மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வி உரிமை சட்டம் மூலமாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்த சர்வ சிக்சா அபியான் திட்டத்தின்கீழ், தமிழக அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்து, தற்போது 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தோடு 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். சர்வ சிக்சா அபியான் என்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த கல்வியாக செயல்பட்டு வருகிறது. இதில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யாத நிலையில், மாதச் சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்ப நலநிதி, காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது மனிதநேயமற்ற நடவடிக்கையாகும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 11.11.2011 அன்று பிறப்பித்த ஆணை 177இன் படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இதற்காக மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 26-08-2011 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
பகுதிநேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது தங்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் இந்த பணியில் அனைவரும் சேர்ந்தார்கள். ஆனால், அதன்பின் 10-வது கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதற்காக பலவகையான போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு இவர்களது கோரிக்கையை ஏற்க தயாராக இல்லை.
அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர ஆசிரியர்களை ஈடுபடுத்தி, ஆசிரியர் இல்லாத வகுப்புகளை கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறாக, முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. சம்பளத்தையும் உயர்த்தாமல், அதற்கான வாய்ப்புகளையும் மறுப்பது வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும்.
12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்கவே, ஆண்டொன்றிற்கு ரூ.99 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மே மாதத்திற்கான ஊதியம் தருவதில்லை. வேலைக்கு சேர்ந்த பின் இப்படி சம்பளத்தை தராமல் மறுப்பது எவ்வகையிலும் நியாயமாக கருத முடியாது. கடந்த 9 ஆண்டுகளில் மே மாதம் சம்பளம் ஒவ்வொருவருக்கும் ரூ.61ஆயிரம் என ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடி சம்பளத்தை தராமல் மறுப்பது மிகப்பெரிய அநீதியாகும்.
கொரோனா நோய் காரணமாக தமிழக அரசின் உத்தரவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மே மாதம் சம்பளத்தை உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். எனவே முதலில் சம்பளத்தை நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில், அரசு வேலையை நம்பி வந்த 16,549 பகுதிநேர ஆசிரியர்களில், மரணம், 58 வயதாகி பணி ஓய்வு போக, தற்போது 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர். ரூ.5,000 சம்பளத்தில் பணி அமர்த்தப்பட்ட அவர்களுக்கு சம்பள உயர்வு முதல் முறையாக 2014ம் ஆண்டு 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதோடு கடைசியாக 2017ம் ஆண்டு 700 ரூபாய் உயர்த்தி தரப்பட்டது. 10 ஆண்டுகளில் 2 முறை சம்பள உயர்வோடு, இந்த குறைந்த சம்பளமான 7,700 ரூபாயை வைத்துக்கொண்டு, விஷம்போல ஏறிவரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல், வறுமையில் வாடும் ஆசிரியர்களின் குடும்பத்தின் நலனை பாதுகாப்பதையும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு செய்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில், இதுநாள்வரை நடைமுறைப்படுத்தவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வுகாண தமிழக அரசு முயலவேண்டும்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா நியமித்த பகுதிநேர ஆசிரியர்களை எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நிரந்தரம் செய்யாமல் இருப்பது என்ன நியாயம்? இதுதான் அம்மாவின் வழிவந்த ஆட்சிக்கு இலக்கணமா? எனவே, மனிதாபிமான உணர்வோடு கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக ரூ. 7,700 சம்பளத்தில் பணியாற்றிவரும் 12,000 பேரை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.