கோயம்புத்தூர் அடுத்த வரப்பாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள பசுமையான வயல்களும் அழகிய மலைகளும், அந்த கிராமத்தில் வாழும் விவசாயிகளின் துயரம் கலந்த வாழ்க்கையை மறைத்துக் கொண்டிருக்கின்றன.
கொரோனா தொற்றும், அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமும் விவசாயிகளையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் புரட்டிப் போட்டுவிட்டன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல, பிரதமர் கிசான் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளால், எவ்வித பலனையும் அடைய முடியாமல் தவிக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.
அந்தவகையில், ”மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காததால், காலத்தை தள்ளுவது கடினமாகிவிட்டது” என்று வேதனையுடன் கூறுகின்றனர் வரப்பாளையம் விவசாயிகள். பிரதமரின் கிசான் (விவசாயி) திட்டத்தின் கீழ் பயன்களை பெற விரும்பி அலையாய் அலைகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் ஒன்றே மிஞ்சுகிறது.
வரப்பாளையம் கிராம மக்கள் மேலும் கூறும்போது, ”தேசிய வங்கிகளுக்கு சென்று கிசான் அட்டை பெறச் சென்றால், பயிர்க்கடன் வாங்கினால் தான் கிசான் அட்டை கிடைக்கும் என்கிறார்கள். வங்கியில் வட்டி 8 சதவிகிதம் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? கூட்டுறவு சொஸைட்டியில் இதை விடக் குறைந்த வட்டியில் கடன் பெற்றுள்ளோம். கூட்டுறவு சொஸைட்டியிலிருந்து எங்களுக்கு கிசான் அட்டை ஏன் தரக்கூடாது? நாங்கள் பலமுறை முயற்சித்தோம்.
ஆனால், அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட உரத்தை வாங்கினால் தான் கிசான் அட்டை கிடைக்கும் என்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால், நாங்கள் கேட்கும் உரத்தை கூட்டுறவு சொஸைட்டியில் தர மறுக்கிறார்கள். கடந்த 2 மாதங்களாக போராடி சிலர் கிசான் அட்டை பெற்றுவிட்டோம். கிசான் அட்டை பெற்றவர்களுக்கு விவசாயிகளுக்கான மத்திய அரசு அறிவித்த உதவித் தொகை ரூபாய் 6 ஆயிரம் கிடைக்கவில்லை ”என்றனர்.
பொது முடக்கத்துக்குப் பின், வேலை வாய்ப்பிழந்த தினக் கூலித் தொழிலாளர்களிடம், ஆதார் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை இடைத்தரகர்கள் வாங்கிச் சென்றனர். ரூபாய் 2 ஆயிரமும் உடனே வந்தது. ஒவ்வொருவரிடமும் கமிஷன் தொகையாக தலா ஆயிரம் ரூபாயை இடைத் தரகர்கள் பெற்றனர். பிரதமரின் கிசான் திட்டத்தில் நாம் சட்டவிரோதப் பயனாளிகள் என்பதை அந்த தொழிலாளர்கள் இன்னும் அறியவில்லை.
தினக் கூலித் தொழிலாளர்களான இவர்கள் விவசாயிகளோ அல்லது விவசாயக் கூலித் தொழிலாளர்களோ இல்லை. இருந்தாலும், அவர்களுக்கு விவசாயிகளுக்கான உதவித் தொகை கிடைத்திருக்கிறது. இதுபோன்று, விவசாயத் துறையை சாராதவர்களின் ஆவணங்களை வாங்கி, வங்கியில் போலி கணக்கு தொடங்கி, பிரதமரின் கிசான் திட்டத்தில் கமிஷன் பெறும் மோசடி தமிழகம் முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் பெரும் கும்பல் செயல்படுகிறது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடலூரில் மட்டும் இதுபோன்று 38 ஆயிரம் போலி கணக்குகளை தொடங்கி அதிகாரிகள் மோசடி செய்துள்ளது, வங்கிக் கணக்கு ஆய்வின்போது அம்பலமாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் வரை, பிரதமரின் கிசான் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 79 ஆயிரம் பயனாளிகள் இருந்தனர். அதன்பிறகு, புதிதாக 80 ஆயிரத்து 752 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் ஜுலை 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினரைக் கொண்ட இணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் கடலூர் மற்றும் மேலும் 12 மாவட்டங்களில் விசாரணை நடத்தவுள்ளனர். விசாரணை நடைபெறவுள்ள மாவட்டங்களில் பிரதமரின் கிசான் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவு நடைபெற்றுள்ளன. இந்த மோசடிக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தினரும் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கர்மாங்குடி வெங்கடேசன் கூறும்போது, ”கடலூர் மாவட்டம் கர்மாங்குடி கிராமத்தில் மட்டும் மொத்தமுள்ள 474 பயனாளிகளில் 172 பேர் போலிகள். பள்ளி குழந்தைகள், குடும்பத் தலைவிகள் மற்றும் விவசாயம் செய்யாதவர்கள் பெயரில் எல்லாம் வங்கியில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. என் தாய் பெயரில் ஒரு சர்வே எண்ணும், என் மனைவி பெயரில் ஒரு சர்வே எண்ணும் உள்ள நிலத்தை காட்டி அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க முயற்சித்தேன். இது தொடர்பாக அவர்கள் கேட்ட மேலும் சில ஆவணங்களை கொடுத்த பிறகு தான் என் தாய் மற்றும் மனைவி பெயரில் கணக்கு தொடங்கினேன். முறையான ஆவணங்கள் இருக்கும் எங்களிடம் கெடுபிடி காட்டும் அதிகாரிகள், விவசாயிகள் அல்லாதோருக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகையை எப்படி வழங்கினார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் அரசும் மக்களும் கொரோனா பீதியில் இருந்தனர். ஆனால் பொதுச் சேவை மையங்கள் தான் விழித்துக் கொண்டிருந்தன. பிரதமரின் கிசான் திட்டத்தில் எப்படி பணம் பண்ணுவது என்று யோசிக்கத் தொடங்கினர். கள்ளக்குறிச்சியில் உள்ள பொது சேவை மையம் குறித்து இடதுசாரிகளும், விவசாயிகளும் புகார் அளித்தனர். வருவாய் அதிகாரிகள் சீல் வைத்தபின் தான் முறைகேடுகள் குறித்த விவரம் வெளியே தெரியத் தொடங்கியது. தகுதியற்றவர்களுக்கு கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற இந்த மையம் போலியான ஆவணங்களை தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த பொது சேவை மையத்தின் மூலம் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விவசாயத்துறை இணை இயக்குனர் வேலாயுதம் கூறும்போது, ”கள்ளக்குறிச்சியில் மட்டும் பாதி பயனாளிகள் போலிகள் என்று தெரியவந்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இவர்களில் 75 ஆயிரம் பயனாளிகள் போலிகள் என்று தெரியவந்துள்ளது. பொதுச் சேவை மையங்களுக்கு கணினி ரகசியக் குறியீட்டு எண்ணை வழங்கியதாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் பணியாற்றிய 3 உதவி இயக்குனர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இது குறித்து சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் கூறும்போது, ”இந்த முறைகேட்டின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளியை ஓரிரு நாட்களில் சிக்குவார். போலி கணக்குகள் மூலம் பெறப்பட்ட பணம் வசூலிக்கப்படும். அரசுக்கு இழப்பு ஏற்பட விடமாட்டோம்” என்றனர்.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்தது. உண்மையான விவசாயிகளே அத்துனை ஆவணங்களையும் சமர்ப்பிக்க சற்று திணறும் நிலைமையே ஏற்பட்டது. அப்படியிருக்க, விவசாயிகள் அல்லாதோர் வங்கிகளில் எப்படி போலி கணக்கு தொடங்கினார்கள்?
விவசாயிகளின் வயிற்றில் அடிப்பவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேசமயம், இந்த திட்டம் விவசாயிகளுக்கு சரியாகப் போய் சேர்கிறதா? என்பதை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதையே இந்த முறைகேடுகள் பறைசாற்றுகின்றன.