விவசாய உத்தரவாதம் மற்றும் விவசாயப் பணிகள் சட்டத்தின் விவசாய ஒப்பந்தம், தனியார் நிறுவனங்களுக்குச் சாதமாகவே இருக்கும். குறிப்பிட்ட பயிர்களை மட்டும் விளைவிக்க, விவசாயிகளுடன் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போடுவார்கள். விலையையும் அவர்களே நிர்ணயிப்பார்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே தனியார் நிறுவனங்களுக்கு விளைபொருட்களை விவசாயிகள் விற்க வேண்டும். வேறு யாருக்கும் அதிக விலைக்கு விற்க முடியாது. இது குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடத் தனியார் வர்த்தகர்கள் அதிக விலை கொடுத்தால், விளைபொருட்களை அவர்களுக்கு விவசாயிகள் விற்க முடியும். இனி அதுபோல் செய்ய முடியாது.
விவசாயிகளின் வருவாய்க்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் செய்யப்படும் கொள்முதல் உத்தரவாதம் அளித்தது. ஒப்பந்த முறையைவிட இது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது. பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தும் அளவுக்கு விவசாயிகளுக்கு வலிமை இல்லை. அதனால் தான் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர வேண்டும் என்றும், கொள்முதல் கொள்கைகளை அரசு நல்ல முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
சந்தைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், வெளிச்சந்தையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தால், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஊக்கப்படுத்துவதாக அமையும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறை உடனே முடிவுக்கு வரவில்லை என்றாலும், அரசே கொள்முதல் செய்யாவிட்டால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் நிர்ணயிக்கப்படும் விளைபொருட்கள் விலை, வெளிச்சந்தையில் நிர்ணயிக்க வேண்டிய விலையின் சமிக்ஞையாக இருந்தது. இனி, வெளிச்சந்தையில் எவ்வளவு விலை வேண்டுமானாலும் நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். மேலும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைத் தொடர்ந்து குறைந்த விலைக்கே விற்கும் நிலையும் ஏற்படும்.
உதாரணமாக, கடந்த 2012-13 ஆம் ஆண்டு என்எஸ்எஸ்ஓ எனப்படும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், 2012 ஆம் ஆண்டு கரிப் பருவத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடம் இருந்து 50 சதவீதம் நெல் உள்ளூர் வர்த்தகர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,150 என்ற வீதத்தில் உள்ளூர் வர்த்தகர்களுக்குச் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், 2 ஹெக்டேர் நிலத்துக்கு அதிகமாக வைத்திருக்கும் பெரிய விவசாயிகள், குவிண்டால் நெல் ரூ. 1,300 -க்கு விற்றுள்ளனர். 2012&13 ஆம் ஆண்டில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,250 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சராசரியாகப் பார்த்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலைக்கே நடுத்தர விவசாயிகள் விற்றுள்ளனர். அதேசமயம், பஞ்சாப் நடுத்தர விவசாயிகளோ, கடந்த 2012 ஆம் ஆண்டு, தாங்கள் அறுவடை செய்த நெல்லில் பாதியை மண்டிகளில் விற்றனர். 33 சதவீத நெல்லை உள்ளூர் வர்த்தகர்களிடம் விற்றனர். அதன்படி, பஞ்சாப் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500 கிடைத்தது. இது, அப்போது மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட 20 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் விலை சமிக்ஞை இல்லாமல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்த அளவு பேரம் பேசி விற்கும் நிலையைப் பெற்றிருக்க முடியாது. அதேசமயம், அதே ஆண்டில் உத்தரப்பிரதேச விவசாயிகளின் நிலை மாறுபட்டிருந்தது. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 சதவிகிதம் மட்டுமே நெல் உற்பத்தி செய்திருந்தனர். இவற்றை 30 சதவிகிதம் மண்டிகள் மூலமும்,70 சதவிகிதம் உள்ளூர் வர்த்தகர்கள் மூலமும் விற்றனர். ஆனால், நெல் குவிண்டாலுக்கு ரூ.1,010 மட்டுமே கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தில் குறைந்த நெல் உற்பத்தி, பஞ்சாபைப் போல் விலை பாதுகாப்பை அளிக்கத் தவறிவிட்டது.
எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது?
பெரும் தொழில் அதிபர்களோடு கைகோர்த்து, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க மோடி அரசு தயாராகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய சட்டங்களைப் பார்த்தால் வியப்பு ஏதும் அளிக்காது. இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்களை இயற்ற கொரோனா காலம் அரசுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. விவசாயம் மாநில அரசின் வரையறைக்குள் வந்தாலும், முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சத்தில் இது போன்ற சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளை தெருவில் இறங்கிப் போராட வைத்தது இந்த ஒரு கேள்விதான்:
விவசாயிகளின் பாதுகாப்புக் கருதி இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்பதுதான்.
கோதுமை மற்றும் நெல் கொள்முதல் 40 சதவீதம் செய்யப்படும்போது, அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் தரப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதன் மூலம், அரசின் கொள்முதலும் தானாகச் சிறந்த முறையில் அமலாகும். விவசாய உற்பத்தி சந்தைக் குழு முறையை ஒழித்துவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். இது இந்தியாவின் முறைப்படுத்தப்பட்ட பயிர் சாகுபடி திட்டத்தைப் பாதிக்கும். மண்டிகளுக்கு வெளியே விளைபொருட்களை விற்க அனுமதிப்பதால் மட்டும் எளிதாகக் கையாண்டுவிட முடியாது.
இந்த சட்டங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக் கொண்டே, மில்லியன் கணக்கான பொய்களைச் சொல்லி ஏழை விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.