முன்னுரை:
பாபர் மசூதி & ராம ஜென்ம பூமி பிரச்சினையைப் பொறுத்தவரை, அது தோற்றம் கொண்டது 22.12.1949. அது விசுவரூபம் எடுத்துப் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது 6.12.1992. இந்த இரு நாள்களுமே நம் நாட்டைப் பொறுத்தவரை கருப்பு நாள்களாகும்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் நாளை (ஆகஸ்ட் 5, 2020) ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்றது உச்சநீதிமன்றம். அதேநேரத்தில் அங்கே ராமர் கோயில் கட்ட அனுமதித்ததும் உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பை எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்ட 20 கோடி (உ.பி.யில் மட்டும் 3 கோடியே 84 லட்சம்) இஸ்லாமிய சகோதரர்களின் சகிப்புத்தன்மையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ! தர்மம் மறுபடியும் வெல்லும் !!
6 டிசம்பர் 1992 – அயோத்தியில் நடந்தது என்ன ?
1992டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதுபற்றி விசாரிப்பதற்காக நீதிபதி மன்மோகன் சிங் லிபரான்’ ஆணையம் அமைக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குக் காரணமான சூழல்கள் பற்றி விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை தரவேண்டும் என்று நீதிபதி லிபரான் ஆணையத்திற்கு ஆணையிடப் பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் 45க்கும் மேற்பட்டமுறை நீட்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட கடந்த 17 ஆண்டுகளாக, பாபர் மசூதி இடிப்பு பற்றி விசாரணை நடத்திய நீதிபதி லிபரான், பாபர் மசூதி இடிப்பதற்குக் காரணமாக அமைந்த சூழல்கள் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும் தமது 1029 பக்க அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை அறிக்கையில் நீதிபதி லிபரான் கூறியிருக்கும் முடிவு ஆச்சரியமளிக்கவில்லை . ஆனால், அவரது முடிவு மிகவும் துணிச்சலானது ஆகும். ‘பாபர் மசூதி இடிப்பு என்பது ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனா, பாரதீய ஜனதா ஆகிய அமைப்புகளின் தலைவர்களால் நன்றாகச் சிந்தித்துத் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி நிறைவேற்றப்பட்ட கூட்டுப் பொது நடவடிக்கையின் ஒரு பகுதிதான்’ என்று அதிரடியாக லிபரான் கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக, பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் துணை அமைப்புதான்’ என்பதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
தமது துணிச்சலான விசாரணையின்மூலம் அதிரடியான பல உண்மைகளை நீதிபதி லிபரான் வெளிக்கொண்டு வந்தபோதிலும், அதற்குக் காரணமானவர்கள் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், குற்றத்தின் தன்மைக்குப் பொருத்தமற்றதாக உள்ளது என்பதுதான் துரதிருஷ்டமான விஷயமாகும்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததன்மூலம், மதப் பேரழிவின் விளிம்புக்கு இந்தியாவைத் தள்ளியதாக 68பேர்மீது குற்றஞ்சாட்டியுள்ள நீதிபதி லிபரான், இதுவரை விசாரிக்கப்படாமல் தப்பியவர்கள் மீது வழக்கு தொடரப்படவேண்டும் என்றோ, பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களின் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும் என்றோ பரிந்துரை செய்யாததுதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை விளக்குவதற்காக, அது ஒரு பொது நடவடிக்கை என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ள நீதிபதி லிபரான், குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.
யுகோஸ்லாவியா இனப்படுகொலைகள் தொடர்பான சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயம் 1999 இல் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, பெரிய குற்றங்கள் நடைபெறும்போது, அதில் ஆட்சியாளர்களுக்குத் தொடர்பு இல்லை என்றாலும், பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுக்காவிட்டாலும் குற்றம்தான் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதே கொள்கையை நீதிபதி லிபரானும் பின்பற்றி, பாபர் மசூதி இடிப்புக்கு மறைமுறைமாகத் துணைபோன அரசியல்வாதிகள், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டிருந்தால், ஒட்டுமொத்த இந்தியாவின் பாராட்டையும் அவர் பெற்றிருந்திருப்பார். ஆனால், அது போன்ற எந்த நடவடிக்கையையும் நீதிபதி லிபரான் எடுக்கவில்லை .
அரசியலும் மதமும் ஒன்றோடொன்று கலக்கக்கூடாது என்று அறிவுரை கூறிய ஆணையம், வேறு சில பரிந்துரைகளைமட்டுமே அளித்துவிட்டு, தனது கடமை முடிந்துவிட்டதாகத் தெரிவித்து விட்டது. மாறாக, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நியாயம் கிடைக்கவோ, இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலங்களில் நடப்பதைத் தடுக்கவோ எந்தப் பரிந்துரையையும் நீதிபதி லிபரான் முன்வைக்கவில்லை.
எனினும், இந்தியாவில் மற்ற காவல்துறை விசாரணைகளோ, அல்லது நீதித்துறை விசாரணை அமைப்புகளோ செய்யாத அளவுக்கு, ‘பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்ட நடவடிக்கை’ என்று நீதிபதி லிபரான் துணிச்சலாகக் கூறியிருப்பதால், அவர்மீது அதிக அளவில் குறைகாணத் தேவையில்லை.
விசாரணை அறிக்கையின் 10வது பிரிவில், பாபர் மசூதி இடிப்புக்கான சதித்திட்டம் பற்றி நீதிபதி லிபரான் உறுதியாகவும் தெளிவாகவும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
“பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்பட்ட கூட்டுப் பொது நடவடிக்கை என்பது எனக்கு முன்பாகச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விநய்கட்டியார், பரமஹன்ஸ் ராமச்சந்திரதாஸ், அசோக் சிங்கால், சம்பத்ராய், சுவாமி சின்மயானந்தா, எஸ்.சி. தீக்க்ஷித், பி.பி.சிங்கால், ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர் ஆகியோர் தலைமையில்தான் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆர். எஸ். எஸ். இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை, உள்ளூர்த் தலைவர்களான இவர்கள்தான் நிறைவேற்றினார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களும் ஆர். எஸ். எஸ். தலைமையால் இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினர். எனவே, தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று இவர்கள் தப்பித்துவிட முடியாது. அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்காக நடைபெற்ற கரசேவைக்கு இவர்கள் ஆதரவு தெரிவித்ததுடன், மசூதி இடிக்கப்பட்டபோது அங்கு இவர்கள் இருந்ததும் மறுக்கமுடியாத அளவுக்கு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
“ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனா ஆகிய கட்சிகளும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து, அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு, அங்கு இராமர்கோயில் கட்டுவதற்காக அப்போது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்குடன் கூட்டணி அமைத்து, டிசம்பர் 6-ஆம் தேதி கட்சிப் பொதுநடவடிக்கையை மேற்கொண்டனர்” என்று கூறி நான் நிறைவு செய்கிறேன். “ஜனநாயகத்தை அழிப்பதற்காகத் திட்டமிட்டு அரசியலையும் மதத்தையும் கலந்து, நாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்பட்டனர்” என்று நீதிபதி லிபரான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இந்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வன்முறைக் கும்பல் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டிச் செயல்படுத்திய சதித்திட்டத்தின் உச்சகட்டம்தான் பாபர் மசூதி இடிப்பு” என்றும் நீதிபதி லிபரான் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, “எதிர்காலத்தில் அரசியல் பயனுக்காக, தங்களை மதச்சார்பற்ற தலைவர்களாகக் காட்டிக்கொள்வதற்காக, சில தலைவர்கள் திட்டமிட்டே பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இவ்வாறு நிறுத்தப்பட்ட அரசியல் தலைவர்களாக இருக்கலாம்.
சங்பரிவார் அமைப்புகள் ஏற்படுத்தித் தந்த பாதுகாப்பு வளையத்தின் உதவியுடன், பாபர் மசூதி இடிப்பில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் கூறலாம். ஆனால், அரசியல் மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பமுடியாது” என்றும் நீதிபதி லிபரான் தமது விசாரணை அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதில் தொடர்புடைய பல கிரிமினல்கள் இப்போது இறந்திருப்பார்கள். இன்னும் பலர் சட்டத்தால் எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் இருக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பார்கள். பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப் பரிந்துரை வழங்காததற்காக நீதிபதி லிபரானை இந்த நாடு எவ்வளவு விமர்சித்தாலும் அது ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் அவரது விசாரணை அறிக்கை, எதிர்காலத்தில் எந்த ஒரு விசாரணை அமைப்புக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
பாபர் மசூதி இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதியாக இருந்தால், லிபரான் விசாரணை ஆணையத் தகவல்களின் அடிப்படையில் இவ்வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யலாம்; வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தலாம். அதன்மூலம் இந்த வழக்கில் அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்யலாம்.
பாபர் மசூதி இடிப்பு :
குற்றவாளிகளை அடையாளம் காட்டிய
லிபரான் அறிக்கை !
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அங்குப் பொறுப்பிலிருந்த நிர்வாகத்தை லிபரான் ஆணையம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.
பாபர் மசூதி இடிப்பில் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தின் பங்கு பற்றி நிர்வாகம்’ என்ற தலைப்பில் 45 பக்கங்களுக்கு நீதிபதி லிபரான் விளக்கியுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கும், அதன்பின்னர் பாரதீய ஜனதா கட்சி தன் அரசியல் திட்டத்தை நிறைவேற்ற உத்தரப்பிரதேச அரசின் அனைத்துத் துறைகளும் துணைபோயின என்றும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச காவல்துறையினரும் நிர்வாகத்தினரும் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என்றும் நீதிபதி லிபரான் தமது அறிக்கையில் பல்வேறு இடங்களில் கூறியுள்ளார்.
“மாநில நிர்வாகமோ அல்லது அதிகாரிகளோ அரசியல் சட்டப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட பணியைச் செய்யாமல் விலகிச்செல்வது சரியல்ல. உத்தரப்பிரதேச உயர் அதிகாரிகள் தங்களது தவறுகளால் அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் பாதுகாப்பையும், உத்தரப்பிரதேச மக்களின் பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்கி விட்ட னர்.
பாபர் மசூதிக்குப் பாதுகாப்பு தருவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்தும் பொறுப்பை ஏற்க உத்தரப்பிரதேச அரசு மறுத்துவிட்டது. அதுமட்டுமன்றி, கூட்டாட்சித் தத்துவத்தைக் காரணம் காட்டி இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதையும் உத்தரப்பிரதேச அரசு தடுத்துவிட்டது.
காவல்துறையினரும் அரசு நிர்வாகத்துறையினரும் தங்களது ஆட்சியாளர்களின் ஆணையை மீறிச் செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் அனைவரும், பாரதீய ஜனதா கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே, அவர்களை அந்தப் பதவிகளில் முதலமைச்சர் கல்யாண்சிங் அமர்த்தினார். தெரிந்தோ, தெரியாமலோ இந்து மதத்தின்மீது தீவிர நம்பிக்கை கொண்டவர்களும், இந்திய விடுதலையின் போது பாகிஸ்தான் பிரிந்ததைக் கடுமையாக எதிர்த்தவர்களும் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அதன் விளைவாகச் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்கவோ, அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான மதவெறித் தாக்குதல்களைத் தடுக்கவோ, அல்லது வன்முறைக் கும்பல்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தடுக்கவோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், பாபர் மசூதி இடிப்பதற்காக, அயோத்திக்குக் கரசேவைப் பயணம் மேற்கொண்ட கரசேவகர்களுக்கு ஃபைசாபாத்தில் தொடங்கி அயோத்தியாவரை எங்கும் எந்த விதமான தடையும் ஏற்படுத்தப்படவில்லை.
பாபர் மசூதி அமைந்திருந்த பகுதியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகள் ஆர்.எஸ். எஸ். தொண்டர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், விதிகளை மீறி, கரசேவகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை ஆர்.எஸ். எஸ். தொண்டர்களிடமே உத்தரப்பிரதேச அரசு வழங்கியிருந்தது. அதுமட்டுமன்றி, பாபர் மசூதியைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த உயரமான பாதுகாப்புச் சுவரைச் சுற்றிலும் மண்ணைக்கொட்டி கரசேவகர்கள் எளிதாகச் செல்வதற்கு உத்தரப்பிரதேச அரசு வகை செய்திருந்தது” என்றும் நீதிபதி லிபரான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கரசேவைக்காகச் செல்லும் தொண்டர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் எடுத்திருந்தார். எந்தச் சூழலிலும் கரசேவகர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்று எழுத்து பூர்வமாகவே கல்யாண்சிங் ஆணையிட்டிருந்தார். ஒட்டுமொத்தத்தில் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகம், பாபர் மசூதியைக் காக்கும் முக்கியமான பணியிலிருந்து தன்னைத்தானே ஓரங்கட்டிக்கொண்டது. இதன்மூலம் நிர்வாகம் என்பது தன்னை அர்த்தமற்றதாக்கிக்கொண்டது.