❈
புவியோடிப் படர்ந்ததிருக்கும்
நவகோடித் தமிழினமே
கார்மேகமாய் வாழ்ந்த காமராசா
கவிபாடி வணங்கினேன் கர்மவீரா
❈
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
உன்னதத்தின் பிதாமகன்.
ஊசியால் இமயத்தை நெம்பிய
உள்ளங்கையின் மகத்துவம்.
❈
ஆடுமாடு மேய்த்த அரும்புகளை
ஏடு படிக்க வைத்த எம்பெருமான்.
வயிற்றுக்கு சோறிட்டு வகைசெய்து
பயிற்றிக் கல்வி தந்த பகலவன்.
❈
தீண்டாமைப்பேயை தீயில்பொசுக்கி,
ஊரார் பிள்ளைகளை ஒன்றாக்கி,
பாசறையாக பள்ளிகளை ஆக்கி
சமதர்மம் நாட்டிய சாதனையாளன்.
❈
ஊர்கள்தோறும் பள்ளிக் கூடம்
உதயமானது புதிய சமூக பாடம்.
கண்கள் திறந்தன! காலம் மாறின!
புண்கள் ஆறின! பூசல் போயின!
❈
கல்லாமை இல்லாமை அறியாமை
காணாமல் செய்த கலங்கரை விளக்கு.
பாசனத்திற்காக பற்பல அணைகள்
தேசம் வாழ செய்தொழிலே கணக்கு.
❈
படிக்காமல் பாராண்ட பாரதத் தீ!
வெடித்தால்தான் பாறைவாய் திறக்கும்
விதைத்தால்தான் புதியவிதை கிடைக்கும்.
விதைக் கோட்டை ஆன வித்தகன்.
❈
கருப்பு தேகத்தில் ஒரு நெருப்பு நிலா
உருவத்தில் ஒளிர்ந்தது உழைப்பு உலா
காமராசர் காலம் கொடுத்த நிழல்
தமிழ்மண்ணின் ஏமம்படைத்த அழல்
❈
ஆதிக்கங்களை முறியடித்த சூத்திரம்.
அரசியலில் இவரே துருவ நட்சத்திரம்.
ஆட்சியில் ஒளிர்ந்த எரிநட்சத்திரம்.
ஆண்டவர்களில் வரலாற்றுச் சித்திரம்.
❈
சமுதாய மேடுபள்ளத்தை உழவு செய்து
சாதிகளின் ஆதிக்கத்தை பழுது பார்த்து
ஆட்சிக்கு இலக்கணம் வகுத்த அறிவுஜீவி.
மக்கள் மீட்சிக்கு மருந்தான சஞ்சீவி
❈
அழிபசி தீர்த்தலின் அவசியத்தேவை
உற்றுழி உதவி உயர்த்திய மேதை
அசுரப்பாய்ச்சலில் பாசனம் தொழில்கள்
உசரம் தொட்ட உயரிய தலைவன்
❈
இலக்குகள் நோக்கிய திட்டங்கள்
இன்றைய தமிழகத்தின் கட்டகங்கள்.
நெடுநோக்கில் இமயவெற்பு
தடம்பதித்த தமிழக நெருப்பு.
❈
நேர்மையே இவரது தேசிய கீதம்
சொல்றேண்ணேன் என்ற சொல்மேகம்
“ஆகட்டும் பார்க்கலாம்” இது ஆயுர்வேதம்
தனக்கென வாழாத தலைமைக் கீதம்
❈
முழங்கால் தொடும் சட்டை பிறர்
முழந்தாள் தொடாத தன்மானம்.
ராசாக்களை உருவாக்கிய ராசா
பெருந்தலைவரான கருப்பு ரோசா.
❈
தொண்டுக்குத் தொண்டான தலைவன்.
பொன்னை பெண்னை விடுத்து
மண்ணை மணம் செய்த பீஷ்மன்.
வான் மழையாய் வாழ்ந்த முதல்வன்
❈
இந்தியத்தின் இதயத் துடிப்பு.
ஏழைகளின் நாடித் துடிப்பு.
தமிழினத்தின் எளிய படைப்பு.
தமிழக அரசியலில் புதிய பதிப்பு.
❈
இல்லானும் கல்லானும் எவருமில்லை
மனிதப் பூ மலர வைத்த மானுடப்பூ.
இந்தியாவின் ஆன்மாவுக்கு குறியீடு.
எந்நாளும் வரலாற்றின் பொன்னேடு.