டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நாடே தேசிய அளவில் கதாநாயகனாகக் கொண்டாடும் போது, அவரது மையக்கருத்துகளை மறந்துவிடக்கூடாது. சாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை, அவரது கருத்துகள் முக்கிய பங்காற்றும்.
சமீபகாலமாக, அம்பேத்கரை நாடு முழுவதும் பெருமையுடன் கொண்டாடுகின்றனர். இதன்மூலம் நாட்டின் தேசியவாத அடையாளங்களில் அவரும் ஒருவராகியுள்ளார்.
இந்து சமூக சீர்திருத்தவாதியாகவும், இந்து கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவும் அம்பேத்கரை முன்னிறுத்த இந்துத்துவா அமைப்புகள் முயன்று வருகின்றன. அதேசமயம், இடதுசாரி கல்வியாளர்களோ, அம்பேத்கரை தேசத்தைக் கட்டமைத்தவர் என்றும், தத்துவார்த்த மற்றும் அறிவுஜீவியாகவும் அடையாளப்படுத்த விரும்புகின்றன. அம்பேத்கரை தலித் என்ற சிறு வட்டத்துக்குள் அடைக்காமல், அவரை சிறந்த மனித தளத்தில் வைத்தோ அல்லது உலகளாவிய தத்துவவாதியாகவோ பார்க்க வேண்டும்.
அம்பேத்கர் தலித் தலைவரோ, சமூக நீதி அரசியலை மட்டுமே முன்னெடுத்தவரோ மட்டுமல்ல. உழைக்கும் வர்க்கத்தினர் மீதான கரிசனம் மற்றும் மார்க்சிய சோசலிச சித்தாந்தங்களைக் கொண்ட தலைவராக இருந்தார். வைசிராய் கவுன்சிலில் அம்பேத்கர் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது தான், 8 மணி நேர வேலை, சமமான சம்பளம் மற்றும் பிரசவ கால விடுப்பு ஆகிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்ததாக, இந்தியாவில் பெண்கள் விடுதலையைப் பொருத்தவரை, அம்பேத்கரின் பங்கு மதிப்பிட முடியாதது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியாவை நவீன ஜனநாயக குடியரசாக மாற்றுவதற்கான ஆளுமையையும் அரசியல் பார்வையும் அவர் பெற்றிருந்தார். இயற்கையாகவே அறிவுஜீவியாக இருந்ததால், குடியுரிமை, விடுதலை, சமத்துவம் மற்றும் நீதி போன்ற முக்கிய அரசியல் விஷயங்களைச் சிந்திப்பவராகவே இருந்தார். அம்பேத்கரை தேசிய அளவில் கதாநாயகனாகவோ, அரசியல் தத்துவவாதியாகவோ உருவாக்குவதற்கு, சமூக மற்றும் அரசியல் குறித்த விவாதங்கள் அவரது ஆயுட்காலம் முழுவதும் நடைபெற்று வந்தது. தீண்டாமையிலிருந்து தலித்துகளை விடுதலை செய்யவும், பிராமணிய சாதி முறையின் அடக்குமுறையை எதிர்த்தும் அவர் போராடியதால், அரசியல் அல்லது அறிவுஜீவியாகத் திகழ்ந்தார்.
தேசத்தைக் கட்டி எழுப்புதல், அரசியலமைப்பு அல்லது நெறிமுறைச் சிக்கலைக் காட்டிலும், சாதிய சமுதாயத்தின் மிருகத்தனமான செயல்பாடுகளைச் சரி செய்வதில் அவர் உறுதியுடன் நின்றார். சாதி மற்றும் தீண்டாமை குறித்த அடிப்படைக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு, அவரை தேசிய கதாநாயகனாக மாற்றினால், அது அம்பேத்கருக்கும் அவரது அறிவுசார் திறனுக்கும் அவமானமாக இருக்கும்.
சாதி என்பது கொடுமையான விஷயமாக இன்றைய இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையிலும் கூட இருக்கிறது.
ஒரு வழக்கமான மத நெறி, சாதி அடிப்படையில் மனிதர்களிடையே முறையான சமத்துவத்தை அனுமதிக்காது. அதற்குப் பதிலாக, குடும்பம் மற்றும் உறவு நிலைகளில் பிரிவினையையே ஏற்படுத்தும். ஒவ்வொரு சாதியின் பெருமையும், சமூக அந்தஸ்தும் திறமை, தொழில் திறன் மற்றும் பொருளாதார இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. அவை, பிறவியிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
சாதி அமைப்பு நலிவடைந்ததைக் கண்காணிப்பதில் அம்பேத்கர் முக்கிய பங்காற்றினார். சமூகப் பாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் அரசியலிலிருந்து தலித் மக்களை விலக்கி வைப்பதை எதிர்த்தும், அதிலிருந்து விடுதலைப் பெற்றுத் தரவும் வாழ்நாள் முழுவதும் போராடினார். அவர் நவீனத்துவத்தின் சிறந்த சாம்பியனாக இருந்தார். தொழில் வளர்ச்சி, ஜனநாயக அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் குடியரசு விழுமியங்கள் ஆகியவை, தீண்டத்தகாதவர்களின் விடுதலையை உறுதி செய்யும் அருமையான கட்டமைப்புகளை உருவாக்கும் என்று நம்பினார்.
நவீன பொது அமைப்பு மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும், சாதிகள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் என்றும் நம்பினார். அரசியலமைப்பின் படி, நவீன அமைப்புகள் பாதுகாக்கப்படுவதால் தலித்துகள் நவீன குடிமக்களாக வெளிப்படுவார்கள் என்றும் சமூக அச்சங்கள் இன்றி, ஜனநாயகத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் கருதப்பட்டது.
எனினும், நவீன மதச்சார்பற்ற வாழ்க்கையின் இந்த முற்போக்கான மதிப்பீட்டின் மீது அம்பேத்கருக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, பிராமணிய சமூகத்துக்கும் புதிய மதச்சார்பற்ற அரசியல் கோளத்துக்கும் இடையேயான பிளவை, அவர் அடையாளம் காட்டினார்.
இந்திய குடியரசின் தொடக்கத்தில் அவர் 2 விஷயங்களை ஒப்புக் கொண்டார்.
” இன்று இந்தியர்கள் 2 வெவ்வேறு சித்தாந்தங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். அவர்களது அரசியல் லட்சியம், அரசியலமைப்பின் முன்னுரையில் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. அவர்களின் சமூக லட்சியம் என்பது, அவர்களது மதத்தில் பொதிந்துள்ளது. அவர்களையே நிராகரிக்கிறது.
இதனைச் சீரமைக்காவிட்டால், புதிய மதச்சார்பற்ற உலகத்தின் புரட்சிகர மரியாதையை, இத்தகைய சமூக ஒழுங்கு அழித்துவிடும் என்று அவர் எச்சரிக்கிறார். இந்து சமுதாயத்தில் தீவிர சீர்திருத்தத்தைச் செய்யாவிட்டால், ஜனநாயக வளர்ச்சியை உருவாக்குவது முற்றிலும் கடினமாகிவிடும். மிகவும் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட மனிதநேய நற்பண்புகளுக்கும் நோக்கங்களுக்கும் நவீன அரசியலமைப்பில் சமூக ஒழுங்கு துணைபுரிய வேண்டும். சாதிய ஒழுங்கு மனிதாபிமான சமூக முறையாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் இணையான தகுதி, சுதந்திரம் மற்றும் வாழ்க்கை லட்சியத்தை அடைய அதிகாரம் வழங்குவதை உறுதியளிக்க வேண்டும்.
புத்த மதத்தின் தத்துவம் சிறந்த நெறிமுறை சான்றிதழ்களைக் கொண்டுள்ளதாகவும், நவீன சமுதாயத்தின் நெறிமுறை அடித்தளங்களைப் புத்த மதத்தால் மட்டுமே நிரப்ப முடியும் என அம்பேத்கர் நம்பினார். புதிய சமூக மற்றும் மத ஒழுங்குக்கு வழிகாட்டும் கொள்கையாக அவர் சகோதரத்துவத்தை வழங்கினார். கடந்த 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி லட்சக்கணக்கானோருடன் புத்த மதத்துக்கு மாறினார். சமூக மற்றும் மதமாற்றத்தைப் பற்றி விவாதிக்கும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். சாதிய ஒழுங்கை நிராகரிப்பதே மதமாற்றத்தின் முக்கிய அம்சமாகும்.
சுதந்திரத்துக்குப் பிறகு, முற்போக்கான சட்டங்கள், உறுதியான கொள்கைகள் மற்றும் மதச் சீர்திருத்தங்கள் காரணமாக சாதகமான மாற்றங்களை நாடு கண்டது. நகரமயமாக்கலும் கல்வியும் தீண்டத்தகாதவர்களாக இருந்தவர்களை, குடியுரிமை அந்தஸ்துக்கு உயர்த்தியது. 1990 ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலகட்டத்தில், தலித்துகளின் வர்க்க மற்றும் சமூக நிலைகள் மேம்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்துக்குள் அவர்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். தலித்துகள் தற்போது செல்வாக்குடன் உள்ளனர். இருந்தாலும், இவை அனைத்து தலித் மக்களுக்கும் சென்றடையவில்லை என்பதே உண்மை.
தலித் சமுதாயம் அதிக மக்கள் தொகை கொண்டவர்களாக இருக்கிறது. ஆனால், அவர்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அரசியல் சாசன பலன்களைப் பெற்றுள்ளார்கள். பெரும்பாலோர் இன்னும் குடிமக்களாக முயன்று கொண்டிருக்கிறார்கள். மிருகத்தனமான கடந்த காலத்தின் மரபு மற்றும் அவர்களின் இழிவான உழைப்பின் நினைவுகள், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்னும் அவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் சாதிக் கொடுமைகள் மற்றும் வன்முறையை எதிர்கொண்டு, பெரும்பாலான தலித் மக்கள் இன்றைக்கும் பெரிய அளவில் பலனை அனுபவிக்காமல் உள்ளனர். அவர்கள் நிலையைக் கண்டுகொள்ளாமல், கிரிமினல் தனமான அலட்சியத்தை அரசுகள் காட்டுகின்றன.
அதிகாரத்தின் வழக்கமான ஒரு சமூக அமைப்பில், தலித் நபர் சம உரிமை கொண்ட நவீன குடிமகன் என்ற கருத்து இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பொருளாதாரம் மற்றும் கல்வி அந்தஸ்தைத் தலித்துகள் பெற்றிருப்பதால், சாதியப் பாகுபாட்டை மாற்ற முடியும் என்பதை மேலாதிக்க சாதிகள் ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். எனவே, மனித உரிமைகள், சமூக கவுரவம் மற்றும் அரசியல் வலியுறுத்தல் போன்ற தலித்துகளின் கூற்றுகள், பாரபட்சமான நடைமுறைகள் மற்றும் மிருகத்தனமான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. திருமணம், சடங்குகள் மற்றும் மத மரபுகள், வேலை வாய்ப்புகளில் தலித்துகள் மீது வெறுப்புணர்வு காட்டப்படுகிறது.
சாதியக் கொடுமையைப் பொறுத்தவரை, 3 பிரச்சினைகளில் தான் தலித்துகள் மீது மேலாதிக்க சாதிகள் வன்முறை கட்டவிழ்த்துவிடுகின்றன.
முதலாவதாக, ஆளும் உயர் வகுப்பினரின் மரியாதைக்குத் தலித்துகளால் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பார்க்கப்படுகிறது. உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் தலித் இளைஞனுக்குக் காதல் ஏற்பட்டால், நிலப்பிரபுத்துவ சக்திக்கும், சமூக அந்தஸ்துக்கும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, பொருளாதார உரிமை, நில உரிமை அல்லது நியாயமான கூலியைத் தலித்துகள் கோருவது, கிராமப்புற நிலச் சுவான்தார்களுக்கு சவாலாக இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு பீகாரில் நிலச் சுவான்தார்களுக்கு எதிராகத் தலித்துகளை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் போராட வைத்தனர். எனினும், சாதிய மோதல் மற்றும் வன்முறைப் படுகொலைகளால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
மூன்றாவதாக, பொது நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ள தலித்துகளுக்கு அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம். எனினும், இன்றை நவீன நகர்ப்புற நிறுவனங்களில்கூட, சாதியப் பாகுபாடு, மற்றும் புறக்கணிப்பைத் தலித்துகள் எதிர்கொள்கிறார்கள். பெருமைமிக்க 2 உயர் கல்வி நிறுவனங்களில் படித்த ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தாத்வி ஆகியோரின் பயங்கரமான முடிவுகள், தண்டிக்கப்படாத இத்தகைய நிறுவனங்களின் கிரிமினல் நடவடிக்கைகளுக்குச் சாட்சியம் அளிக்கின்றன.
தலித் பெண்கள் எரிக்கப்படும் மோசமான சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகரித்துக் கொண்டே போகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மகாராஷ்ட்டிராவின் பண்டாரா மாவட்டம் கைர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்படுவதற்கு முன்பு, அந்த குடும்பத்தின் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தெருவில் நடக்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்களுக்குப் பிறகு தான் காட்சி ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. இந்த கொடுமையைக் கண்டித்து பெரும்பாலான பெரு நகரங்களில் தலித் மக்கள் போராட்டம் நடத்தினர். உலக அளவில் இந்த சம்பவம் செய்தியான பிறகு ஏற்பட்ட அழுத்தத்தால், வேறு வழியின்றி அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
2016 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணத்துறையின் தரவுகளின்படி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களே அதிகம் என்பது தெரியவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 4 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதா அந்த தரவுகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றன. தலித்துகளுக்கு எதிரான சாதியக் கொடுமைகளைத் தண்டிக்க அரசியல் சாசனப்படி அதிகாரம் இருந்தும், அரசுகள் கண்டுகொள்வதில்லை.
இருப்பினும், நாடு அதன் குடியரசு விழுமியங்களைக் கொண்டாடுகிறது. தேர்தல் ஜனநாயக நடைமுறைகளில் பெருமளவில் பங்கேற்கிறது. சமூக மற்றும் கலாச்சார சூழல், அதன் வழக்கமான பழமைவாத அவதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தலித்துகளின் நிலைமை இன்றைக்கும் மோசமானதாகவே இருக்கிறது. அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன. இந்து சமுதாயத்தின் வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்ய பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு உத்வேகமான போரை நடத்தினார். எந்தவொரு சமூக-ஒழுங்கிலும் செல்லுபடியாகும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை, அடித்தள நெறிமுறைக் கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். ஒரு சகோதர சமூக வாழ்க்கையைப் பொறுத்தவரை, உயர்ந்த-தாழ்ந்த சாதி இணைப்புகள் நிறுத்தப்பட வேண்டும். பாரபட்சமற்ற கலாச்சார மற்றும் சடங்கு விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.
பிராமணிய மேலாதிக்க சமுதாயத்தின் குற்றவியல் பிடி அனுமதிக்கப்படாது என்பது, தலித்துகளின் போராட்டங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான இதுபோன்ற அனைத்துப் போர்களிலும், அம்பேத்கரைப் பிரதான ஆதாரமாகத் தலித்துகள் கருதுகின்றனர். அவரது சிலை, அவரது பெயர், உருவப்படம் ஆகியவை, தலித்துகளின் வலியுறுத்தலின் அடையாளங்களாக மாறும்.
சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மத வற்புறுத்தல்களிலிருந்து தலித்துகள் விடுதலை அடையாத வரை, சமூக நீதிக்கான போர்களுக்கு அம்பேத்கர் தேவைப்படுவார்.