2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குஜராத் அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேஷனல் ஹெரால்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:
நமது அமைப்புகளில் கடமை உணர்வு குறித்துக் கற்பிக்கப்பட வேண்டும். நமது உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் மட்டுமல்ல, நம் அனைத்து அமைப்புகளும் இந்த விஷயத்தில் தோல்வியடைகின்றன.
பல சம்பவங்களில் சகிப்பின்மையைக் காண முடிகிறது. அரசாங்கமே இத்தகையைச் சகிப்பின்மையை ஆதரிப்பதால், இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. அனைத்து சிறுபான்மையினத்தவர் மத்தியிலும் இது மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மற்ற குடிமக்களுக்கு இணையாக சிறுபான்மை மக்களும் நடத்தப்படவேண்டும். நம் நாட்டில் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் அம்சங்களை நாம் படிக்க வேண்டும். சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவத்தை நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அரசியல் சாசனத்தில் இது உரக்கவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சகோதரத்துவத்துடன் கூடிய ஒவ்வொரு சமுதாயத்திலும் நீதி என்பது அடித்தளம். உங்கள் குடிமக்களை நீங்கள் சமமாக நடத்தாவிட்டால், நீங்கள் நீதியை நிலைநாட்டவில்லை என்று அர்த்தம். அநேகமாக இன்றைக்கு இத்தகைய நீதி பெருமளவு காணாமல் போயிருக்கிறது.
2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைக்குப் பிறகு, நியாயமான நிவாரண உதவிகளைக் குஜராத் மாநில அரசு வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர்களே சீரமைத்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் இல்லை. அங்கு முஸ்லிம்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. கோத்ரா சம்பவம் நடந்து 18 ஆண்டுகளாகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு தலைமுறையே வளர்ந்து நிற்கிறது. தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இதே மோசமான சூழ்நிலை தான் சிறுபான்மையினர் வாழும் எல்லா இடங்களிலும் இருக்கிறது.
சமுதாயத்தில் வளர்ச்சி மற்றும் வறுமை போன்ற பிரச்சினைகளைத் திசை திருப்பவே லவ் ஜிகாத், தாய் மதம் திருப்பும் கோஷம் மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
மதச்சார்பின்மை என்பது அரசியல் சாசனத்தின் ஒரு அங்கம். மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடிக்காவிட்டால், நாம் அரசியல் சாசனத்தை அமல்படுத்தவில்லை என்று அர்த்தம். எல்லா மதத்தையும் இந்திய சமுதாயம் சமமாக நடத்தும் போது, சில மாநிலங்கள் மட்டும் இதில் மாறுபட்டு நிற்கின்றன.
பாஜக அரசின் மதப் பெரும்பான்மை போக்கால் சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அதோடு சகோதரத்துவம் மற்றும் சமத்துவமும் பாதிக்கப்படும். ஒவ்வொரு குடிமக்களுக்கும் உரிமை வழங்கும் நீதியும் மறுக்கப்படும்.
அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை செயல்படுத்தும்போது, நடைமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதே என் கருத்து. மெஹ்பூபா முப்தி பாஜக அரசின் கூட்டணியில் இருந்தார். அதனால் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
இந்திய-சீன உறவைப் பொறுத்தவரை, இதுவரை இருந்த அரசுகள் நன்றாக நிர்வகித்து வந்துள்ளன என்று நினைக்கிறேன். மன்மோகன் சிங் அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இப்போது சில சிக்கல்கள் உள்ளன. நிலைமை கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது நிலைமை சற்று தடம்புரண்டுள்ளது. இரண்டு கைகளைத் தட்டினால் தான் ஓசை வரும் என்பதை அதிகாரத்தில் இருப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அண்டை நாடான வங்கதேசத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனினும், அது குறித்த விவாதத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதில் தெளிவு தேவைப்படுகிறது. நாம் இந்தியர்கள் என்பதே ஒன்றுபட்ட எண்ணமாக இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் கேள்விக்குரியதாகும் போது, அதை எதிர்த்துப் போராட எனக்கு உரிமையும் கடமையும் உள்ளது” என்றார்.