இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பயனடையும் வகையில் நரேந்திர மோடி அரசாங்கம் பணத்தைச் செலவழித்துச் சிறப்பாக பணியாற்றியிருப்பதாக, கடந்த திங்களன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த பேச்சில் உண்மை இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை ஒதுக்கியதா? எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்பட்டது போன்ற கேள்விகள் எழுகின்றன.
மத்திய அரசு உறுதியளித்தபடி, முக்கியத் துறைகளுக்கு எவ்வளவு பணத்தைச் செலவழித்திருக்கிறது என்பதும், குறிப்பிட்ட நலத்திட்டங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கிறது, வரும் ஆண்டில் எவ்வளவு செலவு செய்ய அரசு உறுதி அளித்துள்ளது என்பதைப் பார்ப்போம்…
1. கல்வி
வரும் நிதியாண்டில் கல்வித் துறை அமைச்சகத்துக்கு 93 ஆயிரத்து 224 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தொகையை விட இது குறைவு. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். கடந்த ஆண்டின் பெரும் பகுதி பள்ளிகள் மூடப்பட்டதோடு, ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. முற்றிலும் டிஜிட்டல் மயமானதால் பலரும் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தனர்.
பல வீடுகளில் வேலை இழப்பைச் சந்தித்தனர். பொது முடக்கம் காரணமாகப் பல மாணவர்கள் படிப்பை விட்டுவிட்டு, வேலை தேட ஆரம்பித்தனர். அனைத்துப் பள்ளிகளையும் மீண்டும் திறந்து திறம்படச் செயல்படவைக்கக் கல்வி அமைச்சகத்துக்குக் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. அதோடு, இடையில் படிப்பைக் கைவிட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர வேண்டிய பொறுப்பும் உள்ளது.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நிதியை ஒதுக்காமல், கல்வி அமைச்சகத்துக்கு இந்த ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது தான் உண்மை. கடந்த 2 ஆண்டுகளைவிட, திட்டமிடப்பட்ட செலவினம் இந்த குறைவாக உள்ளது.
2. சுகாதாரம்
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அழுத்தம் நிறைந்த ஆண்டாக மாறியது. இந்த ஆண்டு பெரும் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படும் துறை சுகாதாரத்துறை. சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான நிதி அமைச்சரின் பேச்சு நாம் நம்பும் அளவுக்கு இல்லை. ஒதுக்கப்பட்ட 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் ஒரு சுகாதாரத் திட்டத்துக்கு என்றும், இந்த தொகை 6 ஆண்டுகளுக்குப் பரவலாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனைத்துத் திட்டங்களுக்கும் 73 ஆயிரத்து 932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீட்டுத் தொகையை (ரூ. 82,928 கோடி) விட இது குறைவானதாகும். ஆனால், 2020-21 ஆம் ஆண்டில் அரசு செலவு செய்ய திட்டமிட்டுள்ள தொகையை விட அதிகம்.
3. விவசாயம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான அரசாங்கத்தின் இறுக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், விவசாயத்துக்கான ஒதுக்கீடுகள் குறித்து ஆர்வத்துடன் எதிர்ப்பாக்கப்பட்டது. நடைமுறையிலிருந்த கொள்முதல் முறையை ரத்து செய்ய அரசு முயல்வதாக விவசாயிகள் கூறிவரும் நிலையில், விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
எனினும், கடந்த ஆண்டில் விவசாயத்துறை செலவினமாக ரூ. 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த ஆண்டு விவசாயத்துறைக்கான செலவினம் கடந்த ஆண்டைவிடக் குறைவாக உள்ளது. ஆனால், திருத்தப்பட்ட செலவினத்தை விட, ரூ.7 ஆயிரம் கோடி அதிகமாகும்.
4. தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்
கொரோனா பொது முடக்கம் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதன் காரணமாகத் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
திட்டமிட்ட தொகையை விட அதிகத் தொகையை, கடந்த ஆண்டு இந்த திட்டத்துக்கு மத்திய அரசு செலவழித்தது. இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பல ஆய்வுகளில் சுட்டிக்காட்டியபடி, மாநிலங்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும். எனினும், கொரோனா பிரச்சினை இல்லாத நிலையில், சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்ட செலவினம் கடந்த ஆண்டு போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை.
5. தூய்மை இந்தியா திட்டம்
மோடியின் மிகவும் பிரபலமான தூய்மை திட்டத்தின் கீழ், இலவசமாகக் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த திட்டத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட செலவினமும் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட செலவினத் தொகை பயன்படுத்தப்படவில்லை. இந்த திட்டமிடப்பட்ட செலவினத் தொகையும் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செலவினத் தொகையும் ஒரே அளவில் உள்ளது.
6. பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு
கொரோனா பரவல் காரணமாக, உலகம் முழுவதும் ஊட்டச்சத்துப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து விகிதம் குறைந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இந்த ஆண்டு பட்ஜெட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட அதிகம். எனினும், பட்ஜெட் செலவினத்தைப் பொருத்தவரை, கடந்த 2 ஆண்டுகளைவிடக் குறைவாகும்.