‘நீட்’ நுழைவுத் தேர்வு அனிதாவை காவு வாங்கி 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அப்போது அனிதாவுக்காக நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது. ஆனால், நீட் தேர்வை அந்த ஆண்டு அமல்படுத்தியதால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை அனிதா இழந்தார். தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவக் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது காவல்துறை.
அனிதாவின் 3 ஆவது நினைவுதினத்தையொட்டி, அவரது சகோதரர் மணிரத்னம் கூறும்போது, ”25 இளைஞர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அந்த இளைஞர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் இழந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி என்பவர் கூறும்போது, ”வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்தும், வழக்கு நிலுவையில் உள்ளதால் எனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பில்லை. என்னோடு போராடிய பல பெண்களுக்கும் இதே நிலை தான்” என தெரிவித்தார்.
ராகுல் ராஜேஸ் என்பவர் கூறும்போது, ”போராட்டம் நடத்தியதாக என் தாயார் மீது வழக்குப் பதிவு செய்தனர். என் தாயார் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யமாட்டோம் என்று உறுதியளித்த காவல் துறையினர், பின்னர் எங்களோடு சேர்த்து என் தாயார் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்” என்றார்.
இந்த பிரச்சினை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கவனத்துக்கும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை என்பதால், இறுதியாக, எதிர்கட்சிகளின் உதவியை நாடியுள்ளார் மணிரத்னம்.