சுவாமி அக்னிவேஷின் மரணத்தை கொண்டாடி ட்விட்டரில் பதிவிட்ட சிபிஐ புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆரிய சமாஜ கொள்கையை பின்பற்றி ஆரிய சபா என்ற கட்சியை சுவாமி அக்னிவேஷ் தொடங்கினார். கொத்தடிமைகளாக நடத்தப்படும் தொழிலாளர்களை மீட்டதன் மூலம் அவர் பிரபலமானார்.
கடந்த 1977 ஆம் ஆண்டு ஹரியானாவில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அடுத்த 2 ஆண்டுகளில் கல்வி அமைச்சரானார். கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த அக்னிவேஷ், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர். ”மோடியின் கருத்து அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது” என்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பினரால் அக்னிவேஸ் தாக்கப்பட்டார். அதன்பின்னர், 2011 ஆம் ஆண்டு, அமர்நாத் யாத்திரை குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் விமர்சித்த அக்னிவேஷை, மதத்தலைவர் நித்யானந்த் தாஸ் தாக்கினார். அமர்நாத் யாத்திரையை பாசாங்குத்தனம் என்று அக்னிவேஷ் விமர்சித்ததை உச்ச நீதிமன்றமும் கண்டித்தது.
இந்நிலையில் தமது 80 ஆவது வயதில், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் டெல்லி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிபிஐ புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தார்மீகத்தை மீறியுள்ளதாக பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவரது ட்விட்டர் பதிவில், நீங்கள் காவி உடை அணிந்த இந்து மதத்துக்கு எதிரானவர். இந்து மதத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் புலித் தோல் போர்த்திய ஆடு. இவரை இவ்வளவு நாள் இந்த உலகில் ஏன் வாழ வைத்தாய் என எமராஜனிடம் கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இந்தியன் போலீஸ் பவுன்டேஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசாங்கத்தை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிடுவது ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அகாரிக்கு அழகல்ல. நீங்கள் நாடு முழுவதும் உள்ள காவல் படையை சீர்குலைப்பதோடு, குறிப்பாக இளம் அதிகாரிகளை தவறாக வழி நடத்த காரணமாகிவிட்டீர்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது.
இதன்பின்னரும், ”காட்டுமிராண்டி இறந்ததை, சமூகத்தை அழிக்கும் பூச்சி இறந்ததை ஏன் கொண்டாடுகிறோம் ” என்று நாகேஸ்வர ராவ் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார். நாகேஸ்வர ராவின் கருத்துக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, நாகேஸ்வர ராவை முட்டாள்தனமான வெறுப்பாளர் என்று விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை ஆரிய சமாஜம் மூலம் தடுத்து நிறுத்தியவர் சுவாமி அக்னிவேஷ் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது மனிதர்களை அவமதிக்கும் செயல் என ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே விஜி கூறியுள்ளார்.