ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தியது, நாட்டின் பன்முகத்தன்மையின் அடித்தள மதிப்புகளை அகற்றும் சங்பரிவாரின் உச்சகட்ட நிகழ்வாகும். அதோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராமர் கோயில் கட்டும் நீண்ட நாள் திட்டம் நிறைவேறியதன் மூலம், இந்தியா ஒரு நாடு என்ற கட்டமைப்பும், சமூக அரசியல் கட்டமைப்பும் நிலைகுலைந்துள்ளது. சங்பரிவாரின் இத்தகைய நோக்கம் வெட்கக்கேடானது என இந்து மத செயல்பாடு கோடிட்டுக் காட்டுகிறது.
பெரும்பான்மைக்கு அடிபணிதல்
எனினும், பூமி பூஜை விழாவின் ஒட்டுமொத்த விளைவு ,நாட்டின் சமூக அரசியல் கட்டமைப்பு மற்றும் அதன் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்துத்வா சார்ந்த பெரும்பான்மைக்கு கீழ்படிய வேண்டும் என்ற சமிக்ஞையை பூமி பூஜை விழா ஏற்படுத்தியுள்ளது. இதுதான் சங்பரிவார் பல ஆண்டுகள் மேற்கொண்ட பிரச்சாரமாகவும் இருந்தது. சங்பரிவார் மற்றும் 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்- ன் வரலாறு என்பது அரசியல், பன்முகத்தன்மை,ஜனநாயகம், சமத்துவம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்துக்கு எதிரான கொள்கையாகவே இருந்துள்ளது. இந்த கொள்கை தான், 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோதும், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் கொடூரச் செயல்களாக வெளிப்பட்டன. அயோத்தியில் ஆகஸ்ட் 5 என்பது, சங்பரிவாரின் ‘நாசவேலை செயல்பாட்டின்’ முக்கிய நிகழ்வாகும்.
1949 ஆம் ஆண்டு அரசியல் சாசன சபையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை சங்பரிவார் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளது. அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த மாதவ் சதாசிவ் கோல்வால்கர், பாரதத்தின் மனு தர்மத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் சாசனத்தில் மேற்கத்திய நாடுகளின் சட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். சமத்துவத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அம்பேத்கார் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கோல்வால்கர், முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவின் உள்நாட்டு எதிரிகள் என்று குற்றஞ்சாட்டினார். மனுதர்மத்தை பின்பற்றும் இந்துக்கள் யாரும் அரசியல் சாசனத்தை ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திரத்துக்குப் பிறகு சங்பரிவாரின் வரலாறு இந்துத்வாவின் அடிப்படையிலேயே அமைந்தது. இது நாசவேலை சூழ்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கிய இந்த நாசவேலை சூழ்ச்சிகள் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இந்துத்வா கொள்கையின் முக்கிய அம்சம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பதே. இந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் கட்டுவதும் இந்துத்வாவின் முக்கிய நிகழ்ச்சி நிரலும் பூமி பூஜை மூலம் நிறைவேறியிருக்கிறது.
பொய்யாக்கப்படும் சமகால வரலாறு
ராமர் கோயில் கட்டுவதற்கான போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை கொடுத்தனர். மசூதியை இடிப்பதும், மசூதி இருந்ததற்கான தடயங்களை முற்றிலும் அழிப்பதுமே அவர்களது தியாகமாகவும், போராட்டமாகவும் இருந்துள்ளது. சட்டத்திற்கு கட்டுப்பட்டும், உண்மையாகவும், வன்முறையின்றியும், தியாகத்துடனும் நடந்து கொண்டதாலேயே, பூமி பஜை விழா கொண்டாடும் நாள் நமக்கு பரிசாக கிடைத்திருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால், 2019 ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கினாலும், மசூதியை கரசேவர்கள் இடித்தது கிரிமினல் குற்றம் என்று இடித்துரைத்தது. 1980 ஆம் ஆண்டு மத்தியில் ராமர் ஜென்ம பூமி பிரச்சினையை விஸ்வ இந்து பரிசத் பிரச்சாரமாக தொடங்கியது முதல் மசூதி இடிக்கப்படும் வரை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வகுப்புவாத வன்முறைக்கு பலியானார்கள். இதுதான் பிரதமர் மோடி கூறும் சுதந்திரப் போராட்டமா?
வகுப்புவாதத்தை ஆதரித்த பிரதமர் மோடி, இந்துத்வாவுக்கு அதிக மதிப்பைக் கொடுத்தார். இது நாடு முழுவதும் இந்து- முஸ்லீம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்தி பேசும் மக்கள் வாழும் பீகார், உத்தரப்பிரதேசம்,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
புகையும் எதிர்விளைவுகள்
பிரதமர் எடுத்த நிலைப்பாடுகளை அயோத்தியிலும் வெளியேயும் உள்ள பார்வையாளர்கள் குற்றவாளியைப் போல் கருதினாலும், சங்பரிவாருக்குள் எழும் குரல்கள் இதனை வரலாற்றுச் சாதனையாகவும், இந்துத்வா கோட்பாடாகவும் எதிரொலிக்கின்றன. பூமி பூஜைக்குப் பிறகு பிரதமர் மோடியின் பேச்சு குறித்து பஜ்ரங்தள் தலைவர் வினாயக் கட்டியார் கூறும்போது, 1996 ஆம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய், மக்களவையில் பேசும்போது, இந்துத்வாவின் பிரதான கோரிக்கைகளான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது மற்றும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது போன்ற லட்சியங்கள், பெரும்பான்மை இல்லாததால் செயல்படுத்த முடியவில்லை. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்போது, இவற்றை செயல்படுத்துவோம் என்று குறிப்பிட்டதை கட்டியார் சுட்டிக்காட்டினார். ராமர் கோயிலை சிறப்பு அறக்கட்டளை மூலமே கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி, அரசே இந்த பணியை கையில் எடுத்துக் கொண்டுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த கட்டியார், யாராவது செய்து தானே ஆக வேண்டும் என்று மழுப்பலான பதிலை சொல்லி நழுவினார்.
இயலாமை உணர்வு
” கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்த கலவரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் வன்முறையிலும் மசூதி இடிப்பு போன்ற கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தவர்கள் தான் இன்று கோயில் கட்டப் புறப்பட்டுள்ளார்கள். அன்றைக்கு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டோரும், இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும் ஒரே நபராக இருக்கிறார்கள். வரலாற்றின் இந்த வெட்கக்கேடான நிகழ்வுகளை யாராலும் விவரிக்க முடியாது. நாங்கள் உயிரை இழந்தோம். உடமையை இழந்தோம். குடிமக்கள் என்ற உரிமை இழந்தோம். எங்களை வெறும் சிறுபான்மையினர் என்று ஒதுக்கும் நிலைமைதான் இருக்கிறது…”
– அயோத்தி மற்றும் 8 கி.மீ. தொலைவில் உள்ள அதன் இரட்டை நகரமான ஃபரிசாபாத் முஸ்லீம் மக்களின் ஆழ் மனதில் உழன்று கொண்டிருந்த இயலாமையே இப்படி வார்த்தைகளாக … இல்லையில்லை, வலிகளாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.