காமராஜர் என்பது, தலைவர் தாங்கி நின்ற உருவத்திற்கான பெயர்ச்சொல் அல்ல, காமராஜர் என்பது, அவர் காத்துநின்ற தத்துவத்திற்கான வினைச்சொல்.
விருதுப்பட்டியில் எளிய தொண்டனாய் காங்கிரசை வளர்க்கத் துவங்கிய காமராஜ், அகில இந்திய காங்கிரஸ் தலைவராய் உயர்ந்தார். வரலாற்றின் எந்த தருணத்திலும். அவர் காங்கிரசை விட்டுக் கொடுத்ததேயில்லை.
கட்சி நடவடிக்கைகளில் மகாத்மா காந்தி அடிகளாலேயே விமர்ச்சிக்கப்பட்டவர். அவர், ஆனால் காங்கிரசை காத்து நின்றவர்.
இந்திய விடுதலைக்குப்பின் தேச வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட காங்கிரஸ் அரசுகள், இயக்கத்தை கட்டமைப்பதில் தகுந்த கவனம் செலுத்தாததை சுட்டிக்காட்டி 1964-ல் தலைவர் காமராஜர் அவர்கள் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் முன்வைத்த காங்கிரஸ் சீரமைப்பு திட்டம் அவர் பெயராலேயே ‘காமராஜ் திட்டம்’ (K-Plan) என வழங்கப்பட்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிகாரப் பதவிகளைத் துறந்து இயக்கப் பனிகளில் ஈடுபடலாயினர் அதன்படி தலைவர் காமராஜரும் தமிழக முதலமைச்சர் பதவியைத் துறந்து இயக்கப் பணிக்குச் சென்றார்,
இந்தியாவின் மத்திய அரசும், பல மாநில அரசுகளும் காங்கிரஸ் வசம் இருந்த போதும், மக்கள் மனங்களில் விடுதலைப் போராட்ட கால காங்கிரஸ் இல்லாததை உணர்ந்து காங்கிரஸின் போர் குணம் திரும்ப வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே காமராஜ் திட்டம்.
ஜெயபிரகாஷ் நாராயணன் அன்றைய ஜனசங்கமான இன்றைய பாரதீய ஜனதா கட்சியை அன்னை இந்திராவுக்கு எதிரான தனது போராட்டத்தில் இணைத்துக் கொண்டபோது ‘நாளை நானும், நீயும் இருக்கமாட்டோம். காங்கிரஸ் இருக்கவேண்டும்’. என தீர்க்க தரிசனத்தோடு எச்சரித்தவர்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதை தானே இன்றைய பி.ஜே.பி. சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தலைவர் காமராஜரின் ஆழ்மனதை காங்கிரஸ் தொண்டர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
1967 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்து ஆட்சி பறிபோனது, தலைவர் காமராஜரும், விருதுநகரில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதற்கடுத்த 22 மாதங்களில் வந்த நாகர்கோவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக காங்கிரஸ்க்கு மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கினார்.
1967-1971 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறாமல் போனாலும், அந்த தோல்விகள்தான் மாபெரும் மக்கள் தலைவராய் காமராஜரை தமிழக மக்கள் மனங்களில் ஏற்றிவைத்தது. அதுதான் இன்று வரை தொடர்கிறது.
அறம் சார்ந்த பொதுவாழ்வு – ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகள் – தூய தொண்டுள்ளம் – தீவிரமான கட்சிப் பணிகள் – இதுதான் பெருந்தலைவர் விட்டுச்சென்ற கொள்கைகள்.
அது நாமக்கல்லில் பெருந்தலைவரின் இறுதி சொற்பொழிவு. நாமக்கல் நகர காங்கிரஸ் தேர்தல் நிதியாக 25000 ரூபாய் கொடுத்தது, அப்போது நான் தனியாக நிதி திரட்டி 1005 ரூபாய் அவரிடம் கொடுத்த போது, மகிழ்வாக பெற்றுக்கொண்டு அன்றைய சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் இந்த மாணவனையெல்லாம் இணைத்துக் கொண்டு உங்களால் கட்சி செய்ய முடியாதா? என்று எனக்காக கேள்வி கேட்டவர்.
காமராஜர் ஆட்சி என்கிறோம். காமராஜரால் நடைபயின்ற காங்கிரசை முதலில் நாம் உருவாக்குவோம்.
அன்னை சோனியாவின் தலைமையிலான காங்கிரசை மதிப்போம். அவரால் நியமனம் பெற்றுள்ள தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி வழி நடப்போம்.
பின்னர் காமராஜர் ஆட்சி அமைப்போம். இதுவே காமராஜரை உணர்ந்தோரின் இதயக் குரலாக இருக்கும்.
பெருந்தலைவர் காமராஜர் பற்றிய அருமையான செய்திகளை அனுபவித்து வெளியிட்டுள்ளார் இன்றைய இளைஞர்களுக்கு கட்டுரை நல்ல வழிகாட்டுதல்களை உருவாக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை காங்கிரஸ் இயக்கம் வளர்ச்சிக்கு இது உதவும்