ராஜஸ்தானில் ஆளுநரின் செயல்பாடு குறித்தும் சட்ட ரீதியான அணுகுமுறை குறித்தும் இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் அம்ரீஷ் ரஞ்சன் பாண்டே மற்றும் டெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அம்புஜ் திக்சித் ஆகியோர் நேஷனல் ஹெரால்டு இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையின் விவரம்:
ராஜஸ்தான் அரசியல் குழப்பம் எந்நேரத்திலும் முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. வலுவான நிலையில் இருக்கும் ஓர் அரசுக்கு எதிராக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி, சட்டப்பேரவையை கூட்டுமாறு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை, முதலமைச்சர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையை கூட்டச் சொல்வதற்கான காரணத்தை நன்கு அறிந்தும், ஆளுநர் அமைதி காக்கிறார். அமைச்சரவை கூறியபின், சட்டப்பேரவையை கூட்டுவதுதான் ஆளுநரின் அரசியல் சாசன கடமை.
ராஜஸ்தானின் ஆளுநரின் இத்தகைய செயல்பாடு முன்னுதாரணம் ஒன்றுமில்லை. பாஜக ஆட்சி 2014 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, அரசியல் சாசன பதவிகளை பாஜக தன் சுயலாபத்துக்காக பயன்படுத்தி வருவது ஊரறிந்த கதை.
இன்றைய காலக்கட்டத்தில், ஆளுநர் பதவி என்பது உச்சபட்ச அரசியலாகிவிட்டது. கல்யாண்சிங் முதல் கல்ராஜ் மிஸ்ரா வரை இதே நிலைதான். மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
இந்த சூழ்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதல்வரின் அதிகாரங்களைப் பற்றி புரிந்துகொள்வது சரியாக இருக்கும்.
அடுத்ததாக, சட்டப்பேரவையை ஆளுநர் தன்னிச்சையாக கூட்ட முடியுமா? அல்லது முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை கேட்டுக்கொண்டால் தான் கூட்ட முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்வது அவசியம்.
மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநர் இருந்தபோதிலும், அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரம் இரு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது வகை, விருப்பமான செயல்பாடுகள். மாநில அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வேண்டுகோள் இன்றி ஆளுநர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, மாநிலத்தில் அரசியல் இயந்திரம் செயலற்றுப் போனால், அரசியல் சாசனத்தின் 356 ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவோ, குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்கவோ அதிகாரம் உண்டு. மேலும் மசோதாக்களை நிறுத்தி வைக்கவும் அதிகாரம் உண்டு.
எனினும், ஆளுநரின் பெரும்பாலான அதிகாரம், இந்திய அரசியல் சாசனத்தின் 163 ஆவது பிரிவின் கீழ், அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் படியே செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின்படியே சில விசயங்களில் ஆளுநர் செயல்பட வேண்டும். தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது. அமைச்சரவையின் ஆலோசனையை ஆளுநர் புறக்கணித்துவிட முடியாது.
ஆளுநர் அரசியல் ரீதியான நியமனம் என்பதால், அவரது குறுக்கீடு இன்றி மாநில அரசு சுதந்திரமாக செயல்பட அரசியல் சாசனத்தின் 163 ஆவது பிரிவு வழி வகை செய்கிறது. ஆனால், தற்போது ஆளுநரைப் பயன்படுத்தி மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு குறுக்கிடுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில்தான், சட்டப்பேரவையை கூட்டுமாறு ஆளுநரை அமைச்சரவை கேட்டுக் கொண்டபின், அவ்வாறு பேரவையை கூட்ட ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என 2016 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியல் சாசனத்தின் 174 ஆவது பிரிவுடன் இணைந்த 163 ஆவது பிரிவு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் விவாதங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, முதலமைச்சர் கேட்டுக் கொண்டால், சட்டப்பேரவையை கூட்ட வேண்டியது ஆளுநரின் கடமை என்பது தெளிவாகிறது.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா செயல்பட வேண்டியது அவசியம். அவ்வாறு செயல்படாமல், அரசியல்வாதி போல் இருந்தால், அரசியலமைப்பின் கண்ணியம் குலைந்துபோக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா காரணமானார் என வரும் காலம் வசைபாடும்.