அயோத்தியில் இருந்த 400 ஆண்டுகால பாபர் மசூதி, அப்போதைய பாஜக தலைவர் எல்கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உமா பாரதி உள்ளிட்ட இந்து அமைப்பு தலைவர்கள் முன்னிலையில் சங்பரிவார்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மதசார்பற்ற இந்தியாவில் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோமோ? என்ற அச்சம் முஸ்லீம் மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசூதி இடிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று கண்டித்தது. அதேசமயம், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே பாபர் மசூதி இருந்த இடத்தை ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்குப் பதிலாக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில், இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட முடிவு செய்திருப்பதாக உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியத்தால் அமைக்கப்பட்ட இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை அறிவித்தது.
இது குறித்து வக்பு செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் அத்தர் ஹுசைன் கூறும்போது, ” ஏற்கனவே இருந்த பாபர் மசூதியைப் போலவே புதிதாக மசூதி கட்டவும், பொது மக்கள் பயன்பாட்டுக்காக பல்நோக்கு மருத்துவமனை, தொழில் பயிற்சி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கொரோனா பரவலுக்குப் பின்தான், 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை கட்டலாம் என்ற திட்டம் உதித்தது. இங்கு இருதய நோய்களுக்கு சிகிச்சையும், புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படும்.
மருத்துவமனை மற்றும் மசூதி கட்டுவதற்கு ஜாமியா மில்லியா இஸ்லாமியா கட்டிடவியல் கல்லூரி டீன் பேராசிரியர் எஸ்எம். அக்தாரை அணுகினோம். மசூதியை வடிவமைப்பதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். மருத்துவமனையுடன் மசூதி கட்டினால் மதவெறி என்ற கண்டனம் எழும் என்பதால், மசூதி கட்டும் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்.
மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் வேறு மசூதி இல்லை. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மசூதிக்கு, புதிதாக கட்டப்படும் மசூதி ஈடாகாது. எனினும், ராமர் கோயிலைப் பார்க்கும் போதெல்லாம், பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய சங்பரிவார்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும். வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியை இடித்தவர்கள், புதிய மசூதியையும் இடித்தால் யாரால் தடுக்க முடியும்?
எனவே, மசூதிக்குப் பதிலாக ராமர் கோயில் அங்கு நிற்கட்டும். உலகின் பார்வையில் பெரும்பான்மையினரின் வலிமை மற்றும் சிறுபான்மை முஸ்லீம்களின் தியாகத்தையும் ராமர் கோயில் வெளிப்படுத்தும். அதே பெயரில் வேறு ஓர் இடத்தில் மசூதியை கட்டுவதைவிட, அழிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பெரிய அஞ்சலி செலுத்துவதே சரியானது.
அதேசமயம், 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை, தொழில் பயிற்சி மையம் கட்டினால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். இதனை அந்த பகுதியில் வாழும் மக்கள் மட்டுமின்றி, உலகமே பாராட்டும்” என்றார்.