கடந்த புதன்கிழமை அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். வெள்ளிச் செங்கற்களை எடுத்து அவர் அடிக்கல் நாட்டியபோது, அதனை அமெரிக்காவிலும் கொண்டாடினர். அமெரிக்க இந்திய பொது விவகாரக்குழுவின் தலைவர் ஜெகதீஷ் ஷேவானி, அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயிலின் 3 டி படத்தை எல்இடி திரையில் ஒளிபரப்பினார். மேலும், பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளும் தென்பட்டன.
இந்த கொண்டாட்டங்கள் அமெரிக்கவாழ் இந்தியர்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தது.
இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் இணைய இதழில் ரணா அயூப் எழுதிய கட்டுரை:
கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட ஓராண்டு நிறைவாகவும் இருந்தது. கடந்த ஓராண்டில் ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள 70 லட்சம் முஸ்லீம்கள் கொடுமையான ராணுவ நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்டெர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், பத்திரிகையாளர்கள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்பது, இந்திய முஸ்லீம்களுக்கு மற்றொரு விரும்பத்தகாத தேதியாகிவிட்டது. அயோத்தியாவில் பிரம்மாண்ட பூமி பூஜை விழா நடத்தி முஸ்லீம்கள் அவமதிக்கப்பட்டதோடு, காஷ்மீரில் அடக்குமுறை அதிகரித்ததையும் அடையாளப்படுத்தும் தினமாக ஆகஸ்ட் 5 உருவெடுத்துள்ளது.
பூமி பூஜை நடந்த இடத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு நாடு முழுவதும் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது. இது தற்செயலாக நடந்தது இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக மோடியின் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான ‘இஸ்லாமோபோபியா’ என்ற நோய் பீடித்துள்ளது. மேலும் பெரும்பான்மையினத்தவரின் எழுச்சியும் அதிகப்படியாக உள்ளது. ஆட்சியின் சீர்கேடு மற்றும் ஒருசாராரின் ஒழுக்கக் கேடு உலகத்தை எச்சரிப்பதாக உள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பேரழிவு காலத்தில், நாட்டில் பரப்பப்படும் வெறுப்பு இயல்பாக மாறியுள்ளது.
ராமர் கோயில் கட்ட இந்துக்களுக்கு சர்ச்சைக்குரிய இடத்தை விட்டுக் கொடுத்தாலும், பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்ற செய்தியை, இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லீம் மக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அளித்த தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மசூதி அழிப்பை கொண்டாடுகிறார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 40 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போதுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்திய முஸ்லீம்கள் ஈத் திருநாளை கொண்டாடினர். அப்போது மாட்டுக் கறியை எடுத்துச் சென்ற முஸ்லீம் இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
முஸ்லீம்கள் நடத்தப்படும் விதம் மாற வேண்டும் என இந்திய தலைவர்கள் விரும்புகிறார்கள். ஒரு புறம் நாடு முழுவதும் கொரோனா தாக்கம், மறுபுறம் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு. இந்த சூழலில், இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் அயோத்தியாவில் குவிந்திருந்தனர். வெள்ளியால் ஆன செங்கற்களை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டியதன் மூலம், மதசார்பற்ற, ஜனநாயக குடியரசின் அடிப்படைகளை அகற்றும் அவரது வாக்குறுதி நிறைவேறியிருக்கிறது.
ஊரடங்கால் சுமைகளை சுமந்து வாடிக் கொண்டிருக்கும் இந்திய நடுத்தர மற்றும் ஏழை மக்களையும், பொருளாதார பாதிப்பால் திணறிக் கொண்டிருக்கும் மக்களையும் சமாதானப்படுத்துவதற்காகத்தான் இந்த பூமி பூஜை நடத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்பது, இந்துக்களின் ஆதிக்கத்தை மீண்டும் நினைவுபடுத்தும் நாளாகவும், இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியின் அடையாளமாகவும் அமைந்துவிட்டது.
இந்தியாவை ரத்த பூமியாக மாற்றியதற்கான அடையாளமாகவும் ஆகஸ்ட் 5 மாறிவிட்டது. இந்தியாவின் ஒன்றுபட்ட கலாச்சாரத்தை அழிப்பதில் மோடி ஆர்வம் காட்டுகிறார். உலகின் செயலற்ற தன்மையால், அவர் துணிச்சலுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.