அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டு விடுமோ என்ற ஷேக் அப்துல்லாவின் அச்சத்தை, 67 ஆண்டுகள் கழித்து பாரதிய ஜனதா அரசு நிஜமாக்கியுள்ளது.
இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்கு அவர் முக்கிய பங்காற்றியதை மனதில் கொள்ளாமல், அவசர அவசரமாக அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது என்பது மக்களின் பார்வையாக உள்ளது.
ஷேக் அப்துல்லாவின் பிறந்தநாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு வந்தது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபின், அந்த விடுமுறையையும் அரசு ரத்து செய்துவிட்டது. கடந்த 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பதிலாக, இந்தியாவுடன் இணைக்க முக்கிய காரணமாக இருந்த காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல்லா, தற்போதைய ஆட்சியாளர்களின் கண்களுக்கு துரோகியாக தெரிகிறார்.
பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளர் ஆண்ட்ரு வைட்ஹெட் ஷேக் அப்துல்லா குறித்து கூறும்போது, பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொள்ள இந்திய படைகளுக்கு ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1947 ஆம் ஆணடு அக்டோபர் 27 ஆம் தேதி இந்திய துருப்புகள் காஷ்மீரின் விமான தளத்தில் இறங்குவதற்கு, அன்றைய காலக்கட்டத்தில் காஷ்மீர் மக்களின் அன்பை பெற்றிருந்த ஷேக் அப்துல்லாதான் பேருதவியாக இருந்தார். இதன்மூலம், காஷ்மீர் தேசியவாதியாக இருந்த அவர், இந்திய தேசியவாதியாக மாறினார்.
1937 ஆம் ஆண்டு நேருவை முதல்முறையாக சந்தித்தபோது, ஜம்மு காஷ்மீரின் செல்வாக்கு பெற்ற தலைவராக ஷேக் அப்துல்லா இருந்தார். இருவரும் கொள்கை ரீதியில் ஒத்துப்போனதால், காங்கிரஸுக்கு நெருக்கமானவராக ஷேக் அப்துல்லா மாறினார்.
1938 ஆம் ஆண்டு, நேரு கேட்டுக் கொண்டதற்கிணங்க முஸ்லீம் மாநாடு என்ற பெயரில் இருந்த தமது கட்சியை, தேசிய மாநாட்டு கட்சி என்று ஷேக் அப்துல்லா மாற்றினார். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் காலூன்றவும் ஷேக் அப்துல்லா காரணமாக இருந்தார்.
இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்தவுடன், அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டது. எனினும், இந்த சிறப்பு அந்தஸ்து தொடருமா என்ற சந்தேகம் ஷேக் அப்துல்லாவுக்கு எழுந்தது. இந்திய அரசியல் சாசனத்துக்குட்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்பட்டதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் பல்ராஜ் மதோக் உருவாக்கிய பிரஜா பரிஷத் அமைப்பு நடத்திய போராட்டத்துக்குப் பிறகு, ஷேக் அப்துல்லாவுக்கு சந்தேகம் உறுதியானது.
ஒர் அரசியல் சாசனம், ஒரு கொடி மற்றும் ஒரு தலைவர் என்று பிரஜா பரிஷத்தின் கோஷம் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரி, கடந்த 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி தலைமையிலான ஜன்சங்கம் நடத்திய போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முழு ஆதரவை அளித்தது.
அப்போது, இந்தியாவின் வகுப்புவாதத்தை ஷேக் அப்துல்லா கடுமையாக விமர்சித்தார். ஜம்முவில் இந்து மக்களிடம் பேசிய ஷேக் அப்துல்லா, இந்து தர்மம், பகவான் கிருஷ்ணர் மற்றும் மகாத்மா காந்தியை பின்பற்றி மத நல்லிணக்கத்தை பேணுமாறு அழைப்பு விடுத்தார்.
நேருவின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில், கடந்த 1952 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்திய அரசுடன் ஷேக் அப்துல்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தொடரும் என்ற நம்பிக்கை மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டது.
சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் அமைப்பு இணைந்து, சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தின. ஜம்முவில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து 72 மணி நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. பிரஜா பரிஷத் தலைவர் பிரேம் நாத் டோக்ராவையும் அவரது ஆதரவாளர்களையும் ஷேக் அப்துல்லா கைது செய்தார். ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற ஷ்யாம் பிரசாத் முகர்ஜியும் எல்லையில் கைது செய்யப்பட்டார்.
இந்த காலக்கட்டத்தில் தான் ஷேக் அப்துல்லா இவ்வாறு யோசித்தார்…
”இந்தியா ஜனநாயக நாடு. பிரஜா பரிசத்தோ அல்லது ஜன்சங்கமோ ஆட்சிக்கு வரலாம். இது நடக்காது என்று மறுப்பதற்கில்லை. நடக்காது என்ற உத்தரவாதமும் இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து என்னவாகும்?”
ஷேக் அப்துல்லாவின் இந்த அச்சம், 67 ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாரதிய ஜனதா அரசால் நிஜமாகியிருக்கிறது.