‘இந்தியாவில் கிறிஸ்தவம் ஏன் தோல்வியடைந்தது?’ என்ற கேள்வியுடன் முக்கிய ஊடகங்களின் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல் கூறும்போது, ‘கிறிஸ்தவ மதத்துக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை’ என்ற விவாதத்தை முன்னெடுத்துள்ளார். ”கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மதமாற்றம் செய்வதாக ஆர்எஸ்எஸ் அமைப்போ அல்லது விஸ்வ இந்து பரிசத் அமைப்போ தவறான எச்சரிக்கை அல்லது பதற்றத்தை பரப்பியதை காரணமாக கூற முடியாது” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் மண்டல் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி, மருத்துவம், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணி மூலம் மதமாற்றம் பிரதானமாக நடைபெறுவது அல்ல என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்க மண்டல் மறுக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ அமைப்பான கம்பேஷன் இன்டர்நேஷனலின் ஒரே நோக்கம் இந்தியாவில் சமூகப் பணியில் ஈடுபடுவதுதான். கம்பேஷன் இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் மீது மதமாற்றம் செய்ததாக இதுவரை எந்த புகாரும் இல்லை.
இந்தியாவில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் பணி, பிராமணர்களுக்கும் உயர் சாதியினருக்கும் ஒரு கருவியாக மாறியது என்ற திலீப் மண்டலின் கடுமையான விமர்சனம் ஆதாரமற்றது. கடந்த நூற்றாண்டில் கேரளாவில் கிறிஸ்தவம் தோல்வியுற்றதால், பலர் பிராமணர்களாக மாறிவிட்டதாக கூறுகிறார். அவர் சொல்லும் காலத்தில் கேரளாவில்(செயின்ட் தாமஸ் கேரளாவுக்கு வந்ததாக நம்பப்படும் காலத்தில்) பிரமாணர்கள் இருந்தார்களா? என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. 8 ஆவது நூற்றாண்டில் பிராமணர்களே இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்ததாக, கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறித்தும் மண்டல் கேள்வி எழுப்புகிறார். இந்த பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால், உயர் சாதியினர் மற்றும் சாதி அடிப்படையிலான கல்வியாக மாறியிருப்பதாகவும், தலித்கள் வடநாட்டு மொழியை கற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும் திலீப் மண்டல் தெரிவித்துள்ளார். எப்போதாவது அவர் தலித்துகளையோ அல்லது பழங்குடியின கிறிஸ்தவர்களையோ சந்தித்து இருக்கிறாரா?
அநேகமாக, அம்பேத்காரின் ‘சாதி ஒழிப்பு’ என்ற புத்தகத்தை மண்டல் படித்திருப்பார் என்று கருதுகிறேன். அதில், ”பழங்குடியினர் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்பதை இந்துக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நாகரிகம்,மருத்துவ உதவி, சீர்திருத்தம் மற்றும் அவர்கள் நல்ல குடிமக்களாக மாற எந்த முயற்சியும் செய்யவில்லை. பழங்குடியினத்தவருக்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செய்ததைப் போல், இந்துக்கள் செய்ததுண்டா? சாதியை காப்பாற்றுவதற்காகவே இந்துக்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்” என்று அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் இருந்தால், கிறிஸ்தவ மக்கள் தொகை 3 சதவிகிதத்துக்குள் இருப்பது ஏன்? என்று திலீப் மண்டல் உள்ளிட்ட பலர் விமர்சிக்கின்றனர். நல்லவேளை, தாய் மதத்துக்கு திரும்புவதால் தான் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அவர்கள் கூறவில்லை. அநேகமாக அவர்கள் எழுப்பும் கேள்வி, இந்தியாவில் பார்சி மக்கள் தொகை குறைந்ததற்கும் பொருந்தும். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததற்கு, மதமாற்ற செய்ய தவறியதே காரணம் என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்புகிறார் பிலிப் ஜென்கின்ஸ். இந்த கணக்கெடுப்பு உலகிலேயே ‘சிறந்த கற்பனை’ என்கிறார். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்றும், இந்த எண்ணிக்கை என்பது ஆய்வாளர்கள் கணிப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதற்கு தீவிர இந்து அமைப்புகளே காரணம் என்று பிலிப் ஜென்கின்ஸ் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்தவர்களின் வலுவான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கு, உள்ளூர் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் உடந்தையாக இருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் அல்பேனியாவிலிருந்து வந்த அன்னை தெரஸா செய்த சேவை மறக்க இயலாது. உடல்நலம் பேணுதல் மூலம் ஏழை மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். மதமாற்றம் குறித்த விவாதங்களில் இருந்து விலகியே நின்றவர். ”உங்களை நல்ல இந்துவாக, நல்ல கிறிஸ்தவராக, நல்ல முஸ்லீமாக மாற்றம் செய்கிறேன்” என்று கூறி மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.
1970 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஏதும் செயல்படவில்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ உயரதிகாரிகளின் உத்தரவுப்படியே இந்திய தேவாலயங்களும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் இயங்கின. அதோடு, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் விடுதலைப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதை வரலாறு சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது.
கட்டுரையாளர்: ஜேசுதாஸ் மாத்யூ அத்யால்
(பாஸ்டன் பல்லைக்கழக உலக கிறிஸ்தவர்கள் மையத்தின் சிறப்பு ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார். கேம்பிரிட்ஜ் ஹார்டுவர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர்.)