மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பாக, கொரோனா தொற்று காலத்திலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளாலும் கடுமையான பாதிப்பை இத்துறை எதிர்கொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய – மாநில ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தில் 23 லட்சத்து 60 ஆயிரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 241 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1 கோடியே 51 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது, இந்த நிறுவனங்களின் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகின. இதனால் தொழில்முனைவோருக்குப் பேரிழப்பு ஏற்பட்டதோடு அரசிடமிருந்த நிதியுதவியும் வரவில்லை.
1980 முதல் 1990 வரை தமிழகத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செழித்தோங்கின. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது. இந்த நிறுவனங்களை மத்திய மோடி அரசோடு சேர்ந்து கொண்டு தமிழக எடப்பாடி பழனிசாமி அரசு முற்றிலும் கைவிட்டுவிட்டது. குறிப்பாக, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியை அந்த நிறுவனங்களுக்கு செய்து தர அதிமுக அரசு தவறிவிட்டது. ஒரு சில ஐடி நிறுவனங்களுக்கு ஓடிச்சென்று அடிப்படை வசதி செய்து தரும் தமிழக அரசு, தங்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மனம் வெதும்புகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் மூலப்பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தவோ அல்லது வரையறுக்கவோ அதிமுக அரசு தவறிவிட்டது. மின் மிகை மாநிலம் என்று முதலமைச்சரிலிருந்து அமைச்சர்கள் வரை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிவிக்கப்படாத மின் தடையும். சீரற்ற மின்சாரமும் வினியோகிக்கப்படுவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றும் கட்டமைப்போ, நீர் சுத்திகரிப்பு கட்டமைப்போ இல்லாததால், மழைக்காலங்களில் ஏற்படும் பேரிழப்பை எடப்பாடி பழனிசாமி அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. சென்னை மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவையில் உள்ள அனைத்து குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் இதே நிலைதான். இன்றைக்கு ஆட்கள் பற்றாக்குறையும் இந்த நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அது குறித்து எல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அடிப்படை கட்டமைப்பு, முதலீடு மற்றும் மின்சாரத்துக்காக இன்றைக்கும் தமிழக அரசையே இந்த நிறுவனங்கள் நம்பியுள்ளன. திட்ட ஒப்புதல்கள் மற்றும் நில மாற்றுச் செய்முறைகளை எளிமைப்படுத்தினால் மட்டுமே, இந்த நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் முன்கூட்டியே தொகையை அளித்தால், இந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்குக் கூடுதல் பலமாக இருக்கும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஆர்டருக்கு ஒரு மாதம் அல்லது 45 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை அதிமுக ஆட்சியாளர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் இவர்களைச் சென்றடையவில்லை. இதில் முன்னே இருந்து செயல்பட வேண்டி தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அதிமுகவோ, பாஜகவோ தங்கள் தேர்தல் அறிக்கைகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தங்கள் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அந்த அளவுக்கு அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திமுக – காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வரும் மே மாதம் 6 ஆம் தேதிக்குப் பிறகு, நிலைமை மாறும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சி முறையை அப்படியே ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகிற அ.தி.மு.க. அரசால் சிறு, குறு, நடுத்தர தொழிலகள் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த பேரழிவிலிருந்து சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க தெளிவான தொழில் கொள்கையை கடைப்பிடிக்கிற ஒரு ஆட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். அத்தகைய ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்துவதன் மூலமே தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க முடியும்.