இந்துப் பெண்களைக் காதலித்து முஸ்லீம் மதத்துக்கு மதமாற்றம் செய்வதாக இந்து அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதனை லவ் ஜிகாத் என்று அழைக்கின்றனர்.
எனினும், இதுபோன்ற புகார்கள் ஏதும் வரவில்லை என பாஜகவின் மத்திய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச காவல் துறையினரும் ஏற்கனவே சில வழக்குகள் பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்து மதமாற்றம் செய்வதையோ அல்லது அதற்கு முன்பு மதமாற்றம் செய்வதையோ இந்த சட்டம் தடை செய்கிறது.
தற்போதைய நிலையில், மத்திய அரசு இது போன்ற சட்டங்களைக் கொண்டு வராவிட்டாலும், கடந்த சில ஆண்டுகளாகப் பல மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.
மாறுபட்ட மதமாற்றத் தடை சட்டங்கள்:
மதமாற்றத் தடைச் சட்டத்தின்படி, உத்தரப் பிரதேச மாநில அரசு குறிப்பிட்டுள்ள தண்டனைகள்:
- பெரிய அளவிலான மதமாற்றம் (2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) செய்தால், 3-10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அபராதம்.
- தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த சிறியவர்கள், பெண்கள் அல்லது ஆண்களை மதமாற்றம் செய்தால், 2 -10 ஆண்டுகள் சிறை. ரூ.25 ஆயிரம் அல்லது அதற்குமேல் அபராதம்.
- மற்ற மதமாற்றத்துக்கு 1-5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அபராதம்.
மற்ற மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம்:
ஒடிசாவில் கடந்த 1967 ஆம் ஆண்டு மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. வலுக்கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ, பேராசை காட்டியோ மதமாற்றம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. திருமணம் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதற்குத் தடையில்லை.
இதேபோன்று, மத்தியப் பிரதேசத்தில் 1968 ஆம் ஆண்டும், அருணாச்சலப் பிரதேசத்தில் 1978 ஆம் ஆண்டும், சத்தீஷ்கரில் 2006 ஆம் ஆண்டும், குஜராத்தில் 2003 ஆம் ஆண்டும், ஜார்கண்டில் 2017 ஆம் ஆண்டும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இங்கெல்லாம் வலுக்கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ அல்லது பேராசை காட்டியோ மதமாற்றம் செய்தால் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொண்டு மதமாற்றம் செய்து கொண்டால் தடையில்லை.
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்திலும், 2018 ஆம் ஆண்டு உத்தராகாண்டிலும் 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தில், வலுக்கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ, பேராசை காட்டியோ அல்லது திருமணம் செய்து கொண்டோ மதமாற்றம் செய்தவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உ.பியில் மதமாற்ற நடைமுறை என்ன?:
இந்த அவசரச் சட்டத்தின்படி, மதம் மாற விரும்பும் ஒரு நபர், மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு பிரகடனப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். 60 நாட்கள் நோட்டீஸ் தரப்படும். இரு தரப்பிலிருந்தும் பிரகடனத்தைப் பெற்ற பின், மதமாற்றத்துக்குப் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய, காவல் துறை விசாரணைக்கு மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார்.
60 நாட்கள் நடைமுறைக்குப் பிறகு மதம் மாறிய நபர், பல்வேறு தனிப்பட்ட தகவல்களுடன் பிரமாண பத்திரத்தை மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்யவேண்டும். இதன்பிறகு, அந்த நபர் மதம் மாறியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட மாஜிஸ்திரேட் வெளியிடுவார். அது குறித்த ஆட்சேபனைகளையும் வரவேற்பார். அறிவிப்பு வெளியிட்டு 21 நாட்களுக்குப் பிறகு, மதம் மாறியவர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு ஆஜராக வேண்டும். பிரமாண பத்திரத்தில் கூறியது உண்மை என்பதை நேரில் தெரிவிக்க வேண்டும்.
உ.பியில் தடை செய்யப்பட்ட மதமாற்றங்கள்:
வலுக்கட்டாயமாக, மோசடியாக, தவறான தூண்டுதல் மற்றும் பேராசை மற்றும் ஏமாற்றி மதமாற்றம் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மதம் மாற சட்டம் அனுமதிக்கிறது. அதற்காக அதிகாரியும் சான்று தருகிறார். மதம் மாறும் ஒரு நபர், மீண்டும் பழைய மதத்துக்கே திரும்பலாம்.
இந்த சட்டத்தின்படி, மதமாற்றம் செய்யும் நோக்கத்திலோ அல்லது மதமாற்றம் செய்தோ செய்யப்படும் திருமணம் உடனே ரத்து செய்யப்படும். சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றி மதம் மாறி செய்யப்படும் திருமணத்துக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும்.