிரைத் துச்சமென நினைத்துப் போராடி நீதியைப் பெற்றுத் தந்துள்ளார் நஸீம் கான்.
அஃப்டாப் அலாம்
”அம்மா…என்னைக் காவல் துறையினர் சுட்டுவிட்டார்கள்” என நெஞ்சிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில், தாயின் மடியில் படுத்தவாறு அஃப்டாப் அலாம் பேசிய வார்த்தைகள் தான் கடைசி வார்த்தைகள். ”தன் கண்முன்னே, பெற்று வளர்த்த குழந்தை துடிதுடிக்கச் சாகிறதே…” என்று அந்த தாய் எவ்வளவு தவித்திருப்பாள்?
அந்த கொடுமையை அஃப்டாப் அலாமின் தாய் நஜ்மா கண்ணீர் சிந்தியபடியே பகிர்ந்து கொள்கிறார்…
”என் மகனைக் கொல்லவில்லை என்று காவல் துறையினர் சொல்ல முடியாது. என் மகனை அவர்கள் தான் கொன்றார்கள் என, என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த நிலையில் என் மகன் என்னிடம் பேசினான். காவல் துறையினர் சுட்டுவிட்டதாகக் கூறினான். நான் பிழைக்கமாட்டேன் என்றான். இதுதான் அவன் பேசிய கடைசி வார்த்தைகள். என் மகனை லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் சேர்த்தோம். அவனைக் காப்பாற்றுமாறு, டாக்டர்களின் காலில் விழுந்து கெஞ்சினேன். ஆனால், என் கதறலை டாக்டர்கள் கண்டுகொள்ளவே இல்லை. என் மகனுக்குச் சிகிச்சையே அளிக்கவில்லை. அந்த இடத்துக்கு முக்கிய நபர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். என் மகன் தொழுகை நடத்தப் போனானா? அல்லது துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கச் சென்றானா?
தவறு இழைத்த காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு வீட்டுக்கும் காவல் நிலையத்துக்கும் நடையாய் கடந்த ஓராண்டாக நடந்தேன். எந்தப் பலனும் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு செத்துப் போனார்கள் என்று, மனசாட்சியே இல்லாமல் நம்ப முடியாத பொய்யைக் காவல் துறையினர் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். நீண்ட போராட்டத்துக்குப் பின், இப்போது என் மகன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த புகாரில், முதல் தகவல் அறிக்கையைப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது…” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் நிறுத்தினார் நஜ்மா.
முகமது சைஃப்
அஃப்டாப் அலாம் தவிர, சுட்டுக் கொல்லப்பட்ட முகமது சைஃப் மற்றும் ராயிஸ் கான் ஆகியோரின் பெற்றோரும் வறுமையைத் தலையில் சுமந்து கொண்டு கடந்த ஓராண்டாக நீதியைப் பெறத் தவித்தனர். இவர்களும் இதே பகுதியில் வசிப்பவர்கள் தான். நஜ்மாவுடன் இணைந்து, இவர்களின் பெற்றோரும் நீதிமன்றம் மூலம் நியாயம் பெற்றுள்ளனர்.
முகமது சைஃப் தந்தை முகமது தாகி கூறும்போது, ” தினக்கூலியான என் மகன் என் மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, அவனது அண்ணனுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்றான். பின்னர் மசூதிக்குத் தொழுகை நடத்தச் சென்றபோது, அவனைத் தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர் காவல் துறையினர். என் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரத்தைக் கூட தெரிவிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர். பத்திரிக்கைகளைப் பார்த்துத்தான் அவன் இறந்ததைத் தெரிந்து கொண்டோம்.
சமாதானமாகப் போகுமாறு காவல் துறை தனக்குத் தொந்தரவு தருவதாக எங்கள் வழக்குரைஞர் நஸீர் கான் கூறினார். வழக்கை திரும்பப் பெறமுடியாது என்று 3 குடும்பத்தினரும் தெரிவித்தோம். பணத்தைக் கொடுத்து வழக்கை முடிக்க அவர்கள் பார்த்தார்கள். நாங்கள் கடைசிவரை உறுதியாக நின்றோம். எங்கள் வழக்குரைஞர் நஸீர் கான் உடன் இருந்தார். காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என் தெரிந்தபின், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினோம். எங்கள் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
சைஃப்பின் தாயார் குவாமல் ஜஹான், ”என் மகனைக் காவல் துறையினர் எப்படிக் கொன்றார்களோ, அதேபோல், அவர்கள் குடும்பத்துக்கும் ஏற்படும்” என்று சாபமிட்டபடி மண்ணை வாரித் தூற்றினார். பாவம், அந்த ஏழைத் தாயால் இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ராயிஸ் கான்
சுட்டுக்கொல்லப்பட்ட ராயிஸ் கானின் 70 வயது தந்தை முகமது ஷரீஃப் கூறும்போது, ”காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் என் மகனின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரை, என்னைக் காவல் துறையினர் சுட்டுவிட்டார்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தான். மருத்துவமனையில் யாருமே கண்டுகொள்ளவில்லை. அவன் பெயரைக் கேட்டதுமே, அவனைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் டாக்டர்கள் சென்றுவிட்டனர்.
நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினோம். அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினோம். மருத்துவமனையில் எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன்பு என்னைக் காவல் நிலையத்துக்கு அழைத்து சில காகிதங்களில் கையெழுத்துப் போடுமாறு காவல் துறையினர் நிர்ப்பந்தித்தனர். என் வழக்குரைஞர் இல்லாமல் கையெழுத்துப் போடமாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டேன். கோபமடைந்த காவல்துறையினர் என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.
வழக்குப் பதியாமல், எங்களுக்கு உதவாத, எங்களுக்கு இரக்கம் காட்டாத காவல் துறையினரை நாங்கள் எப்படி நம்புவது? எங்கள் வாயை அடைக்க முயன்றார்கள். எப்படியாவது எங்களை அடக்க முயன்றார்கள். உங்கள் கையால் சாக வேண்டும் என்றால், நாங்கள் சாகத் தயார் என்றேன். இவ்வளவு கொடுமைகளைக் கடந்து, எங்கள் வழக்குரைஞர் நஸீர் கான் நீதிமன்றத்தில் போராடியதன் விளைவாக, எங்கள் மகன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எங்கள் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்ய, காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது” என்றார்.
சுட்டுக் கொல்லப்பட்ட அஃப்டாப் அலாம், முகமது சைஃப் மற்றும் ராயிஸ் கான் ஆகியோரின் 3 குடும்பங்களுக்கும் வழக்குரைஞராக இருந்தவர் நஸீர் கான். வழக்கை திரும்பப்பெற பணம் தருவதாக வழக்குரைஞர் மூலம் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
”3 பேருக்கும் ஆஜரானால் கொன்றுவிடுவோம் என்று என்னையும் மிரட்டினார்கள். எனக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்தும், அழுத்தம் கொடுத்தும் வழக்கை வாபஸ் பெற வைக்கக் காவல் துறையினர் முயன்றனர். இந்த வழக்கிலிருந்து விலகு. இல்லையேல், நீ உயிருடன் இருக்கமாட்டாய் என மிரட்டினர். இதற்கெல்லாம் பயந்தால், வழக்குரைஞர் பணியைச் செய்யமுடியாது” என்றார் நஸீர் கான்.
தொடர்ந்து நஸீம் கான் கூறும்போது, ”இறக்கும் தறுவாயில் ஒருவர் இருந்தால், மாஜிஸ்திரேட் முன்போ அல்லது உயர் அதிகாரி முன்போ வாக்குமூலம் பெற வேண்டும். இதனை ஏன் செய்யவில்லை. 3 அப்பாவிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அரசுதான் பொறுப்பு” என்றார்.
இறுதியாக, அஃப்டாப் அலாமின் தாயார் நஜ்மா கூறியதை நினைவு படுத்த வேண்டியுள்ளது…
வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டால் ரூ.5 லட்சம் தருவதாக ஓர் இன்ஸ்பெக்டர் பேரம் பேசுவதாக, நஜ்மாவிடம் வழக்குரைஞர் நஸீர் கான் தெரிவித்துள்ளார். அதற்கு நஜ்மா, ”நான் ரூ.10 லட்சம் தருகிறேன். கொல்லப்பட்ட என் மகனை உயிரோடு தர முடியுமா? என்று அந்த இன்ஸ்பெக்டரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என ஆவேசமாக கூறியிருக்கிறார்.
இந்த கேள்வியே இன்று மனசாட்சி உள்ளோரின் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த கேள்விக்குக் காவல் துறையினரிடமோ, உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசிடமோ இன்றுவரை பதில் இல்லை. மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொடுமைகள் அதிகமாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் தாங்கள் கொல்லப்படப்போவதை அந்த மக்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் போராடியவர்களுக்கு, ‘தாங்கள் ஏன் சுடப்பட்டோம்?’ என்று தெரியாமலேயே இறந்து போனார்கள்.
எத்தனை கோயில்களைக் கட்டினாலும், இந்த பாவங்களை ஒருபோதும் போக்க முடியாது என்பதை, ‘ஆதித்யநாத்களுக்கு’ காலம் விரைவில் உணர்த்தும். அப்போது, ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டுக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் .