தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை அ.தி.மு.க. அரசு ரூபாய் 50 கோடி செலவில் அமைத்து, வருகிற ஜனவரி 27 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருக்கிறார் என்று செய்தி வெளிவந்துள்ளது. பிரதமர் மோடியை பலமுறை வலியுறுத்தியும், திறப்பு விழாவிற்கு வருகைதர அவர் தயாராக இல்லை. கூட்டணி பேரம் படியாத நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மறுத்து விட்டார்.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சிலை அமைப்பதிலோ, நினைவிடம் அமைப்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நீதிமன்றத்தின் மான்பை சிதைக்கிற வகையில் மக்கள் வரிப் பணத்தில் நினைவிடம் அமைப்பது நமது பாரம்பரியத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். அ.தி.மு.க.வில் நடக்கும் அநீதியை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தப் போவதாக ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து சபதம் எடுத்துக் கொண்டார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை விதித்து அவர் சிறைக்கு சென்ற பிறகு, தர்ம யுத்தத்தை கைவிட்டு பதவி ஆசையின் காரணமாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கரம் கோர்த்து பதவியில் அமர்ந்து கொண்டனர். இதைவிட அரசியல் சந்தர்ப்பவாதத்தை இந்திய அரசியலில் முன்மாதிரியாகக் காண முடியாது.
மேலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதையொட்டி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையம் கடந்த 15.9.2017 இல் அமைக்கப்பட்டது. விசாரணையை மூன்று மாதத்தில் முடித்து அறிக்கை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகளாகியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. இன்றைய துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு அவர் முன்வரவில்லை. இதற்கு என்ன காரணம் ? இதற்குப் பின்னாலே இருக்கிற மர்மம் என்ன ?
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் இதுவரை 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு சென்னை காமராஜர் சாலையில் நினைவிடம் திறப்பதை விட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. அம்மாவின் பெயரால் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவிற்கு இதைவிட வேறு ஒரு துரோகத்தை செய்துவிட முடியாது.
குடியரசு தினத்தையொட்டி, சட்டத்தின்படி நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டத்தை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. பஞ்சாயத்துராஜ் அமைப்பின் அடித்தளமே கிராமசபை தான். அந்த கிராமசபை கூடி மக்கள் பிரச்சினைகளை பேசக் கூடாது, முடிவெடுக்கக் கூடாது என்கிற காரணத்தினால் அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலை ஒடுக்குவதற்கு எடப்பாடி அரசு முனைந்திருக்கிறது. நரேந்திர மோடியின் சர்வாதிகாரப் பாதையில் முதலமைச்சர் எடப்பாடி பயணம் செய்வதற்கு தமிழக மக்கள் உரிய தண்டனையை விரைவில் வழங்குவார்கள்.
கடந்த மூன்று நாட்களாக தலைவர் ராகுல்காந்தியின் கொங்கு மண்டல சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. செல்லும் வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக கூடிநின்று மகிழச்;சிப் பெருக்கோடு வரவேற்றனர். ஏழை, எளிய மக்கள் அன்பை பொழிந்தனர். மக்களின் வரவேற்பை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தலைவர் ராகுல்காந்தி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மக்கள் நேரு பாரம்பரிய தலைமையை கடந்த காலங்களில் எப்படி ஏற்றுக் கொண்டு அன்பை வெளிப்படுத்தினார்களோ, அதைப் போலவே தலைவர் ராகுல்காந்திக்கும் ஆதரவை வழங்கினார்கள் என்பதை அவரது சுற்றுப் பயணம் உறுதி செய்தது.
தலைவர் ராகுல்காந்தியின் சுற்றுப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உறுதி செய்கிற வகையில், மக்களின் வரவேற்பு அமைந்திருந்தது. மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சிக்கு எதிராகவும், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் என்பதை ராகுலின் கொங்கு வணக்கம் உறுதி செய்திருக்கிறது.