இந்துப் பெண்களைக் காதல் திருமணம் செய்து, அவர்களை முஸ்லீம் மதத்துக்கு மாற்றுவதாக இந்து அமைப்புகள் தொடர்ந்து கூறிவந்தன. ஆனால், இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், இந்துப் பெண்களைக் காதல் திருமணம் செய்து, முஸ்லீம்களாக மதமாற்றம் செய்வதைத் தடுப்பதாகக் கூறி, லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இது, இரு மனங்களுக்கு இடையேயுள்ள நட்புக்கு எதிராக அரசு நிகழ்த்தும் கவுரவ குற்றம் என்று விமர்சிக்கப்படுகிறது.
இதன்படி, மாவட்ட மாஜிஸ்திரேட் முஸ்லீம்-இந்து காதலர்களைப் பிரிக்கலாம். திருமணத்தைச் சட்டவிரோதம் என்று கருதலாம். இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லீம் இளைஞருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம்.
2020 உத்தரப்பிரதேச சட்டவிரோத மதமாற்ற அவசரத் தடைச் சட்டத்தை, ஆளும் பாஜக லவ் ஜிகாத் தடை அவசரச் சட்டம் என்று கூறுகின்றது. பெண்களின் தன்னாட்சிக்கு எதிராகக் குற்றம் இழைப்பதற்கு இந்த லவ் ஜிகாத் தடைச் சட்டம் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளிக்கிறது.
லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை ஆதரிப்போர், இந்தச் சட்டம் காதலைக் குற்றமாகக் கருதவில்லை,இந்து பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதைத் தான் இந்த சட்டம் தடை செய்கிறது என்கிறார்கள். அப்படியென்றால், பெண்ணின் பெற்றோர், சகோதரர், சகோதரி அல்லது வேறு ரத்த உறவுகளை வழக்குப் பதிவு செய்ய இந்த சட்டம் ஏன் அனுமதிக்கிறது?
இந்து பெண்களைக் காப்பது தான் இந்த அவசரச் சட்டத்தின் நோக்கம் என்றால், அந்த பெண்களுக்கே புகார் அளிக்கும் உரிமையை வழங்காதது ஏன்?
இதற்கான பதில் எளிது. திருமணம் செய்து கொண்ட பின், ஒரு பெண்ணின் பெயரையும், அடையாளத்தையும் மறைக்கும்போது, அந்த நபருக்கு எதிராக அவரை திருமணம் செய்து கொண்ட பெண் புகார் அளிக்க முடியும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 493 ஆவது பிரிவு இதற்கு வழிவகை செய்கிறது. எனவே, காதல் திருமணம் செய்த பின், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தால் அதனைத் தடுக்கவோ, தண்டிக்கவோ புதிய சட்டம் தேவையில்லை.
பெண்களின் தன்னாட்சி அதிகாரத்தின் மீது புதிய அவசரச் சட்டம் மூலம் சட்டம் எனும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெற்றோர், கிராமப் பஞ்சாயத்து மற்றும் இந்து மேலாதிக்க வன்முறையாளர்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, காதல் திருமணம் செய்து தம்பதி மீது வன்முறை நிகழ்த்தவும், முஸ்லீம் ஆணுடன் நட்புறவு கொண்டுள்ள இந்து பெண் மீதும் வன்முறை நிகழ்த்தவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் மீதான வெறுப்பும், பெண்களை ஒரு சொத்தாகப் பாவிப்பதன் விளைவே லவ் ஜிகாத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தின் சுருக்கம் என ஒரு கார்ட்டூன் விளக்குகிறது. காதல் என்ற வார்த்தையே லவ் ஜிகாத் என்ற அர்த்தமல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் அளிக்காத வரை, பாலியல் வன்கொடுமை அல்லது மதமாற்றம் அல்லது தவறான திருமணம் குறித்து லவ் ஜிகாத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது அர்த்தமற்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லி மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் 583 வன்கொடுமை வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், 40 சதவீத பாலியல் வன்கொடுமை அதே சமுதாயத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில், சாதி மாறியதாலோ, மதம் மாறியதாலோ மட்டும் இந்த குற்றம் நிகழ்ந்ததாக எப்படிக் கூறமுடியும்?
முஸ்லீம் ஆணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் எந்தவொரு இந்துப் பெண்ணுக்கு எதிராகக் குற்றம் சாட்டவும் வன்முறையைப் பயன்படுத்தவும் இந்த லவ் ஜிகாத் தடைச் சட்டம் உதவுகிறது.
இதில், முக்கிய நினைவு கொள்ள வேண்டியது என்னவென்றால், பெண்களின் தன்னாட்சிக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்பட்டால், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நிகழ்த்த வழி ஏற்படுத்தும். மேலும், பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க முடியாமலும் இதுபோன்ற வன்முறை செய்துவிடும்.
பொது ஒழுங்கு, அறநெறி மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளிப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும், பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசியல் சாசனத்தின் 25 ஆவது பிரிவு சுதந்திரம் அளிக்கிறது. கேரள உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்கள் இதனை உறுதி செய்துள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் லவ் ஜிகாத் என்ற வார்த்தையே கிடையாது. மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட இரு வழக்குகளைத் தேசிய விசாரணை முகமை விசாரித்து வருகிறது. இதுதவிர, நாட்டின் எந்தப் பகுதியிலும் லவ் ஜிகாத் புகார்கள் வரவில்லை.
இந்துப் பெண்களோடு பழகினாலே, முஸ்லீம் ஆண்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் பாஜகவின் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். லவ் ஜிகாத் அவர்களது இறுதி யாத்திரைக்கு வழிவகுக்கும் என வெளிப்படையாக எச்சரிக்கிறார்.
திருமணம் என்ற பெயரில் மதமாற்றம் நடைபெறக் கூடாது என்றும், இதனைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்த கருத்துகளை ஆதித்யநாத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மிகச் சமீபத்திய தீர்ப்பு, காதல் திருமணம் செய்து கொண்டவர்களைக் குற்றவாளிக்கும் சட்டத்தை ஏற்கவில்லை. நூர்ஜஹான் மற்றும் பிரியன்ஸி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் (இந்துவாக இருந்து முஸ்லீமாக மாற்றப்பட்டவர் நூர்ஜஹான். முஸ்லீமாக இருந்து இந்துவாக மாற்றப்பட்டவர் பிரியன்ஸி) ஏற்கனவே தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மதமாற்றத்துக்காகத் திருமணம் செய்வதை ஏற்கமுடியாது என்றும் இதனைத் தடுக்க சரியான சட்டங்கள் இல்லை என்று தான் தீர்ப்பளித்தது.
இதைத்தான் தமக்குச் சாதமாக யோகி ஆதித்யநாத் பிடித்துக் கொண்டார். ஆனால், அதே அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை.
தனது வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கப் பாதுகாப்பு அளிக்கவும், சுதந்திரம் அளிக்கவும், பாராட்டவும் இது போன்ற தீர்ப்புகள் தவறிவிட்டன. சட்ட ரீதியாக அளிக்கப்படும் இதுபோன்ற தீர்ப்புகள் வாழ்க்கைத் துணையை சுதந்திரமாக தேர்ந்தெடுப்பது, வாழும் உரிமையை மீறுவதாக உள்ளன.
மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் இந்த தீர்ப்பு, முதிர்ச்சியடைந்த இருவர் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தையோ அல்லது அவர்கள் யாருடன் வாழ விரும்புகிறார்கள் என்பதற்கான உரிமையையோ கையாளவில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
பிரியங்கா கார்வார் மற்றும் சலாமத் வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இவர்களை இந்து என்றோ, முஸ்லீம் என்றோ நாம் பார்க்கக்கூடாது. முதிர்ச்சியடைந்த இருவர் சுதந்திரமாகத் திருமணம் செய்து கொண்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்திய அரசியல் சாசனத்தின் 21 ஆவது பிரிவின் கீழ், தனிநபருக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உள்ளன. யாருடன் வாழவேண்டும் என்று முடிவு செய்வது ஆண் அல்லது பெண்ணின் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிடுவது அரசியல் சாசனத்தின் 21 ஆவது பிரிவுக்கு எதிரானதாகும். வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற அடிப்படைத் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும்.
உத்தரப் பிரதேச அரசின் புதிய லவ் ஜிகாத் தடைச் சட்டப்படி, மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்டவர்களைத் துன்புறுத்துவதோடு, மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கருணைப் பார்வையை அந்த காதலர்கள் எதிர்நோக்க வேண்டிய நிலைக்கும் தள்ளிவிடும். இதுதவிர, இந்து பெண்ணை திருமணம் செய்து முஸ்லீம் ஆணை கைது செய்யும் கருவியாக இந்த சட்டம் பயன்படுத்தப்படும். நீதிமன்றத்தில் தங்கள் மீதான வழக்குகள் முடியும் வரை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள காதலர்கள் வாழ்க்கையைத் தொடர இனி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லீம் ஆணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். முஸ்லீம் ஆணை திருமணம் செய்த இந்துப் பெண்கள் பெற்றோர் வீட்டில் அடைத்து வைக்கப்படலாம். இந்து மேலாதிக்க சக்திகள் அந்தப் பெண்களைச் சித்ரவதை செய்யலாம். காதலைத் தடுத்து நிறுத்துவதே இவர்களின் முழு நோக்கமாக இருக்கும்.
ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் என்று வரையறுக்கும் 377 ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2014 ஆம் ஆண்டு ஆங்கில நாளேட்டுக்கு பேட்டியளித்த, ஓய்வுபெற்ற நீதிபதி லீலா சேத் வலுவான கோரிக்கையை விடுத்திருந்தார். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவது அன்பு. நம்மை மனிதனாக்கும் உரிமை அன்புக்கான உரிமை. அந்த உரிமையின் வெளிப்பாட்டை குற்றவாளியாக்குவது ஆழ்ந்த கொடுமை மற்றும் மனிதாபிமானமற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி லீலா சேத்தின் மகன் விக்ரம் சேத் எழுதிய நாவலின் அடிப்படையில் வெளிவந்துள்ள நெட்ஃபிளிக்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றும் இந்து பெண் மற்றும் முஸ்லீம் இளைஞர் பரிமாறிக் கொள்ளும் முத்தக் காட்சிகளை எதிர்த்து இந்த மேலாதிக்க அமைப்புகள் வெறுப்புணர்வைப் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
லவ் ஜிகாத் போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து, இந்தியாவைச் சட்ட ரீதியாக இந்து நாடாக மாற்றியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதையே காட்டுகிறது. மனுஸ்மிருதி, நாஜி ஜெர்மனியின் சட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் காதலுக்கு எதிரான இனவெறிச் சட்டங்கள் மற்றும் தென்னாப்பிரிக்க வரலாறுகள் அனைத்தும் உலகம் முழுவதும் வெறுக்கப்படுகின்றன.
21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களை இயற்றும் முயற்சியை இளைஞர்களும் பெண்களும் இயக்கங்களை நடத்தி ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும்.