இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை ஏன்?
ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தராததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை, வெளியே கடனைப் பெற்று சரி செய்து கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான வாய்ப்புகள் என்ன?
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி 41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மாநிலங்களுக்குத் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை எவ்வாறு தருவது என்ற கேள்விக்கு தீர்வு காண்பது அந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. கடந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை மற்றும் சமீபத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஏற்பட்ட கடும் பொருளாதார பாதிப்பு குறித்து விவாதிப்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, நடப்பு நிதியாண்டில் ஏற்பட்ட ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டை எதிர்கொள்ள, 2 வழிகளில் மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.
ஜிஎஸ்டி என்றால் என்ன?
அரசியல் சாசனத்தில் 101 ஆவது திருத்தம் தேசிய அளவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை விதிக்க சட்ட அங்கீகாரம் அளிக்கிறது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உள்ளூர் அளவிலான மறைமுக வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியதால், ஜிஎஸ்டியை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வது சாத்தியமானது.
ஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி (மாநில ஜிஎஸ்டி) மற்றும் ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி) ஆகியவற்றின் ஒரு பங்கை மாநிலங்கள் பெறும் அதே வேளையில், புதிய நேரடி வரிவிதிப்பில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை, 2022 ஆம் ஆண்டு இறுதி வரை ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து வழங்குவது என்றும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், ரூ. 65 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே இழப்பீட்டு நிதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் வாங்குவதால் சாத்தியமாகுமா?
ஜிஎஸ்டியில் எந்தவொரு வருவாய் குறைவையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், இதற்கான ஒரு தீர்வை வகுக்க வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில் தான் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது. மத்திய நிதி அமைச்சகத்துடன் இணைந்து சிறப்பு சாளர முறையில் மாநிலங்கள் நேரடியாக வெளியில் கடன் பெறுவது குறித்தும் ஜிஎஸ்டி கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
ரூ. 2 .35 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு இருக்கும் நிலையில், வெறும் ரூ. 97 ஆயிரம் கோடிகள் மட்டுமே வருவாய் குறைவு என மத்திய அரசு வாதிட்டது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 38 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு என்பது கடவுளின் செயலால் (கொரோனா பரவல்) ஏற்பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முதல் யோசனையாக, மாநிலங்களின் கடன் பத்திரங்களை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ரூ. 97 ஆயிரம் கோடிகள் திரட்டுவது, இவ்வாறு வாங்கும் கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஏற்பது, ஒரு பகுதியை மானியம் மூலம் மத்திய அரசு தாங்கிக் கொள்வது போன்ற வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலங்களின் இந்த கூடுதல் கடன் மாநிலத்தின் கடனின் ஒரு பகுதியாக கணக்கிடப்படாது. அசல் மற்றும் வட்டியை ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகும் செலுத்துவது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இரண்டாவதாக, கடன் பத்திரங்களை மாநில அரசுகளே விற்று, ஒட்டுமொத்த ரூ. 2 .35 லட்சம் கோடிகள் ரூபாயை திரட்டிக் கொள்வது, வட்டியை மாநில அரசுகளே செலுத்துவது, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து அடிப்படை செலவுகளை மட்டும் தருவது என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை ஏன்?
மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இரண்டாவது ஆலோசனையை நிராகரித்துவிட்டன. ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசே கடன் பெற்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டும் என மாநில அரசுகள் உறுதியாக தெரிவித்தன.
பிரதமருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு அளிக்கும் என்று உத்தரவாதம் அளித்ததால் தான் ஜிஎஸ்டியை ஏற்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவினால் மட்டும் பெரும் வருவாய் இழப்பை சந்திக்கவில்லை. நோயை தடுக்கவும் மாநில அரசு போராடி வருகிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை அளித்தால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் தமிழக அரசு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் கடன் வாங்கினால் பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற மத்திய அரசின் வாதத்தை இந்த மாநில அரசுகள் நிராகரித்துவிட்டன. மேலும், அரசின் பற்றாக்குறை மற்றும் கடன் பெறும் அளவை உலக அளவிலான கடன் மதிப்பீட்டு ஏஜென்ஸிகள் கண்காணிப்பதையும் மாநில அரசுகள் சுட்டிக்காட்டின.