கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியின் விவாத நேரடி ஒளிபரப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி கலந்து கொண்டார். அப்போது விவாதத்தின் போது உணர்ச்சிவயப்பட்ட அவர், ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உடல்நலம் குன்றி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற காட்சி ஊடகங்களின் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது அபாயகரமான செயல்பாடு என்றும் அகமது பட்டேல் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவாதத்தின்போது, ராஜீவ் தியாகிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ராவை கைது செய்யுமாறு சில கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடந்தது என்ன?
பெங்களூரு கலவரம் குறித்து ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணிக்கு ராஜீவ் தியாகி வீட்டிலிருந்தபடி பங்கேற்ற காணொலி விவாதம் தான் அவரது கடைசி நிகழ்ச்சியாக முடிந்தது. தொலைக்காட்சி விவாதத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டதால், ராஜீவ் தியாகியை அவரது குடும்பத்தினர் கெய்ஜாபாத்தில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைக்குப் பின்பும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகமது பட்டேல், ”இத்தகைய விவாதங்களின் அர்த்தமற்ற, நச்சுத் தன்மையுடைய அபாயகரமான செயல்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி தொலைக்காட்சி ஆசிரியர்களும், நெறியாளர்களும் யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சில சமயங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை, துப்பாக்கிக் குண்டுக்கு இணையானதாக இருக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பந்தி தமது ட்விட்டர் பதிவில், ”விவாதத்தில் தியாகியைப் பார்த்து பத்ரா பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். விவாதத்தின்போது, ராஜீவ் தியாகியைப் பார்த்து பத்ரா பேசும் மோசமான வார்த்தைகளைப் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
”நெற்றியில் பொட்டு வைப்பதால் ஒருவர் உண்மையான இந்துவாக மாறிவிடமாட்டார். நீங்கள் நெற்றியில் பொட்டு வைக்க விரும்பினால், இதயப்பூர்வமாக வைக்க வேண்டும்” என்று பாஜகவின் பத்ரா பேசினார். பெங்களூருவில் வீடு எரிப்புக்கு யார் காரணம் என்று கூற உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேட்டார்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, நோயாளிகள் மற்றும் மிதமான குரலில் உரையாடுவோரின் உயிர்களை, எவ்வளவு காலத்துக்கு நச்சுத் தன்மைவாய்ந்த விவாதங்களும், விஷத்தை கக்கும் நெறியாளர்களும் பறிக்கப்போகிறார்களோ? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் எழுதியுள்ள கடிதத்தில், அவதூறு, பரபரப்பு மற்றும் நச்சு கலந்த தொலைக்காட்சி விவாதங்களை கட்டுப்படுத்த ஊடகங்களுக்கு நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
”பார்ப்போரின் காதுகளின் ஜவ்வு கிழியும் அளவுக்கு விவாதங்களில் பங்கேற்போரை சூடாக்கி கத்தவிடும் விளையாட்டை காட்சி ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், குறிப்பாக, பாஜகவின் பத்ரா போன்றவர்களை ஊக்குவிப்பதையும் தவிர்க்க வேண்டும்” என்று இளைஞர் காங்கிரஸின் தேசிய பிரச்சாரக் குழு பொறுப்பாளர் ஒய்.பி. ஸ்ரீவத்சவா கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துமீறி போய்க் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் விவாதங்களுக்கு, ராஜீவ் தியாகியின் மரணமாவது முற்றுப்புள்ளி வைக்குமா?