34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கொள்கை இன்னும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவில்லை. இது தற்போது கொள்கை மட்டுமே, சட்டமல்ல. கல்வி மாநில அரசு மற்றும் மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்டு வருவதால், இதனை அமல்படுத்துவது அந்தந்த அரசுகளை சார்ந்தே உள்ளது
தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கையே நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பின்பற்றப்படுகிறது. இடையிடையே இந்தி மொழியை திணிக்க முற்படும்போது எல்லாம், கடும் எதிர்ப்பலைகள் எழுந்து, இந்தி திணிப்பு காணாமல் போய்விடுவது வழக்கம். இரு மொழிக் கொள்கையில் தீவிரம் காட்டி, அதில் வெற்றியும் பெற்ற ஒரு மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்க முற்படுவதை பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் தான் தமிழகத்தில் இருந்து எதிர்ப்புக் குரல் அதிகமாக இருக்கிறது.
தற்போது மும்மொழிக் கொள்கை மூலம் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் விருப்பப் பாடமாக ஏதேனும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவிக்கிறது.
விருப்பப் பாடமாக ஒவ்வொரு மொழியை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அந்த பாடத்தை கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் கற்பிக்க வைப்பதே மத்திய அரசின் நோக்கம் என்பது தமிழகத்து எதிர்ப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதிப்பது. 4 ஆண்டு இளங்கலைப் படிப்புகளில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவது. எம் பில் படிப்பை ரத்து செய்வது. இவை எல்லாம் உயர்கல்வி படிப்பு எளிதாக கிடைக்கும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை ஒதுக்க வேண்டும். எனினும், கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்று கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியால் பயன் ஏதும் ஏற்படவில்லை என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- தாய்மொழியை கற்பிப்பது மாநில அரசின் வரம்புக்குட்டப்பட்டது. தாய்மொழியை கற்பிப்பது மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் அமல்படுத்தப்படுமா? என்பது பற்றி மத்திய அரசு உறுதி செய்யவில்லை.
- 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அவர்களது கற்பனை வளம் சிதைந்து போகும். கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களிடம் பணம் பறிக்கும் வேலை நடக்கும்.
- 100 சதவீத தேர்ச்சிக்காக 3 ஆம் வகுப்பிலேயே மாணவர்ளை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படும். இதனால் இடை நிற்றல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இடைநிற்றலை தடுத்து தமிழக அரசு பெற்ற வெற்றி வீணாகிவிடும்.
- 6 ம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி கற்க மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் தமிழ்நாட்டில் எதிர்ப்பை பெற்றுள்ளது. வர்ணாசிரமப்படி முன்னோர் செய்த தொழிலையே செய்ய வேண்டும் என்ற ராஜாஜியின் குலக்கல்விதான் இது என்பது தமிழகத்தின் குற்றச்சாட்டு.
- மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் நீட்சியாக தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது ஏழை, எளியோரை உயர் கல்விக்கு வராமல் தடுக்கும் முயற்சி என்பதே பிரதான குற்றச்சாட்டு.
இது குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வடமாநிலங்களில் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். 2018 ஆம் ஆண்டு தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 26.3 சதவீதம். இதனை 2035 ஆம் ஆண்டு 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் எப்போதோ 49 சதவீதத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைகளை பின்பற்றி, இந்தியாவை கல்வியில் முன்னேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை மாணவர்களின் சேர்க்கையை உயர்த்த கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பொருளாதாரக் கொள்கையில் இடம்பெற்றுள்ள நல்ல அம்சங்கள் ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மட்டுமே முன்னிறுத்தும் இந்த புதிய பொருளாதாரக் கொள்கை தேவையா? என்பதே தமிழகத்தின் கேள்வி.
நீட் என்ற நுழைவுத் தேர்வின் மூலம் நம் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியானது. அதேபோல், அனைத்து உயர்கல்வியிலும் தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பெறாமல் செய்வதே மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கமாக உள்ளது.
இருப்பதை இழக்கச் சொல்கிறது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை. தக்க வைக்க போராடுகிறது தமிழகம். சமூக நீதிக்கான போராட்டங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழகம் இதிலிருந்தும் மீண்டு வரும் என்று நம்புவோம்!