ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த 1984 -1989 வரையிலான காலத்தில் காங்கிரஸ் அரசு பல சாதனைகளை படைத்துள்ளது. அதில் இரண்டு முக்கிய சாதனைகள் அன்றும், இன்றும், என்றும் தொடரும் வரலாற்று நிகழ்வாக அமைந்துவிட்டது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அந்த சாதனைகள் தொடர்ந்து தனித்து நிற்கும்.
ஒன்று, அவரது ஆட்சியில் தொடங்கப்பட்ட தேசிய தகவல் மையத்தின் டிஜிட்டல் இந்தியா. மற்றொன்று, தொலைத் தொடர்புத்துறை மேம்பாட்டு மையத்தின் கீழ் தொடங்கப்பட்ட தொலைத் தொடர்பு புரட்சி.
இவை, டிஜிட்டல் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கின. இந்தியாவின் தொலைத் தொடர்பு வெற்றிக்கு ராஜிவ் காந்தியுடன் இணைந்து பங்காற்றியவரும், பிரதமரின் ஆலோசகராகவும் இருந்த சாம் பிட்ரோடாவை குறிப்பிடவேண்டும். இவர் தான் 1984 ஆம் ஆண்டு தொலைத் தொடர்புத் துறையை நிர்மாணித்தார். இதனால், கிராம மக்களுக்கும் தொலைபேசி இணைப்பு வசதி சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தொலைபேசி இணைப்புகள் சாத்தியமான ஒன்றாக இருந்தது. அதுவும் தொலைபேசி இணைப்பு பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.
இது குறித்து, பல ஆண்டுகள் கழித்து சாம் பிட்ரோடா நினைவுகூர்ந்தபோது, ” இந்த தடைகள் எல்லாவற்றையும் மாற்றி, தொலைத் தொடர்பு வசதியை பெறுவதை எளிதாக்க ராஜிவ் காந்தி விரும்பினார். அதனால் தான் தொலைத் தொடர்பு மையத்தை மூட பன்னாட்டு நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்த போதிலும், என்னை அவர் ஆதரித்தார். கிராமப்புறங்களில் தொலைபேசி பரிமாற்ற நிலையங்களை நாம் சொந்தமாக உருவாக்க முடிவு செய்தபோது, நம்மை பைத்தியக்காரர்களைப் போல் பார்த்தார்கள். வளர்ச்சியடையாத ஒரு நாட்டுக்கு தொலைபேசியைவிட வேறு விசயங்கள் தான் முதலில் தேவை என்று அடிக்கடி கூறினர். எனினும், ராஜிவ் காந்தியின் அரசியல் ரீதியான ஆதரவு எனக்கு இருந்தது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை பயிற்சியில் ஈடுபடுத்துவதும், மனித ஆற்றலை கட்டமைப்பதும் திட்டமாக இருந்தது. நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் தொலைபேசி இணைப்புகள் வழங்க வேண்டும் என்பது மட்டுமே மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தது. இறுதியில், இந்திய தொலைத் தொடர்புத்துறை உலகின் பார்வையைப் பெற்றது” என்றார்.
தொலைத் தொடர்புத் துறை புரட்சியின் ஒரு கட்டமாக, நகரங்களிலும், கிராமங்களிலும் பொதுத் தொலைபேசி முறை செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம், உலகத்தின் பிற பகுதிகளுடன் பெரும்பாலான மக்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். அதோடு, நடுத்தர வர்க்கத்தினருக்கும் தொலைபேசி என்பது எளிதானதாக மாறியது. குறிப்பாக, வெளியூர்களுக்கு பேசும் ‘எஸ்.டி.டி’. வசதியால், வணிகத்தை மேம்படுத்துவது வணிகர்களுக்கு எளிதாக இருந்தது.
இதற்கு முன்பு, வெளியூர்களுக்குப் பேச ‘ட்ரங்க் கால்’ பதிவு செய்துவிட்டு பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்தது. பிட்ரோடாவின் தலைமையின் கீழ் அனைத்தும் மாறியது. நீர், கல்வியறிவு, நோய் தடுப்பு, பால், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தொலைத் தொடர்பு குறித்த ஆராய்ச்சியை மேப்படுத்த 6 தொலைத் தொழில்நுட்ப கேந்திரங்களை நிறுவவும் பிட்ரோடா காரணமாக இருந்தார்.
தொழிற்சாலைகளுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ராஜிவ் காந்தி மேம்படுத்தியதால், கணினி, விமானப் போக்குவரத்து துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் இறக்குமதி ஒதுக்கீடு, வரிகள் மற்றும் கட்டண விகிதங்களை குறைக்க வழிவகுத்தது. அந்தக் காலக்கட்டத்தில் இந்திய ரயில்வேயில் டிக்கெட் கொடுக்கும் முறை முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டதையும் பார்த்தோம்.
தொலைத் தொடர்புத் துறையில் பிட்ரோடா அதிரடிகளை நிகழ்த்தியபோது, இணையதளமும் செல்போன்களும் மிக விரைவாக வளர்ச்சியடைத் தொடங்கின. அதோடு, தொலைத் தொடர்பு புரட்சியால், பயணம், கல்வி, சுகாதார பராமரிப்பும் மேம்படத் தொடங்கின. கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் தான் கடந்த 1955 ஆம் ஆண்டு முதன் முதலாக இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட கணினி நிறுவப்பட்டது. ஆனால், இந்த கணினி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
எனவே, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கான விதையை விதைத்த பெருமை ராஜிவ் காந்தியையே சாரும். கணினிக்கான அனைத்து உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தடைகளை ராஜிவ் காந்தி நீக்கினார். இது, கணினி விலை குறைவதற்கு காரணமாக அமைந்தது.
தமது 40 வயதில் நாட்டின் இளம் பிரதமரான ராஜிவ்காந்தி, நவீன இந்தியாவின் அஸ்திவாரத்தை எழுப்பி, அதில் நவீனத்துவத்தின் முத்திரையை விட்டுச் சென்றுள்ளார். அவர் ஏன் இந்தியாவுடன் பிணைப்புடன் இருக்க விரும்பினார் என்ற கேள்விக்கு தனிப்பட்ட விடையும் உள்ளது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அமெரிக்காவில் இருந்து ராஜிவ் காந்தி இந்தியா வந்திருந்த நேரம். நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், சிகாகோ நகரில் இருந்த தன் மனைவி சோனியா காந்தியிடம் பேச தொலைபேசியை எடுத்தார். அனைத்து இணைப்புகளும் செயல் இழந்திருந்தன. அப்போதுதான், தொலைத் தொடர்புத் துறை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை ராஜிவ் காந்தி உணர்ந்தார். உடனே, தமது தாயார் இந்திரா காந்தியை நேரில் சந்திக்க அனுமதி கோரினார். பணிச் சுமையின் காரணமாக இந்திரா காந்தியால் உடனே சந்திக்க முடியவில்லை.
தாயாரின் சந்திப்புக்கு காத்திருந்தபோதுதான், ராஜிவ் காந்தியை பிட்ரோடா சந்தித்தார். அப்போதுதான், கிராமப்புற தொலைத் தொடர்பு சேவை மற்றும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து ராஜிவ் காந்தியுடன் பிட்ரோடா விவாதித்தார். தொலைபேசிகளின் எண்ணிக்கையை விட, அதனை இடையூறின்றி கையாளுவதன் அவசியம் குறித்து, பிட்ரோடாவிடம் ராஜிவ் காந்தி வலியுறுத்தினார். அதன்பின்னர், இந்திரா காந்தியை சந்தித்த ராஜிவ் காந்தி, தொலைத் தொடர்புத் துறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், நம் நாட்டில் கடல் போல் விரிந்து கிடக்கும் திறமையைப் பயன்படுத்தியே தொழில்நுட்பத்தை நாம் மேம்படுத்தலாம் என்றும் இந்திரா காந்தியிடம் ராஜிவ் காந்தி சுட்டிக்காட்டினார். இதனை ஏற்றுக் கொண்ட இந்திரா காந்தி, ‘அருமை’ என்று பாராட்டினார். துரதிஷ்டவசமாக, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற தமது கனவு தகர்ந்துபோனதாக பிட்ரோடா கலங்கினார். ஆனால், இந்த நாட்டுக்கு ராஜிவ் காந்தியே பிரதமராக கிடைத்தபின், பிட்ரோடாவின் மனதில் நம்பிக்கை துளிர்விட்டது. அதன்பிறகு, தொலைத் தொடர்புத்துறையில் நிகழ்ந்த பெரும் மாற்றம், பங்களிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டன.
இந்திரா காந்தி அரசு வடிவமைத்த சாட்டிலைட் வழியிலான மென்பொருள் ஏற்றுமதிக் கொள்கையின் மூலம், கடந்த 1984 ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் வரலாறு தொடங்கிவிட்டது. ஆனால், அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ஏற்ற ராஜிவ் காந்திதான், கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி தொழில்நுட்ப புரட்சியை முறைப்படி அறிவித்தார். அதன்பின்னர் இந்தியா திரும்பிப் பார்க்கவே இல்லை. வளர்ச்சிப் பாதையில் ஓட்டம் பிடித்து கொண்டிருந்தது. அமெரிக்க நிறுவனமான ‘டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்’ போன்ற நிறுவனங்களுடனான ஏற்றுமதி, சாட்டிலைட் மூலமே நடந்தது. இது இந்தியாவில் கணினி மென்பொருள் ஏற்றுமதிக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு மென்பொருள் நிறுவனங்கள் கணினிகளை இறக்குமதி செய்வதற்கு குறைந்த அளவிலான சுங்க வரி விதிக்கப்பட்டது.
இதனால் கணினி மென்பொருள் ஏற்றுமதி அதிகரித்ததோடு, மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மேலும் வரி விலக்குகள் அளிக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கை மென்பொருள் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அமைந்தது. ஆனால், அலுவலகங்களில் கணினியை அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்பது பொதுமக்களின் எண்ணமாக இருந்தது. கணினிமயமாக்கலை தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இயந்திரங்களால் வேலை இழப்பும், பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்தன. மக்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட அரசியல்வாதிகளும் கணினிமயமாக்கலை ஆதரிக்க தயங்கினர். கணினியால் வேலை இழப்பு ஏற்படும் என்று குற்றம்சாட்டி, நாடு முழுவதும் ராஜிவ் காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.
ரயில்வே டிக்கெட் முறை கணினிமயமாக்கப்பட்டதும் டிக்கெட் எடுப்பதற்காக செலவழிக்கும் நேரம் குறைந்தது. டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் நிற்பதும் நின்றுபோனதோடு, இருக்கை மற்றும் படுக்கை வசதிக்கான முன் பதிவில், வெளிப்படைத்தன்மை இருப்பதை மக்கள் உணரத் தொடங்கினர். இதுவே, நாட்டுக்கான கணினியின் முக்கியத்துவம் குறித்து மக்களை சிந்திக்க வைத்தது. இதற்கிடையே, சிறு கணினிகள் மீதான சுதந்திரமான கொள்கை பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 1984 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கொள்கையின்படி, எவ்வித கொள்ளளவையும் நிர்ணயிக்காமல், 32 பைட்களைக் கொண்ட கணினி இயந்திரங்களை தயாரிக்க யாருக்கு வேண்டுமானாலும் அனுமதி தருவது என முடிவு செய்யப்பட்டது.
இதனால், மைக்ரோ ப்ராஸஸருடன் கூடிய அசெம்ப்ளி போர்டு மற்றும் இன்டர்ஃபேஸ் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டதோடு, ரெடிமேடு போர்டுகளுக்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது. சுங்கவரி விதிவிலக்கு போன்று பல்வேறு வரிச்சலுகை மற்றும் வங்கியில் எளிதாக கடன் கிடைக்கச் செய்வது போன்ற நடவடிக்கையால் மென்பொருள் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்கும் அங்கீகாரம் கிடைத்தது. மென்பொருளுக்கான கலால் வரி முற்றிலும் நீக்கப்பட்டது. கணினிகளை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி முன்பு 100 சதவீதமாக இருந்தது. பின்னர், போதுமான அளவுக்கு குறைக்கப்பட்டது.
கணினி மென்பொருளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களை வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்ற இந்த கொள்கை வழிவகை செய்தது. மேலும், மென்பொருள் ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டவும் அங்கீகாரம் அளித்தது. இதுதவிர, இந்தியாவில் மென்பொருள் வளர்ச்சி என்பது, சாட்டிலைட் மற்றும் கம்பி வழி தொலைத் தொடர்பு முறை வழியே ஏற்றுமதியை அனுமதித்தது. அரசின் சலுகைகள், இந்தியாவில் மென்பொருள் துறையை ஊக்குவிப்பதாக அமைந்தது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மென்பொருள் வளர்ச்சியில் உலகத் தரம் வாய்ந்த கேந்திரமாக இந்தியா உருவெடுத்தது. இத்தகைய வளர்ச்சி, 1984 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்துக்கு பயன் அளித்தது.
எதுவாக இருந்தாலும், நாட்டை கணினிமயமாக்க ராஜிவ் காந்தி அரசு ஊக்குவித்தது, உலகச் சந்தையில் நம் நாட்டின் மீதான எண்ணத்தை மாற்றியது. மேலும், நமது தகுதிவாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் வளர்ந்த நாடுகளுக்குச் சென்று கணினி அமைப்பை நிர்வகிக்கவும் வழிவகுத்தது. இத்தகைய சூழல், பொறியியல் கல்லூரிகளில் கணினி கல்வியை பலரும் விரும்பிப் படிக்க காரணமாக அமைந்தது. இதனால் உருவான வலுவான தகவல் தொழில்நுட்பத் தொழிலுக்கு மனித வளத்தை வழங்கியதோடு, முதல் தலைமுறை பட்டதாரிகளும்கூட உயர்வு பெற வழிவகுத்தது.