அயோத்தி வழக்கை விமர்சித்த பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அனுமதி மறுத்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ‘வகுப்புவாதத்துக்கு எதிரான கலைஞர்கள்’ என்ற கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகை ஸ்வரா பாஸ்கெர் பேசும்போது, ‘பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், மசூதியை இடித்தவர்களுக்கே சாதகமாக தீர்ப்பளிக்கிறது. இத்தகைய தீர்ப்பை அளித்த நீதிமன்றம் இருக்கும் நாட்டில் தான் நாம் வாழ்கின்றோம். நமது நீதிமன்றங்கள் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனவா? இல்லையா? என்று உறுதியாக தெரியாத சூழலில் தான் நாம் இருக்கிறோம்’ என்றார்.
மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி பெற்ற மேஹக் மகேஸ்வரி உள்ளிட்ட பா.ஜ.க வை சேர்ந்த வழக்குரைஞர்கள் தான், இந்த வழக்கிலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீதும் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மனு செய்தனர்.
1971 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் கீழ், ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமானால், அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரிடம் அனுமதி பெறவேண்டும். அந்த வகையில், ஸ்வரா பாஸ்கெருக்கு எதிராக நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு பா.ஜ.க வழக்குரைஞர்கள் குழுவினர் சமர்ப்பித்த மனுவை, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நிராகரித்தார்.
மனு தாக்கல் செய்தவர்களில் ஒருவரான அனுஜ் சக்சேனா என்பவருக்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ உச்ச நீதிமன்றம் குறித்து ஸ்வரா பாஸ்கெர் கூறிய கருத்துகள் அவதூறானவையோ அல்லது அவதூறு போன்றவையோ அல்ல. நீதிபதிகளை களங்கப்படுத்தியதோ அல்லது நீதிபதிகளை களங்கப்படுத்தியது போன்றதோ அல்ல. இந்த கருத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றம் மீது அவதூறு பரப்பியதற்கான வழக்கோ அல்லது நீதிபதிகளை களங்கப்படுத்தியதற்கான வழக்கோ இது அல்ல. எனவே, ஸ்வரா பாஸ்கெருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஸ்வரா பாஸ்கெர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, சொலிசிட்டர் ஜெனரலை அணுக பா.ஜ.க ஆதரவு வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.