இந்திய தேசிய காங்கிரஸின் 136 வது ஆண்டு நிறுவன நாள் விழா நாடு முழுவதும் வருகிற டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. 200 ஆண்டுக் கால ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை வழியில் போராடி, விடுதலை பெற்றுத் தந்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. அதேபோல, இந்திய விடுதலைக்குப் பிறகு பண்டித நேரு தலைமையில் நவஇந்தியாவை உருவாக்கிய பெருமையும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உண்டு. சுதந்திரம் பெற்று கடந்த 74 ஆண்டுகளில், 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற வரலாற்றுப் பெருமை காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் பெரும் பங்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாள் விழா நடைபெறுகிற டிசம்பர் 28 ஆம் தேதியன்று, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை மாவட்டத்தில் காந்தியடிகள் சிலை இருக்கும் முக்கிய பகுதிகளின் அருகில் உள்ள இடத்தில் புதிய கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, அதனைத் தொடர்ந்து 136 வது நிறுவன நாளை நினைவுகூறும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் 136 காங்கிரஸ் கொடிகளை கைகளில் ஏந்தி, தலையில் காந்தி குல்லா அணிந்து ஊர்வலமாக நடந்து சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். அங்கே புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகச் செயல்படவும், தமிழகத்தில் நடைபெற்று வரும் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றி நல்லாட்சி அமைந்திடவும் காங்கிரஸ் கட்சியினர் உரத்த குரலில் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
அதே நாளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 9.30 மணி அளவில் 150 அடி உயரக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன். சேவா தள அணிவகுப்பும் அங்கே நடைபெறும். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்படும். இந்திய விடுதலையிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய பெருமை மிக்க இந்திய தேசிய காங்கிரஸின் 136 வது ஆண்டு நிறுவன நாள் என்பது, இந்திய மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாகும். அந்நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கொடி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்திடுமாறு அனைத்து காங்கிரஸ் நண்பர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.