- விவசாயிகளோ, விவசாய சங்கங்களோ கோரிக்கை வைக்காத நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு அவசர, அவசரமாக வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது ஏன் ?
- இனி விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை பெருமுதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும். இதன்மூலம் விவசாயிகளின் சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மத்திய பா.ஜ.க. அரசு ஒப்படைத்திருக்கிறது. இதைவிட விவசாய விரோதப் போக்கு என்ன இருக்க முடியும் ?
- விவசாயிகளின் விளை பொருட்களை விற்பதற்காக நடைமுறையில் இருந்த விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு தனியாரின் கார்ப்பரேட் சந்தைகளின் ஆதிக்கத்திற்கு பா.ஜ.க. அரசு வழிவகுத்திருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாய விலை மறுக்கப்பட்டுள்ளது.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விவசாயம் முழுக்க முழுக்க மாநில பட்டியலில் உள்ளது. இதன்மீது சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது ஏன் ? இதன்மூலம் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கலாமா ?
- மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் அம்பானி மற்றும் அதானிகளிடம் விவசாயிகளை கொத்தடிமைகளாக அடகு வைப்பது ஏன் ? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியதை எவராவது மறுக்க முடியுமா ?
- மொத்த விவசாயிகளில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளவர்கள் 86 சதவிகிதத்தினர். 94 சதவிகித விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்க சந்தை குழுக்களை நம்பியிருக்கவில்லை. தங்கள் விளை பொருட்களை வெளி சந்தையில் எவருக்கு விற்றால் லாபகரமாக இருக்குமோ, அவர்களிடம் சுதந்திரமாக விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த நடைமுறையை முடக்குவது ஏன் ?
- வேளாண் சட்டத்தின் மூலம் ஒப்பந்த சாகுபடியை புகுத்துவது விவசாயிகளின் உரிமையை பறிக்கிற செயல் அல்லவா ? ஏற்கனவே, கரும்பு விவசாயிகளின் கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் ஒப்பந்த சாகுபடி முறையை எந்த விவசாயியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ளாதது ஏன் ?
- அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டத்தின் மூலம் விவசாய உணவு பொருட்களை பதுக்கினால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி தண்டனைக்கு உள்ளாவார்கள். புதிய திருத்தத்தின் மூலம் பதுக்கலுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கள்ள சந்தை பெருகுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போகலாமா ?
- தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை கிடைக்கிற வகையில் 268 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய வேளாண் சட்டத்தின் மூலம் இவை அனைத்தும் ஒழிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற கடுகளவு கவலையும் இல்லாமல் தானொரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது ஏன் ? மடியில் கனம் இருப்பதால் பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்தை எதிர்க்கிற துணிவில்லையா ? இதைவிட விவசாயிகளுக்கு செய்கிற பச்சை துரோகம் வேறு என்ன இருக்க முடியும் ?
- ஒரே நாடு, ஒரே சந்தை என்பது விவசாயிகளை கொத்தடிமைகளாக மாற்றும் முயற்சியாகாதா ? விவசாயிகளின் விளை பொருட்களை தங்கள் விருப்பம் போல் விற்கிற உரிமையை பறிக்கிற ஜனநாயக விரோத அரசாக பா.ஜ.க. அரசு செயல்படுவது ஏன் ?
- காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்கிற மாபெரும் மாநாடு வெற்றிகரமாக நடந்தது.
- மத்திய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதன்மூலம் பெறப்பட்ட படிவங்களை குடியரசுத் தலைவரிடம் விரைவில் ஒப்படைக்க இருக்கிறோம்.
- நவம்பர் 22 ஆம் தேதி கோயம்புத்தூரில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடும், ஏர் கலப்பை பேரணியும் நடைபெற உள்ளது. இதன்மூலம் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிற வகையில் பெருந்திரளானவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
- நவம்பர் 28 ஆம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் முன்னெடுக்கும் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏர் கலப்பை பேரணி நடைபெற உள்ளது. இதையொட்டி நவம்பர் மாதத்திற்குள் எஞ்சியிருக்கிற சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏர் கலப்பை பேரணி நடத்தப்படும்.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிற வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.
வாருங்கள் கைகோர்ப்போம் !! விவசாயிகளை பாதுகாப்போம் !!
(படங்கள்: திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு நன்றி )