தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவாகப் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
உழைக்கும் மக்களின் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதுதான் நம் மண்ணின் சிறப்பு. இத்தகைய உணர்வு நம் ரத்தத்துடன் ஊறியதால் தான், தமிழனை சாதியால், மதத்தால் பிரிக்க நினைக்கும் சக்திகள் காணாமல் போய்விடுகின்றன.
பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிந்து புதியது புகும்’ நாளாகப் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவையில்லாத பொருட்களை வெளியே தூக்கி எறிவது வழக்கம். அதேபோன்று தேவையற்ற ஆட்சிகளை வெளியே தூக்கி எறிய இந்த போகித் திருநாளில் உறுதி எடுப்போம்.
விவசாயிகள் தங்கள் உரிமைக்காக கடும் குளிரிலும் டெல்லி வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையின் கதாநாயகர்களான நம் விவசாயிகள் மோடி அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது குரல் மத்திய அரசுக்கு இதுவரை கேட்கவில்லை.
மறுநாள் தை பிறக்கிறது. தை பிறந்தால் வழியும் பிறக்கும். நம்பிக்கையை விதையுங்கள். நல்லாட்சி மலர இந்த பொங்கல் திருநாள் வழிகாட்டும். பொங்கலிட்டு நீங்கள் வணங்கும் சூரியன், உங்கள் கண்ணீரைத் துடைக்கும் என்ற நம்பிக்’கை’யோடு சொல்லுங்கள்… பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.