அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட், 24 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 11 மணியளவில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் இணைய வழியாக 53 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நடைபெறுகிற சூழலில், மூத்த காங்கிரஸ் தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்னை சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. இதையொட்டி அன்று நாள் முழுவதும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடக்கிற அதே நேரத்தில் தொலைக்காட்சிகளில் இக்கடிதம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன. இக்கடிதத்தை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரமாக பணியாற்றக் கூடிய தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றது.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 53 பேரும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இதில் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களும் அடங்குவார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து நாளேடுகளிலும், ஊடகங்களிலும் செய்தி வெளிவந்திருக்கிறது. அதனடிப்படையில் யார், யார் என்ன பேசினார்கள்? என்பது கீழே தரப்பட்டுள்ளது.
சோனியா காந்தி: இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் என்னை எவ்வளவு புன்படுத்தியிருந்தாலும், கட்சியின் அமைப்பிலும் தலைமையிலும் மாற்றம் செய்யவேண்டும் என்று கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியும். காங்கிரஸ் கட்சி என்பது பெரிய குடும்பம். நம்மிடையே கருத்து வேறுபாடுகளும், பல பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துகளும் உண்டு. இறுதியில்,நாம் ஒருவராகவே வருவோம். இந்திய மக்களுக்காகவும், இந்த நாட்டிற்கு தோல்வியை ஏற்படுத்திய சக்திகளுக்கு எதிராகவும் இந்த நேரத்தில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்தி: இந்த கடிதம் எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. பலவீனமாக இருக்கும் நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். அவர் என் தாயும் கூட. கட்சித் தேர்தலுக்கு கால அளவை நிர்ணயிப்போம். அதற்கான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுவோம்.
பிரியங்கா: காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி ஆன்லைனிலும், நேரிடையாகவும் நடக்க வேண்டும்.
கே.சி.வேணுகோபால்: சூழ்நிலை அனுமதித்தால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் விரைவில் கூட்டப்படும்.
அகமது பட்டேல்( அதிருப்தியாளர்களை நோக்கி): நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் கூட்டுத் தலைமை என்றால் என்ன? விமான நிலையத்தில் பாபா ராம்தேவை நீங்கள் சந்தித்தபோது, கூட்டுத் தலைமை எங்கே போனது? காங்கிரஸ் தலைவரிடமோ அல்லது அப்போதைய பிரதமரிடமோ அனுமதி பெற்றீர்களா? காந்தி குடும்பம் குறித்தும் அவர்கள் வழிகாட்டும் விளக்காக விளங்குவதை குறைக்கும் வகையிலும் நீங்கள் அப்படி ஒரு கடிதத்தை எப்படி அனுப்பலாம்?
அம்பிகா சோனி: கட்சித் தேர்தல் அறிவித்ததும், போட்டியிட விரும்புவோர் போட்டியிடலாம். தமக்கு எதிராக கட்சி தேர்தலில் நின்ற ஜிதேந்திர பிரசாத்தை பொதுச் செயலாளராக ஏன் நியமித்தீர்கள் என்று சோனியா காந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர், ஜிதேந்திர பிரசாத் சட்டப்படி என்னை எதிர்த்துப் போட்டியிட்டார். அதற்காக அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டமாட்டேன் என்று சொன்னார்.
ஜிதின் பிரசாத்: முடிவு எடுப்பதில் நான் தவறு இழைத்துவிட்டேன். இதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டியின் நடவடிக்கைக்கு உட்பட தயாராக இருக்கின்றேன். ஆனால், இங்கே சிலர் என் தந்தையை மேற்கோள் காட்டுகின்றனர். இறுதி மூச்சு இருக்கும் வரை அவர் காங்கிரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
ராஜீவ் சதவ்: உங்களது தற்போதைய நிலையை சிந்திக்க வேண்டும். நீங்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்தபோது, எந்த அளவுக்கு கூட்டுத் தலைமை மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள்?. இளைஞர் காங்கிரஸில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் எல்லாம், இது போன்ற கடிதத்தை அனுப்பியதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
ரன்தீப் சுர்ஜிவாலா: ஒரு நாள் முன்பு தான் இந்த கடிதம் வெளியாகியது. பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட ஒருவர் இந்த கடிதத்தையும், கையொப்பமிட்டவர்கள் குறித்த விவரத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சர்மா: யார் அந்த சஞ்சய் ஜா? அந்த ஆளை எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்ததும் இல்லை. அந்த ஆளிடம் நான் பேசியதும் இல்லை.
ஆர்பிஎன் சிங்: எதுவாக இருந்தாலும், எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அவர்களது பிரச்சினைகள் அல்லது ஆலோசனையை யாரும் கேட்கவில்லை. சோனியா காந்தியின் அணுகுமுறையை பின்பற்றியதால் இங்கு பலர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேறுவார்கள்.
முகுல் வாஸ்னிக்: எதுவாக இருந்தாலும் சோனியா காந்திக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றேன். என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் என் நோக்கத்தின் மீது சந்தேகப்படாதீர்கள்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: நான் அரசியலுக்கு வந்தபோது ராஜிவ் காந்தி எங்களுக்கு கடவுள் போல் இருந்தார். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கட்சிக்கு புத்துணர்வு ஊட்ட நன்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் கோரி கடிதம் எழுதியோர் பா.ஜ.க வை கடுமையாக எதிர்ப்பவர்களே: ப.சிதம்பரம்
”அகில இந்திய காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி கடிதம் எழுதியவர்கள், ராகுலையும் என்னையும் போல் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பவர்களே” என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் பின், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.
நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர்கள் என்ற ராகுலின் கருத்து பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், ”அதிருப்தி என்பது எப்போதுமே இருக்கும். அதிருப்தி குறித்து மனதில் பட்டதை பேச வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ராகுல் காந்தியின் கருத்து என்று உலவும் செய்தி, ஊடகங்களால் பற்ற வைக்கப்பட்ட நெருப்பு” என்றார். தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் தன்னைப் போல் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பவர்கள் என்பதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.
நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி, 23 மூத்த தலைவர்கள் தலைமைக்கு எழுதிய கடிதம் குறித்து விவாதிக்கவே காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிவித்த அவர், ”அதில் கலந்து கொண்டவர்கள் நிரந்தரத் தலைவரை நியமிப்பது குறித்தும், கட்சியை வலுப்படுத்த கூட்டு தலைமையின் வழிகாட்டுதல் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவது குறித்தும் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்” என்றார். இறுதியில், 23 தலைவர்கள் எழுதிய கடிதத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதில் தலைவர்கள் வெளிப்படுத்திய கவலைகள் தீர்க்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.
” அதிருப்தி என்பது எப்போதும் இருக்கும். சில அதிருப்திகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய சிதம்பரம், அதிருப்தியே இல்லை என்றால் மாற்றம் நிகழாது” என்றார்.
”கருத்துகளை தெரிவிக்கும்போதுதான், அதற்கான விடையும் கிடைக்கும்” என்று குறிப்பிட்ட அவர், “அத்தகைய கருத்தை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரைந்து நியமிக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டார்கள். “கட்சி அமைப்புகளில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில், விரும்பிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சோனியா காந்திக்கு அதிகாரம் அளிப்போம் என்றும் அவர்கள் கூறியதாக” சிதம்பரம் தெரிவித்தார்.
” எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நான் சொல்லவில்லை. கடலில் எழும் அலைகள் என்றைக்காவது அமைதியாக இருந்ததுண்டா?. அலை இல்லை என்றால், அது சவக்கடலாக இருக்கும். எப்போதும் சில கேள்விகள், அதிருப்திகள் இருக்கும். ஓர் அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது. மேலும் கட்சி கூடுதல் வீரியத்துடனும், சுறுசுறுப்புடனும் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்” என்றும் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.