கெரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வேலை இழந்தோருக்கு, வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப இழப்பீடு வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுமாறு தலித் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பொது முடக்கத்தின்போது, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதனையடுத்து, தலித் மற்றும் பழங்குடியின அமைப்புகள் மேற்கண்ட கோரிக்கையை கையில் எடுத்துள்ளன. இதுவரை தங்கள் சமுதாயத்தவர்களுக்காக குரல் கொடுத்து வந்த இந்த அமைப்புகள், தற்போது அனைத்து படித்த இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப இழப்பீடு வழங்குவது குறித்த சட்டத்தை இயற்ற கோரிக்கை வைத்திருப்பது மாறுபட்டதாக இருக்கிறது.
தேசிய தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏற்கனவே, பெரும் வேலையில்லாத திண்டாட்டத்தை நாடு சந்தித்துக் கொண்டிருந்தது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு, இது பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் விரக்தியிலும், மன அழுத்தத்திலும் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, வரும் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதம், தகுந்த வேலை கிடைக்காவிட்டால் அதற்கான இழப்பீடு தருவது தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இது குறித்து, இந்த கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் அசோக் பார்தி கூறும்போது, ”2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டத்தின்படி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உத்தரவாதம் அளிக்க வழிவகை செய்யும் சட்ட நகலை மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளோம். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதவுள்ளோம்.” என்றார்.
அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை மட்டுமே இதுவரை இந்த அமைப்புகள் கோரி வந்தன. இட ஒதுக்கீட்டிலிருந்து அனைவருக்கும் வேலை உத்தரவாதம் என்ற கோரிக்கைக்கு எத்தனை தலித் அமைப்புகள் உடன்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பார்தி, ”இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எங்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேலையே இல்லை என்றால், இட ஒதுக்கீடும் இல்லாமல் போய்விடும். இட ஒதுக்கீடு என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, நீண்ட காலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பதை உயர் சாதி அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் கோரிக்கையில் எஸ்.சி., எஸ்.டி.யினரும் அடங்குவர். கொரோனாவினால் 14 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பெரிய அளவிலான வேலை இழப்பு அமைப்பு சாரா நிறுவனங்களில் தான் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தினக்கூலிகளாக உள்ளனர். தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
மாதச் சம்பளம் பெறும் படித்தவர்கள் வேலை இழந்தபின் மாற்று வேலை கிடைக்கவில்லை. அந்த வகையில் 2 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 2020 மார்ச் மாதம் வரை 8 கோடியே 60 லட்சம் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்த எண்ணிக்கை 6 கோடியே 50 லட்சமாக குறைந்துள்ளது. மத்திய அரசின் தரவுகளின்படி, ஏற்கனவே 11 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து விட்டது” என்றார்.
” கொரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சோகச் சம்பமும் நடந்தேறியது. அவர்கள் படும் துயரம் சொல்லிமாளாது. கொரோனா நோய் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் அவசியமாகிறது. பொதுமுடக்கமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் தனிப்பட்ட நபரின் வாழ்வாதாரத்தை பெரும் பாதித்துள்ளதாக,” ஏஐஏஎம் அமைப்பின் நிர்வாக தலைவர் ராகேஷ் பஹதூர் கூறுகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் பலர், சாதி, மதம் கடந்து வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கி விட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான், நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப இழப்பீட்டு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்ததன் மூலம், பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்கள் இந்த அமைப்புகள்.