அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே அர்ச்சகராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பலவற்றில் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழகம் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் முன்மாதிரியாக விளங்குகிறது. பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் சாதி எனும் கொள்ளை நோய் இந்திய சமூகத்தை ஆட்டிபடைத்துவருகிறது. இதிலிருந்து மீண்டுவர எத்தனையோ தலைவர்கள் பாதை அமைத்துக் கொடுத்தாலும் காலப்போக்கில் அதை உதாசீனப்படுத்திவிட்டு மீண்டும் பழையபடி இழி நிலை நோக்கி நகர்ந்துவிடுகிறோம். இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறை நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது. கடவுளுக்கு நாங்கள் மட்டுமே முகவர்களாக இருக்க முடியும் என்று பேசிவந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டம் தமிழ்நாட்டில் 2006ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.
அர்ச்சகர் பயிற்சி மையங்கள்!

அதைத் தொடர்ந்து திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமயக் கோயில்களுக்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும், ஸ்ரீரங்கம், திருவல்லிகேனி ஆகிய இடங்களில் வைணவத்திற்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன. 2006 – 2007ஆம் ஆண்டில் 207 பேர் இவற்றில் பயிற்சி முடித்து வெளியேறினர். இவர்களில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 205 பேரில் இத்தனை ஆண்டுகளில் இருவர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாரிசாமி என்ற அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் 2018ஆம் ஆண்டு மதுரை தள்ளாகுளம் அய்யப்பன் கோயிலிலும், தியாகராஜன் என்ற அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மதுரை நாகமலை புதுகோட்டை விநாயகர் கோயிலிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
எங்கே பயிற்சி முடித்த அர்ச்சகர்கள்?

அர்ச்சகராவதற்கான பயிற்சி முடித்த மீதமுள்ள 203 பேர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர், அவர்களது வாழ்வாதாரம் எப்படி உள்ளது, அர்ச்சகராவதற்கு ஏன் இவ்வளவு தாமதம், இதன் பின்னால் நடைபெற்ற சட்டப் போராட்டம், வன்முறை தாக்குதல்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ள ‘சமயம் தமிழ்’ சார்பாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதனை தொடர்பு கொண்டோம். அவர் பகிர்ந்துகொண்ட சம்பவங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தின் தனி சொத்தாக பாவிக்கப்பட்ட ஒன்று அனைவருக்குமானதாக மாறும்போது எழும் எதிர்வினைகளை, கொந்தளிப்புகளை விளக்குவதாக இருந்தது.
சட்டம் இயற்றுங்கள்; தடை வாங்குகிறோம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றினாலும், உடனடியாக அதற்கு உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கப்பட்டுள்ளது. “மதுரை ஆதி சிவாச்சாரியார் நல சங்கம், தென்னிந்திய கோயில் பிராமணர்கள் நல சங்கம், தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் மேலும் சில பிராமணர் சங்கங்கள் இணைந்து இந்த சட்டத்திற்கு தடை வாங்கினர். அதாவது பிராமணர் அல்லாத பிற சாதியினர் சுவாமி சிலையைத் தொட்டு பூஜை செய்தால் தீட்டு ஏற்பட்டுவிடும் என மக்கள் நினைப்பதாகக் கூறி இந்தத் தடையை வாங்கியுள்ளனர். அர்ச்சகர் பயிற்சி பெறுவதில் சிக்கல் இல்லை. ஆனால் அர்ச்சகராக பணியமர்த்தப்படுவதற்கு தடை வாங்கியுள்ளனர். எங்கள் படிப்பு முடிந்து நாங்கள் தீட்சை பெற்ற பின்னரே எங்களுக்கு இது பற்றி தெரியவந்தது.
வன்முறை வரை சென்று அட்டூழியம்!

பயிற்சி முடிந்தபின்னர் இது என்றால் பயிற்சி பெறும்போதே பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தோம், எங்களுக்கு பயிற்சியளிக்க யாரும் முன்வரக்கூடாது என பிராமணர் சங்கங்கள் காய் நகர்த்தின. இதனால் யாரும் எங்களுக்கு பாடம் நடத்த முன்வரவில்லை. தமிழ் மந்திரங்கள் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இருந்தாலும் சமஸ்கிருத மந்திரங்கள் கற்றுக்கொடுக்க யாரும் முன்வரவில்லை. நான் படித்த திருவண்ணாமலையில் மட்டுமல்ல பிற மையங்களிலும் இதுதான் நிலைமை. நண்பர் ஒருவர் உதவியுடன் அப்போது பெங்களூரிலிருந்த ராமகிருஷ்ணன் ஜீவா என்பவரை தொடர்பு கொண்டோம். இதற்கு உள்ள எதிர்ப்பைக் காட்டி அவர் தயங்கியபோதும் அவருக்கான எல்லா வசதிகளையும் மாணவர்களே செய்துகொடுக்கிறோம் என்று நம்பிக்கை அளித்து அழைத்து வந்தோம். அவருக்கு வயது 90. திருவண்ணாமலையில் தங்கி எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பயிற்சி முடித்துவிட்டு வெளியே செல்வார். அப்போது சிலர் அவரை ஆள் வைத்து அடித்தனர். இதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார்.
பெரியாருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர்!
இதுபோல் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத்தான் நாங்கள் படிப்பை நிறைவு செய்தோம். ஆனால் பயிற்சி முடித்த எங்களுக்கு பணி கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இதை அறிந்த பின் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக நான் இந்த வழக்கில் இணைந்தேன். வழக்கை இழுத்தடிக்க வாய்தா வாங்கிக்கொண்டே சென்றனர். இந்நிலையில் 2009ஆம் ஆண்டு நான் திருவண்ணாமலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தேன். பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கே முதல் விதைபோட்ட பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஆனால் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ்காரர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என்னை தாக்கினர். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
கருவறை நுழையும் போராட்டம்!

மதுரை, திருவண்ணாமலை, பழனி, சென்னை என பல இடங்களில் எங்கள் அமைப்பு சார்பாக போராட்டம் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம். 2015ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நானும் பாலகுரு என்ற பயிற்சி முடித்த மாணவரும் கருவறை நுழையும் போராட்டத்தை நடத்தினோம். எங்களையும் பூஜை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். இதனால் வழக்கமாக 12 மணிக்கு சாத்தப்படும் நடை அன்று மூன்று மணிக்குதான் சாத்தப்பட்டது. காவல்துறையினர் எங்களை அழைத்துச் சென்று இரவு வெகுநேரம் கழித்துத்தான் விடுவித்தனர். இந்தப் போராட்டங்கள் ஒருபக்கம் போய்கொண்டிருக்க, சட்டப் போராட்டமும் தொடர்ந்தது.
தீர்ப்பில் வைத்த ட்விஸ்ட்!

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பிராமணர்கள் சங்கம் தடை விதிக்கக்கோரிய வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. முக்கியமான சமயங்களிலும் ஜூனியரை வாதாடவைத்து அவர்களுக்கு சாதகமான தீர்ப்பையே பெற்றுக்கொடுத்தார். 2006லிருந்து இழுத்தடிக்கப்பட்டு வந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். பயிற்சி முடித்து பணியாற்றச் செல்லும் அர்ச்சகர்கள் அந்தக் கோயிலின் தலைமைக் குருக்களிடம் கட்டாயம் தீட்சை பெற வேண்டும். ஆகம முறைப்படி செயல்படுவதில் தவறிழைக்கும் பட்சத்தில் அந்த அர்ச்சகருக்கு எதிராக கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எங்கு வேண்டுமானாலும் தடை வாங்கலாம் என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழியாத தீண்டாமை!

இது முழுக்க ஏற்கனவே இருந்த அச்சகர்களுக்கு சாதகமான தீர்ப்புதான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகமம் இருக்கிறது. நான் ஒரு கோயிலில் பணியமர்த்தப்பட்டேன் என்றால் அங்கு நான் ஆகம முறைகளை சரியாக பின்பற்றினாலும், ஆகம முறைப்படி இப்படி நடந்து செல்ல வேண்டும், இப்படி தண்ணீர் கொண்டு வர வேண்டும் என ஏதாவது ஒரு காரணம் சொல்லி எனக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை நாடமுடியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தீண்டாமை கடைபிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் கோயில் கருவறையில் மட்டும் குறிப்பிட்ட சாதியினர்தான் இருக்க முடியும் என்பதும் ஒரு தீண்டாமைதான். அதைப் போக்குவதற்கான வழியாக இந்த தீர்ப்பின் முதல் வரி இருந்தாலும், மீண்டும் அவர்கள் மனது வைத்தால் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும் என்று சொல்வது ஒரு குழப்பமான தீர்ப்பு இல்லாமல் வேறென்ன?
பெரியாரே வழி!

இதனால் இந்த தீர்ப்பு வந்த மறுநாள் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு எனது அர்ச்சகர் கோலத்தை களைத்தேன். வேட்டி, பூணூல், ருத்திராட்சை அனைத்தையும் தீ வைத்து கொளுத்தினேன். இந்த அரசும் நீதிமன்றமும் சாதி தீண்டாமையை கடைபிடிக்கின்றன. இன்றிலிருந்து பெரியார், அம்பேத்கர் கொள்கைப்படி இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த போராடுவேன் என உறுதி மொழி எடுத்துக்கொண்டேன்” என்று கூறினார் ரங்கநாதன்.
இதுதான் ஆகமமா?

“ஆகம முறைப்படி அர்ச்சகரின் பல் சொத்தையாக இருக்கக் கூடாது, மனைவி இல்லாத அர்ச்சகர் பூஜை செய்யக் கூடாது, குளிக்கக் கூடாது, தீபம் மட்டுமே ஏற்ற வேண்டும், வேறு விளக்குகள் வைத்திருக்க கூடாது என பல்வேறு விஷயங்கள் உள்ளன. இன்று அவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லையே, எல்லா கோயிலிலும் மின்சார வசதி வந்துவிட்டது. பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் ஆகம முறை மீறல் இல்லையா? ஆனால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வோம் பிற சாதியினரை மட்டும் அனுமதிக்க மாட்டோம் என்பது என்ன அணுகுமுறை” என்று ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களிடம் வரவேற்பு பெறும் தமிழ் மந்திரங்கள்!

மேலும் அந்தப் பயிற்சி முடித்த மற்ற மாணவர்கள் நிலை பற்றி கேட்டறிந்தோம். “அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களில் 15 சதவீதம் பேர் வேறு வழியில்லாமல் தங்கள் கோலத்தை களைந்து வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் கணபதி ஹோமம், சிறிய கோயில்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கு செல்கின்றனர். இந்த காலகட்டத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 1000க்கும் அதிகமானவர்கள் கும்பாபிஷேகங்களை நடத்தியுள்ளனர். தமிழ் மந்திரங்களில் இவர்கள் பூஜை செய்வதும், அதற்கான விளக்கத்தை தெரிவிப்பதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது பணியில் சேர்ந்துள்ள இருவரும் தனியார் கோயில்களுக்காக நாளிதழில் வந்த விளம்பரங்கள் பார்த்து நேர்காணலில் பங்கேற்று பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். அறநிலையத் துறை மூலம் ஒருவருக்கு கூட இன்னும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று ரங்கநாதன் தெரிவித்தார்.
பெண்களும் அர்ச்சகராக வேண்டும்!

“தமிழ்நாடு அறநிலையத்துறையில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அவற்றில் 200 கோயிகள் பிரபலமானவை. பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் தகுதிக்கு ஏற்ப இந்த கோயில்களில் பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் கோயில்களில் யாரும் பணியமர்த்தபடவே இல்லையா எனக் கேட்டால் ஒவ்வொரு கோயிலிலும் பணி நியமணம் வழங்கப்பட்டுக் கொண்டேதான் உள்ளது. அப்படியான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது என வெளியில் சொல்லாமல் வாரிசு அடிப்படையில் அவர்களது சமூகத்துக்குள்ளேயே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கப்படும் துறையில் இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுவது ஏற்புடையதல்ல. எனவே உடனடியாக பயிற்சி முடித்த அர்ச்சகர்களை பணியில் அமர்த்த வேண்டும். மேலும் அனைத்து சாதி ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் முறைப்படி பயிற்சி பெற்று அர்ச்சகராக பணியமர்த்தப்பட வேண்டும்” என தமது கோரிக்கைகளை தெளிவாகக் கூறி அதற்கான விழிப்புணர்வு மற்றும் போராட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரங்கநாதன். இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் முன்னோர்களின் போராட்டத்தால் விளைந்தவை தானே, அப்படியிருக்க ரங்கநாதன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் முன்னெடுக்கும் போராட்டமும் இனிவரும் காலங்களில் சமதர்மத்தை கோயிலுக்குள்ளேயும் நிறைவேற்றிட காரணமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
(நன்றி: சமயம்இனையஇதழ்)
(குறிப்பு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தந்தை பெரியாரின் கனவை 1970 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தினார்.)