தப்ளிக் ஜமாத் மாநாட்டுக்கு வந்த 2,765 வெளிநாட்டினர், விசா விதிமுறையையும், கொரோனா விதிமுறைகளையும் மீறியதாக, 205 வழக்குகளை 11 மாநில அரசுகள் பதிவு செய்திருந்தன.
இதில், குறைந்தது 1,086 தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள் உள்ளூர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பில், துன்புறுத்தப்பட்டதாகவும், அரசியல் காரணங்களுக்காக அரசால் பலிகடா ஆக்கப்பட்டதாகவும்,குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்றும், துஷ்பிரயோக நடவடிக்கை என்றும், அதிகார துஷ்பிரயோகம் என்றும் அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
தப்ளிக் ஜமாத் மாநாடு தொடர்பாக டெல்லியில் மட்டும் 955 வெளிநாட்டினர் மற்றும் தப்ளிக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாட் உள்ளிட்ட 7 இந்தியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
”ஜமாத் என்பது ஒரு மிஷினரி இயக்கமாகும். இது முஸ்லீம்களை தங்கள் மதத்தின் மீது விசுவாசத்தைக் கடைப்பிடிக்க உதவுகிறது. டெல்லியில் உள்ள ஜமாத்தின் உலகளாவிய தலைமையகத்துக்குப் பல நாடுகளிலிருந்து முஸ்லீம்கள் வருவது வழக்கம். இது ஒரு வித்தியாசமான வழக்கு. வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன” என இந்த வழக்கில் தப்ளிக் ஜமாத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான அஷிமா மாண்டியா மற்றும் மந்தாகினி சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக 150 விசாரணைகள், 955 ஜாமீன் மனுக்கள், 5 ரிட் மனுக்கள், 44 விடுவிக்கக் கோரும் மனுக்கள், வழக்கை ரத்து செய்யக் கோரும் 26 மனுக்கள், 80 மறு ஆய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் 15 விசாரணைகள் மற்றும் டெல்லி நீதிமன்றத்தில் 9 மாத தொடர் விசாரணை நடந்தன.
எந்த ஒரு நீதிமன்றத்திலும், ஒரு குற்றச்சாட்டு கூட நிரூபிக்கப்படவில்லை. ஜமாத் நிகழ்ச்சிக்கு வந்த 2,500 பேரை கறுப்புப் பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சகம் வைத்திருப்பது ஒரு தலைப்பட்சமான மற்றும் தன்னிச்சையான செயல் என்று கூறி, வெளிநாட்டைச் சேர்ந்த மலானா அலா ஹத்ராமி என்பவர் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2020 மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் பங்கு பெற்றனர். கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடும் முன்பே இந்த மாநாடு நடந்து முடிந்தது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா தொற்றைப் பரப்பியதாக, வெளிநாட்டு தப்ளிக் ஜமாத் விருந்தினர்கள் மீது அரசு குற்றம் சாட்டியது.
அதேசமயம், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் ரயில் மூலம் தான் கொரோனா வைரஸ் பரவியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. முன் அறிவிப்பு ஏதுமின்றி பிரதமர் மோடி திடீரென பொது முடக்கத்தை அறிவித்ததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் மூலம் தான் கொரோனா பரவியது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதே கருத்தைச் சுட்டிக்காட்டித் தான், இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்கள் தப்ளிக் ஜமாத்தினரை கடந்த சில மாதங்களாக விடுதலை செய்து வருகின்றன.
- கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி 36 வெளிநாட்டினரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. கொரோனா பரவலுக்குப் பின் அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அரசு கூறுவதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
- டிசம்பர் 2 ஆம் தேதி இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கை அதிகார துஷ்பிரயோகம் என்று குறிப்பிட்டது.
- கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி மும்பை அந்தேரி நீதிமன்றம் 28 வெளிநாட்டவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தது. அரசு உத்தரவை வெளிநாட்டினர் மீறியதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
- ஆகஸ்ட் 21 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அளித்த தீர்ப்பில், வெளிநாட்டவர் துன்புறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. 29 வெளிநாட்டு முஸ்லீம்களை விடுதலை செய்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் ரீதியாக இத்தகைய குற்றச்சாட்டைக் கூறி வெளிநாட்டவர் பலிகடா ஆக்கப்பட்டதாக கூறப்பட்டது.
- கடந்த ஜுன் 15 ஆம் தேதி 31 வெளிநாட்டு முஸ்லீம்களை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பில், கொரோனா வைரஸை அவர்கள் தான் பரப்பினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
டெல்லியில் என்ன ஆனது?:
தப்ளிக் ஜமாத் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் முறையாக டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதில் சாட் உள்ளிட்ட 6 இந்திய முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் வெளிநாட்டு முஸ்லீம்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஒரு நாள் கழித்து, கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அரசு உத்தரவை மீறியதாக, டெல்லி சீலாம்பூர் காவல் நிலையத்தில் வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தப்ளிக் ஜமாத் நிகழ்ச்சியில் விதிகளை மீறியதாகக் கூறி, 960 வெளிநாட்டு முஸ்லீம்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து, அவர்களது விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியது. வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது 1946 வெளிநாட்டினர் சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டு பேரிழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஜூன் 5 ஆம் தேதி 2,500 வெளிநாட்டு முஸ்லீம்களை கறுப்புப் பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சகம் சேர்த்தது.
தேசிய அளவில் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பீகார், ஹரியானா, கர்நாடகா, ஜார்கண்ட், குஜராத் மாநிலங்களில் வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
நீண்ட காவல், பாஸ்போர்ட் பறிமுதல்:
மே 19 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெளிநாட்டினர் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற போதிலும், தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். எங்களை விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு டெல்லி அரசை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன்படி, அறிக்கை தாக்கல் செய்த அரசு, வெளிநாட்டவர் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், அவர்களிடம் விசாரணை மட்டும் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், விசாரணையின் போது வெளிநாட்டுச் சட்டத்தின் கீழ், 736 வெளிநாட்டினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மே 28 ஆம் தேதி தப்ளிக் ஜமாத் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு முஸ்லீம்களை வேறு இடங்களில் தங்க வைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி காவல் துறையினர் 48 குற்றப் பத்திரிக்கைகளையும் 11 துணை குற்றப் பத்திரிக்கைகளையும் தாக்கல் செய்தனர். அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளிநாட்டு முஸ்லீம்கள் தீங்கு விளைவிக்கும் நோக்கோடு திட்டமிட்டே மீறியதாகக் குறிப்பிட்டிருந்தனர். தப்ளிக் ஜமாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், மிஷினரியாகவும் இந்தியா வருவதாக விசாவில் குறிப்பிட்டிருந்ததை வெளிநாட்டினர் மீறிவிட்டதாக, டெல்லி காவல் துறையினர் கூறியிருந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 304 ஆவது பிரிவின் கீழும் (ஏறக்குறைய கொலை வழக்கு) வழக்குப் பதிவு செய்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பின்னர் டெல்லி காவல் துறை திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஆதாரமில்லாத வழக்குகள்:
ஜூலை 6 ஆம் தேதி மொத்தமுள்ள 955 வெளிநாட்டு முஸ்லீம்களில் 911 பேரை டெல்லி தலைமை பெருநகர் நீதிமன்றம் விடுதலை செய்தது. 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்தவும் அவர்கள் சம்மதித்தனர். இதனையடுத்து, 911 பேரையும் நாடு கடத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வெளிநாட்டினர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து 8 வாரங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், வெளிநாட்டவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும், அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. அவர்கள் மீது மேலும் 26 வழக்குகளை டெல்லி காவல் துறை பதிவு செய்தது. ஜூலை 31 ஆம் தேதி உயர் நீதிமன்றத்திலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மற்ற நீதிமன்றங்களிலும் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே, புதிதாக டெல்லி காவல் துறை பதிவு செய்த வழக்குகளில் ஆதாரம் இல்லை என்று கூறி, 26 வழக்குகளையும் 24 நாட்கள் கழித்து டெல்லி தலைமை பெருநகர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என மாஜிஸ்திரேட குர்மோஹினா கவுர் குறிப்பிட்டிருந்தார்.
44 வெளிநாட்டு முஸ்லீம்களில் 8 பேரை நீதிமன்ற விசாரணையிலிருந்து மாஜிஸ்திரேட் விடுவித்தார். குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது போல், இவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார்.
டிசம்பர் 16 ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுத்த காலக்கெடுவைவிட, இரண்டு மடங்கு அதிகம் எடுத்துக் கொண்ட டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 36 பேரை விடுதலை செய்து, பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்தது.
அரசின் பொய்க் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி, நீதியை நிலை நாட்டிய நீதிமன்றங்கள் வெளிநாட்டவரை மட்டும் காப்பாற்றவில்லை. உலக அளவில் நம் மானத்தையும், மரியாதையையும் காப்பாற்றியுள்ளன.