நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக கும்பல் தான் என்று சிரோன்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது சிரோன்மனி அகாலிதளம் கட்சி. மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து, இக்கட்சியைச் சேர்ந்த ஹரீஸ்ம்ராட் கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், சிரோன்மனி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தமது ட்விட்டர் பதிவில், ”விவசாயிகள் என்ன கேட்கிறார்களோ, அதைத் தராமல் பிடிவாதப் போக்கோடு மோடி அரசு நடந்துகொள்கிறது. அதோடு, சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களைத் திசை திருப்ப முயல்கிறது. அப்படிச் செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் தேசபக்தி உடையவர்கள் என்றும், எதிராகப் பேசுகிறவர்களை நாட்டைத் துண்டாடுபவர்கள் என்றும் பாஜகவினர் பேசி வருகின்றனர். நாட்டை உண்மையிலேயே துண்டாடும் கட்சி பாஜகதான்.
நாட்டின் ஒற்றுமையை அந்த கட்சி துண்டாடுகிறது. இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகத் திருப்பி வெட்கக்கேடான செயலைச் செய்த பாஜக, இப்போது, சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களை மோத விடப்பார்க்கிறது. அமைதியாகப் போராடும் தேசபக்தியுடைய பஞ்சாப் விவசாயிகளை, வகுப்புவாத தீக்குள் தள்ளிவிட பாஜக முயல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.