மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். தமிழ்நாட்டுல மட்டும் தான் மின்சார பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கும்…அந்த அளவுக்கு மக்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3 மாதங்கள் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாத அரசுகள், அவர்களிடம் இருந்து சுரண்டுவதிலேயே குறியாக இருக்கின்றன. இதற்கு சரியான உதாரணம் மின் கட்டண வசூலிப்பு முறைதான்.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கால் மார்ச் 20 முதல் மே 20 ஆம் தேதி வரை மின் கணக்கீடு செய்யப்படவில்லை. மே-,-ஜுன் மாதங்களில் எடுத்த அளவை, மின்வாரியம் கணக்கிட்ட முறை, கணக்கீட்டுத் தவறுகள் மற்றும் ஊரடங்கால் குடும்பமே வீடுகளில் முடங்கியது போன்ற காரணங்களால் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து விட்டது.
1990 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக இருந்தது. அதன்பின்னர், மின் வாரியத்தில் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறு, முறைகேடுகளால் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது.
மின் வாரிய இழப்பை சரிகட்ட இன்றளவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்தபோதும், விதிகளுக்கு மாறாக அதிக விலை கொடுத்து வாங்கும் போக்கு இன்றும் உள்ளது. இதுபோன்ற முறைகேடுகளால் மக்கள் மீது மின் கட்டண சுமையை தமிழக அரசு ஏற்றிவைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கால் கணக்கீடு செய்ய முடியவில்லை என்று கூறி, மார்ச்-ஏப்ரல் மற்றும் மே -ஜுன் என இரண்டாகப் பிரித்து இரு கட்டண தொகையை கணக்கிட்டு, அதில் இருந்து முன்பு கட்டிய தொகையை கழித்துவிட்டு மீதியை கட்ட வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறது மின் வாரியம்.
உதாரணத்துக்கு, டிசம்பர் முதல் பிப்ரவரி வரை 200 யூனிட்கள் பயன்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம். முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை. 101 முதல் 200 யூனிட்களுக்கு ரூ. 150, நிலைத் தொகை ரூ.20 என, மொத்தம் ரூ.170 என மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல், ஜுன் மாதத்தில் 430 யூனிட்கள் பயன்படுத்தியிருந்தால், முதல் 100 யூனிட்கள் கட்டணம் இல்லை. 201 முதல் 215 வரை ரூ.45 மற்றும் நிலை கட்டணம் ரூ.30 என மொத்தம் ரூ.275 என கணக்கிடப்படுகிறது.
இதனை எப்படி கணக்கிடுகிறார்கள் தெரியுமா?
ஏப்ரல்-ஜுன் மாதத்துக்கான கட்டணம் ரூ.275- ஐ இரண்டு மடங்காக கணக்கிட்டு அதாவது, ரூ.550 என நிர்ணயிக்கின்றனர். இந்த தொகையில் இருந்து டிசம்பர்-பிப்ரவரி மாத தொகை ரூ. 170- ஐ கழித்து, மீதம் வரும் ரூ. 380 தான் கட்ட வேண்டிய பில் தொகை என கூறுகின்றனர்.
பழைய கணக்கீட்டின்படி, எவ்வளவு யூனிட்களுக்கு கட்டணம் கட்டியிருக்கிறார்களோ, அந்த யூனிட்களை மொத்த 4 மாத யூனிட்களில் இருந்து கழிப்பதுதான் சரியான நடைமுறை. இவ்வாறு கணக்கிடும் போது ஒரு கட்டண காலத்தின் மின் கட்டணம் மட்டும் அதிகமாக இருக்கும். மார்ச்-,ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு எடுக்காததால், உபயோகப்படுத்திய யூனிட்கள் பற்றி தெரியாத நிலையில் இதுதான் சரியானதாக இருக்கும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இது தொடர்பாக மின்சார வாரியத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மின் கணக்கீட்டை விதிகளுக்கு உட்பட்டே மின்சார வாரியம் செய்துள்ளதாகவும், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கீட்டை செய்ய முடியாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு காலத்தில் கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசால் முடியும்.
கொரோனாவாவது ஒன்றரை லட்சம் பேரை மட்டுமே வாட்டி வதைக்கிறது. ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியமோ தமிழகத்தின் 8 கோடி மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.