டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் 1954-ல் 12 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அடையார் புற்றுநோய் மருத்துவமனையில்..அதே வருடம் மருத்துவப் பணியில் சேர்ந்தவர் டாக்டர்.சாந்தா.
இன்று …423 படுக்கைகளுடன் இயங்கும் இம் மருத்துவமனை …புற்றுநோயுடன் போராடும் ஏழை எளிய மக்களுக்கு பெரும் வரம்.
டாக்டர் சாந்தாவின்….. ஓய்வும், சலிப்பும் இல்லாத விடா முயற்சியும், கடும் உழைப்பும், தொய்வில்லாத உயர் நோக்கமும் மட்டுமே… நாடு முழுவதிலுமிருந்தும் புற்று நோயாளிகளை தயக்கமின்றி நாடி வரச்செய்யும் அளவில் …அடையார் புற்றுநோய் மருத்துவமனை ஆலமரமாக உயர்ந்து நிற்க காரணம்.
சென்னை மயிலாப்பூரில் கடந்த 1927 ஆம் ஆண்டு மார்ச் 11 மருத்துவர் சாந்தா பிறந்தார். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மருத்துவர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய் மாமன். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார். 1955 ஆம் ஆண்டில் எம்.டி. படிப்பை முடித்தார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கினார்.
12 படுக்கைகளுடன் இயங்கி வந்த அடையாறு மருத்துவமனையை, தனது குருவான மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றியவர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், இந்திய வேளாண் ஆய்வுக்கழகக் குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் எனப் பல அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.
புற்றுநோய் தொடர்பாகத் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். புற்றுநோய்க்கு எங்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உடனே அறிமுகம் செய்தவர். எட்டாக்கனியாக இருந்த புற்றுநோய் சிகிச்சையை எளியவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்ததில் மருத்துவர் சாந்தாவுக்கு முக்கிய பங்கு உண்டு.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா அவர்கள் தமது 93 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஏழை, எளியவர்களுக்கு எட்டமுடியாத புற்றுநோய் மருத்துவத்தை எளிதாக கிடைக்கச் செய்து சமூக சேவை செய்த இந்தியாவின் முன்னோடிகளில் முதன்மை இடத்தை பெற்ற இவரது மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து தொடங்கியவர் டாக்டர் வி. சாந்தா. மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய மகத்தான பணிகளுக்காக ரமோன் மக்சேசே விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றவர்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அரசு சாராத பொது மக்களின் நன்கொடையில் நடத்தப்படுகிற மிகச் சிறந்த நிறுவனமாகும். தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.40 லட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் வி. சாந்தா அவர்களிடம் வழங்கப்பட்டதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். சிகிச்சை பெறுபவர்களில் 30 சதவிகிதம் பேர் இலவசமாகவும், 30 சதவிகிதம் பேர் குறைவான கட்டணத்திலும் சிகிச்சை பெற்று வந்தார்கள். புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பத்தில் மகத்தான சேவை புரிந்த டாக்டர் வி. சாந்தா அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.