தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையில் ‘திருப்பூர் குமரன் மனைவி இராமாயி அம்மாள் வறுமையில் வாடிய போது காங்கிரஸ் கட்சி உதவி செய்ய முன்வராமல் அவரை மறந்துவிட்டதாக’ குற்றம்சாட்டி எழுதியிருக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., திருப்பூர் குமரன் மனைவிக்கு நிதியுதவி செய்ததைப் பற்றிக் குறிப்பிடும் போது, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை ஏன் சீண்டிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. 1967இல் ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழந்த பிறகு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், எம்.ஜி.ஆரும் இதுபோன்ற உதவிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த உதவிகளைக் கணக்கிடுகிற போது, எம்.ஜி.ஆர். செய்த இத்தகைய உதவிகள் பொருட்படுத்தக்கூடியது அல்ல. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் அவசர அவசரமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இந்திரா காந்தி பயணித்த காரின் பின்னே அ.தி.மு.க. அமைச்சர்கள் சோகமே உருவாய் அவர்களது கார்களில் அணிவகுத்து வந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போலோவில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து விட்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை செய்வதோடு, தேவைப்பட்டால் வெளிநாட்டில் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். பிறகு, எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டுச் சிகிச்சை தேவைப்பட்டதால் விமானத்தையே மருத்துவமனையாக்கி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க வைத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
அதைப்போலவே இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1984 தேர்தலில் அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வேட்புமனு தாக்கலில் கையொப்பமிட்டுத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி. அத்தகைய நன்றிப் பெருக்கை வெளிப்படுத்துகிற வகையில் தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கட்டித் தழுவி கண்ணீர் மல்க உரையாற்றியதை சைதை துரைசாமி மறந்திருக்க முடியாது. தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா படுகொலை செய்யப்பட்டது மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படவில்லை. உடல்நலம் தேறிய சூழலில் ராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்று முதல் முறையாக சந்திக்கிற போது, எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தியுடன் எம்.ஜி.ஆர். சந்தித்த காட்சி அங்கு கூட்டத்தில் திரண்ட மக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அத்தகைய நன்றி உணர்ச்சிமிக்க உறவுகளை வைத்திருந்ததை எல்லாம் மறந்துவிட்டு திருப்பூர் குமரன் மனைவிக்கு செய்த நிதியுதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியலில் பெற்ற வெற்றிகள் எந்தளவிற்கு சாத்தியமாகியிருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். புகழைப் பாடுங்கள். அதற்காக காங்கிரசை இழிவுபடுத்தாதீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.