மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீர்குலைக்கிற வகையில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை அமுல்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்திருப்பது ஒரு இடைக்கால தீர்வே தவிர, நிரந்தர தீர்வாக இருக்கமுடியாது. விவசாய சங்கங்களின் ஒரே கோரிக்கை வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பாதுகாப்பு, ஒப்பந்த விவசாயத்தை ரத்து செய்யவேண்டும் என்பதே. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருக்கிறது. அக்குழுவினர் அனைவருமே மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை பகிரங்கமாக ஆதரித்து நாளேடுகளில் கட்டுரை எழுதியவர்கள். இக்குழுவை சேர்ந்த அசோக் குலாட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 28 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிலும், டாக்டர் பி.கே.ஜோஷி கடந்த டிசம்பர் 15 அன்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேட்டிலும், அனில் கான்வாட் கடந்த டிசம்பர் 21 அன்று தி இந்து நாளேட்டிலும் எழுதிய கட்டுரைகளே இதற்கு சான்றாகும்.
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதால் விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காண முடியாது என கூறி குழுவோடு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று அகில இந்திய விவசாய கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்கும் வரை தலைநகர் டில்லியில் இருந்து வீடு திரும்ப மாட்டோம் என்று விவசாய சங்கங்கள் கூறியிருக்கின்றன.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பால் எந்த பயனும் விவசாயிகளுக்கு ஏற்படப்போவதில்லை. ஜனவரி 26இல் குடிஅரசு தினத்தன்று விவசாய சங்கங்கள் நடத்தவிருந்த டிராக்டர் பேரணியை முடக்கவே பயன்படும். இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருதவேண்டியிருக்கிறது. உச்சநீதிமன்ற ஆணைக்கு பிறகும் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். போராடுகிற விவசாயிகளை வாழ்த்துகிறோம்.