மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் அதை திரும்பப் பெறுங்கள் என்று பலத்த குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிற சூழலியலாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதுகுறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இந்தியாவில் பெரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986 இன் கீழ் அனுமதி பெற வேண்டுமென அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதன்படி சூழலியல் தாக்க மதிப்பீடு – 2006 இன் சட்டத்தின் கீழ் திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டுமென வலியுறுத்தப் பட்டிருந்தது. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கும். இல்லாத பட்சத்தில் அனுமதி மறுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாக கொண்ட இதை முற்றிலும் மாற்றி அமைக்கிற வகையில் தற்போதைய புதிய வரைவு அறிக்கை வழி வகுக்கிறது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முழுக்க முழுக்க பெரும் நிறுவனங்களின் நலனை மட்டுமே பேணுவதாக இருக்கிறது. தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்கு சூழலியல் மதிப்பீடு தேவை இல்லை. கருத்துக் கேட்பு அவசியம் இல்லை. சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு கூட மக்கள் கருத்து கேட்கப்படாமல் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தேசிய நலன் சார்ந்த திட்டம் எது என்று யார் முடிவு செய்வது? மத்திய அரசா, மக்களா? மக்கள் உரிமையை பறிக்கும் இந்த அறிக்கையின் மூலம் ஜனநாயகப் படுகொலையை மத்திய பா.ஜ.க. அரசு செய்கிறது.
அதேபோல, பொதுமக்கள் கருத்துக் கேட்பு கால அவகாசம் 30 நாளிலிருந்து 20 நாளாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொழிற்சாலையினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் அது குறித்து மக்கள் கருத்துக் கேட்டால் அது தனியார் பெரும் நிறுவனங்களை பாதிக்கிறது என்கிற காரணத்தினாலே தான் இச்சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. மக்கள் கருத்துக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்ததை அடக்குவதற்கு காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 11 பேர் உயிரிழக்க நேர்ந்தது.
சுற்றுச்சூழல் பாதிப்புக் குறியீட்டில் உலக நாடுகள் வரிசையில் 2016 இல் 141 வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது 180 நாடுகளின் வரிசையில் 177 வது இடத்தில் இருக்கிறது. அதேபோல சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்பட்ட 10 நகரங்களில் 6 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் அவரச கோலத்தில் அள்ளி தெளிக்கிற வகையில் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை – 2020 குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வறிக்கை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் தான் இருக்கிறது. அதை 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டால் தான் அது பற்றி சரியான கருத்துக்களை பொதுமக்களால் கூறமுடியும் என கோரப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் ஜுன் 30 ஆம் தேதி 10 நாட்களுக்குள் 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென உததரவிடப்பட்டது. இதன்படி பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதற்கான கடைசி தேதியை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அறிக்கையை 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்படவில்லை. அதற்கான கால அவகாசம் கோரப்படவில்லை. இதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அரசமைப்பின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்க மறுப்பது மத்திய அரசின் ஏதேச்சதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது. உச்சநீதிமன்ற ஆணையை மத்திய பா.ஜ.க. அரசு உதாசீனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படுகிற விளைவுகளை தடுத்து நிறுத்துவதற்கு மக்களிடம் கருத்து கேட்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதை மறுப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. மத்திய அரசின் வரைவு அறிக்கையின் மூலம் கார்பரேட் நலன்களை பாதுகாப்பதுதான் மத்திய பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருக்கிறது. அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டால் மக்கள் அதை படித்து புரிந்து கொண்டு கடுமையாக எதிர்க்கிற நிலை ஏற்படும் என்று அஞ்சிய நிலையில் தான் அவசர அவசரமாக இதை சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதை சுற்றுச்சூழலில் நம்பிக்கையுள்ள ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டு கருத்து கேட்பு அவகாசத்தை இன்னும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.