குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் தவறான பிரதிபலிப்பையும், முன்னுதாரணத்தையும் உருவாக்கி விடும். எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு மேல் முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. ஏனெனில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உண்டு. அந்த 19 பேரைப் போல இந்த 7 பேரையும் குற்றமற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்தால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை.
ஆனால், இந்த 7 பேரும் குற்றவாளிகள் என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அவர்கள் சட்ட ரீதியாகப் போராடி நீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை பெற்றால் அதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. ஆனால், 7 பேர் விடுதலைக்காக அரசியல் அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ பேர் சிறைகளில் இருக்கும்போது, இந்த 7 பேருக்காக மட்டும் அமைச்சரவை தீர்மானம், ஆளுநரிடம் கோரிக்கை, போராட்டங்கள் என்று அரசியல் அழுத்தம் கொடுப்பது ஏன்? சிறையில் இருப்பவர்களில் இந்த 7 பேர் மட்டும்தான் தமிழர்களா?
தமிழக சிறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு ஆதரவளிக்கக் காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்த 7 பேருக்கும் மட்டும் சிறப்புக் கருணை காட்டுவதை ஏற்க முடியாது.
நீதிமன்ற தீர்ப்புக்குப் புறம்பாக சில குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது, வருங்காலங்களில் பல்வேறு குழுக்கள் அல்லது விரும்பத் தகாத சக்திகள், கொலைக் குற்றவாளிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்க வழி ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. காவல் துறை போன்ற விசாரணை அமைப்புகளும், நீதிமன்றங்களும் தேவையில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விடும்.
சட்டப்படி குற்றவாளிகள் என்று எந்த நீதிமன்றம் தண்டித்ததோ, அதே நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எனவே, 7 பேர் விடுதலையைச் சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர, அரசியல் ரீதியாக அணுகக் கூடாது என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.