துபாயின் பிரம்மாண்ட பேருந்து நிலையத்தை, குஜராத்தில் மோடி உருவாக்கியதாக வந்த செய்திகள்…குஜராத்தில் மின்சாரம் இல்லாத இடமே இல்லை என்று வந்த செய்திகள்…
இவை அனைத்துமே குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் செய்திகளாகும். இப்படித் திட்டமிட்டு பொய்களை பரப்ப பாஜகவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் உதவிகரமாக இருந்தது. இந்த செய்திகள் எல்லாம் பொய் என்று அம்பலமானபோது … மோடி பிரதமராகிவிட்டார்.
ஃபேஸ்புக்கை பயன்படுத்தி பொய்ப் பிரச்சாரம் செய்வது பாஜகவுக்கு புதிதல்ல, உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தந்தை முலாயம் சிங் யாதவை, அவரது மகன் அகிலேஷ் யாதவ் கன்னத்தில் அறைந்ததாக பாஜகவின் 32 லட்சம் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித்ஷா, சமூக வலைதளங்களில் எப்படி இயங்குவது என்பது குறித்து விளக்கினார். அப்போது, இனிப்போ, கசப்போ அல்லது உண்மையோ, பொய்யோ எத்தகைய செய்திகள் ஆனாலும், நாம் விரும்பும் செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்றார். உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கு எதிராக சமூக வலைதளத்தை திருப்பியதையே, ராஜஸ்தானில் அவர் நினைவுகூர்ந்தார். இந்தியாவில் உள்ள சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக செய்திகள் வெளிவந்ததே இதற்கு சாட்சி.
இதற்கெல்லாம் கட்டியம் கூறுவதுபோல், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகையான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எவ்வாறு வெற்றி பெற்றது என்பது குறித்து விரிவாக எழுதியுள்ளது.
உலகிலேயே அதிக அளவிலான சமூக வலைதளங்களை கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், பாஜகவுக்கு ஆதரவாக வளைந்து கொடுத்துள்ளது. பாஜக தலைவர்களின் எரிச்சலூட்டும் பேச்சையும் கண்டுகொள்ளாமல், பாஜக ஆதரவுப் போக்கை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்ததும், அனைத்து பொய் செய்திகளையும் இந்தியாவுக்கான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் அழித்துவிட்டதையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் நேரத்தில் பாஜக தலைவர்கள் பேசிய வெறுக்கத்தக்க பேச்சுக்களால்,தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், தணிக்கை செய்யாமல் அப்படியே ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டதையும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ ஆதாரமாக வெளியிட்டுள்ளது. தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜாசிங் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், மாட்டுக் கறியை சாப்பிடும் முஸ்லீம்களை கொன்று போடுமாறும், மசூதிகளை இடிக்குமாறும் பேசியிருந்தார். இதற்கு ராஜாசிங் மட்டும் பொறுப்பாக மாட்டார். வார்த்தை வன்முறையை அப்படியே வெளியிட்ட ஃபேஸ்புக் நிறுவனமும் பொறுப்பு . ராஜாசிங் இன்னும் ஃபேஸ்புக்கில் தான் இருக்கிறார் என்றும் அந்த அமெரிக்க பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
‘மேலே சொன்னது எல்லாம் ட்ரைலர் தான். மெயின் படமே அப்புறம் தான்’ என்கிறது அமெரிக்க பத்திரிகை. அதாவது, பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவர், ‘புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் போராடினால் வன்முறையில் ஈடுபடுவோம்’ என ஃபேஸ்புக்கில் மிரட்டல் பேச்சை வெளியிட்டார். அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. அப்போது தமது 25 ஆயிரம் ஊழியர்களுடன் காணொலிக் காட்சியில் பேசிய ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுகர்பெர்க், இந்தியாவில் அரசியல் தலைவர் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதால் வன்முறை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். வன்முறைக்குப் பிறகு, மிஸ்ராவின் பேச்சை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியது. எனினும், கபில் மிஸ்ரா இன்னும் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதையும் அமெரிக்க பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனாவை பரப்பியது முஸ்லீம்கள் தான் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனந்தகுமார் ஹெக்டே பதிவிட்டார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜகவுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே இருக்கும் உறவு புதிதல்ல. ஏற்கனவே, நரேந்திர மோடியின் பிரச்சார ஊதுகுழல்களாக ஃபேஸ்புக் ஊழியர்கள் செயல்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்ட பின், அரசியல் எதிரிகளுக்கு எதிரான துன்புறுத்தலுக்கு சமூக வலைதளங்களை பாஜக பயன்படுத்திக் கொண்டது. அரசை விமர்சிப்போரை மிரட்டவும், முஸ்லீம் மக்களை கொன்றுவிடுவோம் என அச்சுறுத்தல் விடுக்கவும், மோடியின் பின்னால் இயங்கும் இந்து தீவிரவாதிகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டதாகவும் அமெரிக்கப் பத்திரிகை படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இந்நிலையில், பாஜகவுக்கும், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகையான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்ட அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, ”இந்தியாவில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்-ஐ பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். பொய் செய்திகளைப் பரப்பி, கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய பங்காற்றியது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க பத்திரிகை ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்ட அறிக்கை, உண்மையை அம்பலப்படுத்தியுள்ளதாகவும்” கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தியை தோற்றுப் போனவர் என்று விமர்சித்தார். பாஜக ஆட்சியில் தகவல் அணுகுதல் மற்றும் கருத்து சுதந்திரம் ஜனநாயகமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. அதோடு, பாஜக மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இடையேயான உறவு குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பதை ரவிசங்கர் பிரசாத் தவிர்த்துவிட்டார்.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பாஜகவுக்கு ஆயுதமாக மட்டும் இல்லை. இவை இல்லாமல் பாஜகவினர் அரசியல் செய்ய முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு சான்றாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஒவ்வொரு எம்பியும் 3 லட்சம் லைக்குகளை ஃபேஸ்புக்கில் பெற வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டதைக் கூறலாம்.
பாஜகவின் தேர்தல் முதுகெலும்பாக வாட்ஸ்அப் இருக்கிறது. தேர்தல் செய்திகளையும், தங்கள் கொள்கைகளையும் ஒருசேர வாட்ஸ்அப் மூலம் கொண்டுசேர்க்க பெரிய அளவிலான குழுக்களை பாஜக உருவாக்கி வருகிறது. பாஜகவின் தேர்தல் மோசடிக்கு ஃபேஸ்புக்கும் உடந்தையாக இருக்கிறது.
”படிச்சவன் சூதும் பாவமும் செய்தால், போவான், போவான் அய்யோன்னு போவான்…”
– பாரதியின் இந்த வரிகளே பொய்யர்களுக்கு எச்சரிக்கை மணியாகட்டும்!
Unmai unmai