முன்னுரை:
பாபர் மசூதி & ராம ஜென்ம பூமி பிரச்சினையைப் பொறுத்தவரை, அது தோற்றம் கொண்டது 22.12.1949. அது விசுவரூபம் எடுத்துப் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது 6.12.1992. இந்த இரு நாள்களுமே நம் நாட்டைப் பொறுத்தவரை கருப்பு நாள்களாகும்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் நாளை (ஆகஸ்ட் 5, 2020) ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்றது உச்சநீதிமன்றம். அதேநேரத்தில் அங்கே ராமர் கோயில் கட்ட அனுமதித்ததும் உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பை எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்ட 20 கோடி (உ.பி.யில் மட்டும் 3 கோடியே 84 லட்சம்) இஸ்லாமிய சகோதரர்களின் சகிப்புத்தன்மையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ! தர்மம் மறுபடியும் வெல்லும் !!
23 டிசம்பர் 1949 – அயோத்தியில்நடந்ததுஎன்ன ?
பாபர் மசூதி கட்டப்பட்டு 464 ஆண்டுகள் கழித்து, 1992 டிசம்பர் 6ஆம் தேதி மதவெறி சக்திகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ராமர் கோவிலை இடித்துப் பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கூறி, மீண்டும் அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் -என்கிற கோரிக்கையை எழுப்பி, சங்பரிவாரக் கும்பல் இந்தக் கொடிய செயலைச் செய்தது.
பாபர் மசூதியில் பிரச்சினை முதன்முதலில் 22.12.1949 அன்று நள்ளிரவு தலைதூக்கிபோது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு எவ்வளவு பதற்றமும் மனவருத்தமும் அடைந்தார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அதேபோல, சம்பவம் நடந்த உடனே காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அதையொட்டி, இப்பிரச்சினை குறித்து அந்தப் பகுதியில் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பங்குவகித்த அக்ஷய பிரம்மச்சாரி என்பவர், உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் தகவல் அறிக்கை
பைசாபாத், அயோத்யா காவல் நிலைய முதுநிலை சப்இன்ஸ்பெக்டர் பண்டிட் ஸ்ரீராம்தேவ் பாண்டே 23.12.1949 அன்று இ.பி.கோ. 147/295/448 ஆகிய பிரிவுகளின்கீழ்ப் பதிவு செய்யப்பட்டது.
1) அபாய்ராம்தாஸ் 2) ராம்சுக்லாதாஸ் 3) சுதர்ஷன்தாஸ் மற்றும் அயோத்தியைச் சேர்ந்த 50&60 பேர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு.
மாதா பிரசாத் என்னும் காவலர் தெரிவித்த தகவல் :
‘‘காலை 9 மணிக்கு ஜன்ம பூமிக்குச் சென்றபோது, 50&60 பேர் கொண்ட கூட்டம், பாபர் மசூதியின் மதில் சுவரில் இருந்த கதவின் பூட்டை உடைத்துக்கொண்டும், சுவர்களின் மீது ஏறி உள்ளே குதித்தும், படிகள் மூலமாகவும் உள்ளே நுழைந்தது. அக்கூட்டம் ஸ்ரீராமர் விக்ரகத்தை உள்ளே வைத்தது என்பதை அறிந்தேன். அக்கூட்டத்தினர் சீதை, ராமர் உருவங்களைக் காவி மற்றும் வெள்ள நிற வர்ணத்தால் சுவரில் எழுதியிருந்தனர். உள்ளே இருந்த காவலர் ஹன்ஸ்ராஜ் என்பவர் அவர்களைத் தடுத்தார். ஆனால், அந்தக் கும்பல் அவரை லட்சியம் செய்யவில்லை. எனவே, வெளியே இருந்த ஆயுதப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால், அதற்குள் பாபர் மசூதியில் ராமர் சிலை தோன்றி இருப்பதாக ஒரு பொய்யான பிரச்சாரத்தைச் சுற்று வட்டாரத்தில் பரப்பினர். அதனால், பொதுமக்கள் பெருங் கூட்டமாக அதிசயத்தைக் காணத் திரண்டு வந்தது, இவர்களுக்கு ஆதரவு தந்தது போன்ற நிலை உருவாயிற்று. மக்கள் பாபர் மசூதிக்கு உள்ளேயும் நுழைந்து விட்டனர். உயர் அதிகாரிகள் வந்து நடவடிக்கையில் இறங்கினர். இதற்குள் வெளியே ஐந்தாயிரம், ஆறாயிரம் மக்கள் கூடிவிட்டனர். அவர்கள் மத சம்பந்தமான கோஷங்களை எழுப்பி கொண்டும் பாடல்களைப் பாடிக்கொண்டும் உள்ளே நுழைய முயற்சி செய்தனர். ஆனால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை.
ராம்தாஸ், சுக்லாதாஸ், சுதர்ஷன் தாஸ் மற்றும் பெயர் தெரியாத ஐம்பது, அறுபது பேர் மசூதியில் இருந்த கல்லறையை அசிங்கப்படுத்தினர். கலகம் விளைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர்; விக்ரகத்தை வைத்தனர். அங்குப் பணியில் இருந்த அதிகாரி களும் பொதுமக்களும் இந்தச் சம்பவத்தைக் கண்ணால் கண்டனர். அவ்வகையில், விவரங்கள் விசாரிக்கப்பட்டது. தகவல் அறிக்கையில் காணப் பட்ட விவரங்கள் உண்மையே.”
1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வருக்கும் அரசு தலைமைச் செயலருக்கும் (அயோத்தி) மாவட்ட மாஜிஸ்திரேட் கே.கே.கே. நாயர் அனுப்பிய ரேடியோ செய்தி : ‘‘ஆள் இல்லாத நேரத்தில் பாபர் மசூதிக்குள் சில இந்துக்கள் நுழைந்து ஒரு விக்ரகத்தை வைத்து விட்டனர். மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. 15 பேர் கொண்ட போலிஸ் படை இருந்தது. நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.”
ஜி.பி.பந்த்துக்கு அனுப்பிய தந்தி
புதுதில்லி, 26 டிசம்பர் 1949
அயோத்தியில் நடந்த நிகழ்வுகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்வின் மூலம் உத்தரப்பிரதேசத்தில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத் தப்படுகிறது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
பிரதமர் நேரு உ.பி. மாநில முதல்வர்
ஜி.பி.பந்த்துக்கு எழுதிய கடிதம்
புதுதில்லி, 5 பிப்ரவரி 1950
அன்புள்ள பந்த் அவர்களுக்கு,
அயோத்தியில் நிலவும் சூழ்நிலை குறித்து எனக்கு உடனுக்குடன் தெரிவித்து வந்தீர்களானால் நான் மிகவும் மகிழ்ச்சி யடைவேன். உத்தரப்பிரதேசத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை யைத் தீர்க்க வேண்டும் என்பதற்கு நான் அதிக முக்கியத் துவம் அளித்து வருகிறேன் என்பதையும், இந்தப் பிரச்சினையால் அகில இந்திய அளவில், அதிலும் குறிப்பாகக் காஷ்மீரில் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கடந்தமுறை புதுதில்லி வந்திருந்தபோது, தேவைப் பட்டால் நான் அயோத்திக்குச் செல்வேன் என்று கூறியிருந்தேன். அதன்படி நான் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் கருதினால், அங்குச் செல்வதற்கான தேதியை நிர்ணயிக்க முயல்வேன். நான் ஓயாத பணிகளில் மிகவும் அதிகமாக ஈடுபட்டிருந்தபோதிலும் அயோத்தி செல்வேன்.
உங்கள் அன்புள்ள,
ஜவாஹர்லால் நேரு
பிரதமர் நேரு உ.பி. மாநில முதல்வர்
ஜி.பி.பந்த்துக்கு எழுதிய கடிதம்
புதுதில்லி, 17 ஏப்ரல் 1950
அன்புள்ள பந்த் அவர்களுக்கு,
உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. ஒருவேளை உத்தரப்பிரதேசத்தில் நடப்பது தொடர்பாக என் மனத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த உணர்வுகளின் முடிவாக இது இருக்கலாம்.
மத அடிப் படையில் பார்க்கும் போது, உத்தரப் பிரதே சத்தின் நிலைமை மிகவும் மோச மடைந்து வருகிறதோ என்ற எண்ணம் எனக்கு நீண்டகால மாகவே இருந்து வந்திருக்கிறது. உண்மையில், உத்தரப்பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது. உத்தரப் பிரதேச நிலைமையுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்பு வைத்திருக்கும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, இப்போது செயல்படும் விதம் என்னை வியக்க வைக்கிறது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இப்போதைய குரல், நான் அறிந்த காங்கிரசின் குரல் அல்ல… எனது வாழ்நாளின் பெரும் பாலான நேரங்களில் எதிர்த்து வந்த குரல்…!
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கிய தலைவர்களின் இதயத்திலும் மனத்திலும் மதவாதம் புகுந்துவிட்டது எனக்குத் தெரிகிறது. இது, நோயாளியால்கூட உணர்ந்து கொள்ள முடியாத மிக மோசமான பக்கவாத நோயாகும். அயோத்தியில் மசூதி மற்றும் கோவில்களிலும் பைசாபாத்தில் ஓட்டலிலும் நடந்தவை மிக மோசமானவை. இதில் இன்னும் மோசமான செயல் என்னவென்றால், இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடப்பதை நமது தலைவர்கள் சிலரே அங்கீகரிப்பதுதான்.
ஏதோ சில காரணங்களுக் காகவோ அல்லது அரசியல் லாபத்திற்காகவோ இந்த நோயை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கி றோம். இதனால் இந்த நோய் நமது மாநிலம் உட்பட நாடு முழுவதும் பரவி வருகிறது. மற்ற அனைத்துப் பிரச்சினை களையும் விட்டுவிட்டு, இதை மட்டும் எடுத்துக் கொண்டு போராடலாமா என்று சில நேரங்களில் நான் நினைப் பதுண்டு. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அப்பணியை மேற்கொள்வேன். அப்போது எனது முழுபலத்தையும் காட்டி இந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவேன்.
உத்தரப்பிரதேசத்தில் நிகழும் சம்பவங்கள் குறித்து எனக்குக் கிடைக்கும் அறிக்கைகளின் அடிப் படையில் பார்க்கும்போது, பெரிய பிரச்சினைகளைவிட மோசமான சம்பவங்கள் நடப் பதை உணர முடிகிறது. நகரில் உள்ள சாலையில் ஒரு முஸ்லிம் நடந்து செல்கிறார். அவருடன் சிலர் சண்டையிட்டு, பாகிஸ் தானுக்கு ஓடு என்கிறார்கள். அல்லது சிலர் அந்த முஸ்லிமின் கன்னத்தில் அறைகிறார்கள். அல்லது அவரின் தாடியைப் பிடித்து இழுக்கின்றனர். அதேபோல், முஸ்லிம் பெண்கள் தெருக்களில் செல்லும் போது, அவர்களைப் பற்றி வக்கிரமான வார்த்தைகள் உதிர்க்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, முஸ்லிம்களை மிகவும் வாட்டி வதைக்கும் வார்த்தை ‘நீங்கள் பாகிஸ் தானுக்கு ஓடுங்கள்’ என்பதுதான்.
(எஸ்.கோபால், உமா அய்யங்கார் ஆகியோர் தொகுத்த ‘ஜவஹர்லால் நேருவின் முக்கியக் கடிதங்கள்’ என்ற நூலிலிருந்து)
‘ஹரிஜன்’ இதழில் 1950ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 19ஆம் தேதியும் செப்டம்பர் 23ஆம் தேதியும் காந்தியவாதி மஷ்ருவாலா எழுதிய கட்டுரைகளின் சில பகுதிகள்…
அயோத்தியில் முஸ்லிம்கள் :
அக்ஷய பிரம்மச்சாரி என்பவர் அயோத்தியைச் சேர்ந்த வைணவ சாது ஆவார். பைஸாபாத் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் உத்தரப்பிரதேச மாநிலக் காங்கிரஸ் குழு உறுப்பினராகவும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர்களால் மிகவும் நேர்மையானவர் என்று அறியப்பட்ட தொண்டராகவும் திகழ்ந்தார். பைஸாபாத்தும் அயோத்தியும் அருகருகில் உள்ள நகரங்களாகும். உண்மையில் அவை இரண்டும் சேர்ந்துதான் ஒரு நகரமாகும். அவை இரண்டும் சேர்ந்துதான் ஒரே நகராட்சியாக இருக்கின்றது.
1949ஆம் ஆண்டிலோ அதற்குச் சற்று முன்பாகவோ, துரதிருஷ்டமான வகையில் இப்பகுதியில் நிலவிவந்த இந்து முஸ்லிம் நல்லுறவு சிதைக்கப்பட்டது. அப்போது இந்துக்களால் முஸ்லிம்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப் பட்டது. இதைக்கண்டு அக்ஷய பிரம்மச்சாரி, நகர காங்கிரஸ் தலைவர் சித்தேஸ்வரி பிரசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.
ஒரு கூட்டத்தில் (ஜனவரி 1950), மேற்கொண்ட பல முயற்சிகளுக்குப் பிறகும் அப்பகுதியில் நிலைமை சீரடையவில்லை. இதையடுத்து கடைசி முயற்சியாக அக்ஷய பிரம்மச்சாரி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 1950ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 4ஆம் தேதிவரை நீடித்த உண்ணாவிரதப் போராட்டம், உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சர் தலையிட்டு தேவையானவற்றைச் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
ஆனால், அமைச்சரின் உறுதிமொழிக்குப் பிறகு எந்த விதமான விசாரணையோ அல்லது குறை தீர்க்கும் நிகழ்ச்சிகளோ நடைபெறவில்லை என்று அக்ஷய பிரம்மச்சாரி குற்றஞ்சாட்டினார். ஏற்கெனவே நிலைமை எவ்வளவு மோசமாக இருந்ததோ அதே நிலைதான் நீடித்தது. உண்மையில் நிலைமை மோசமடைந்து எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்குப் பெரும் பிரச்சினை உருவாகும் நிலை ஏற்பட்டது.
அக்ஷய பிரம்மச்சாரியின் குற்றச்சாட்டு :
அயோத்தியில் பாபர் மசூதி என்ற பெயரில் ஒரு பெரிய மசூதி இருந்தது. அது 425 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஆனால், மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாகச் சிலர் நம்பினர். இதில் எள்ளளவு உண்மையும் இல்லை.
அதன் பின்னர், 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலை 9 மணிக்கு அக்ஷய பிரம்மச்சாரியைத் தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர், அதற்கு முந்தைய நாள் இரவில் பாபர் மசூதிக்குள் நுழைந்த ஒருவன், ராமரின் உருவச் சிலையை அங்கு வைத்துச் சென்றுவிட்டதாகக் காலை 6 மணிக்குத் தமக்கு ஒருவர் தகவல் தெரிவித்ததாகவும், இதையடுத்துத் தாம் அங்குச் சென்று பார்த்து வந்ததாகவும் தெரிவித்தார். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, பாதுகாப்புக்குப் போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது.
அங்கு வைக்கப்பட்ட சிலையை உடனே அப்புறப் படுத்தவும் இல்லை. அன்று மதியம் 12 மணிவரை அப்பகுதியில் மிகக் குறைந்த ஆட்களே இருந்தனர். ஆட்சியர் நினைத்திருந்தால் அப்போதே எந்த எதிர்ப்புமின்றிச் சிலையை அகற்றியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அதற்கு அடுத்த நாள் பாபர் மசூதியில் ராமர் தாமாகவே தோன்றிவிட்டதாகவும், அவரைக் காண அனைவரும் வரவேண்டும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. மீண்டும் அங்கு மக்கள் வரவழைக்கப்பட்டு, உணர்ச்சிமயமான உரைகள் நிகழ்ந்தப் பட்டன.
காந்தியடிகள், காங்கிரஸ் அரசுகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரை அவமதிக்கும் வகையில் உரைகள் நிகழ்த்தப் பட்டன. அதில் பேசிய ஒருவர், பாகிஸ்தானில் ஒரு கோவில்கூட விட்டுவைக்கப்படவில்லை. அதேபோல் இங்கும் மசூதிகளோ, தர்க்காக்களோ இருக்கக்கூடாது என்று மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசினார்.
அக்ஷய பிரம்மச்சாரியின் உண்ணாவிரதம் :
ஒரு மாதத்திற்குப் பிறகு (சரியாகச் சொல்ல வேண்டுமானால் 32 நாள்களுக்குப் பிறகு) 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அக்ஷய பிரம்மச்சாரி அவரது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். எனது ஆலோசனையையும் வினோபாவேவின் அறிவுரையை ஏற்றுத்தான் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அதற்குமுன்பு அக்ஷய பிரம்மச்சாரிக்கு உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார் :
‘‘அயோத்தியில் ஏற்பட்ட பிரச்சினையைச் சரிசெய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளை யும் எடுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருவேளை, அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதைச் சரிசெய்வது எங்களின் கடமையாகும். இதற்கு அனை வரின் ஒத்துழைப்பும் உதவியும் தேவை இதில் உடனடி, முக்கியத் தேவை என்ன வென்றால், அயோத்தியில் அனைத்துத் தரப்பு மக்களும் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமையுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்பதுதான். எனவே, நீங்கள் உங்களின் உண்ணாவிரதப் போராட் டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்” என்று அக்கடித்தில் சாஸ்திரி கேட்டுக்கொண்டி ருந்தார்.
இது தவிர, இந்த விவகாரம் தொடர்பாக எனக்கும் முதலமைச்சர் பந்த்துக்கும் இடையே சில கடிதப் போக்கு வரத்துகள் நிகழ்ந்தன. எனினும் இந்த உறுதிமொழிகளைப் போதுமானவையாகக் கருதி உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயங்கினார். அவரது தயக்கத் திற்குக் காரணம் இருந்தது. மற்றொரு புறத்தில் அரசும் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. எனவே, அரசுடன் ஒத்துழைக் கும்படி பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை மதித்தும், வேறு சில காரணங்களைக் கருத்தில் கொண்டும் நானும் வினோபாவும் அக்ஷய பிரம்மச்சாரியைச் சந்தித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி கூறினோம். அவரும் எங்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது.
துயரமான சூழலில் மனித சமுதாயத்திற்குச் சுயநலமின்றிச் சேவையாற்றத் தேவையான மனவலிமை, உடல் வலிமை இதய வலிமை மற்றும் தூய்மையை அக்ஷய பிரம்மச்சாரிக்கு இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் உண்மையான அறப்போராட்ட வீரர் என்ற உயர்ந்த தகுதியை அவர் பெறட்டும்.”
Super