மனுதர்ம நூலை எதிர்த்து ஏன் போராட வேண்டும்? என்ற விவாதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமீபத்திய போராட்டம் தொடங்கி வைத்துள்ளது. இந்துப் பெண்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் மனுதர்ம நூலைத் தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். மனுதர்மத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர்கள் மகாத்மா புலே, புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் வரிசையில் திருமாவளவனும் சேர்ந்து கொண்டார்.
சனாதனக் கொள்கை, இந்துத்துவா, சாதியக் கொள்கைகளை எதிர்த்துக் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடி வருகிறது.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் பெரியார் மற்றும் அம்பேத்கர் தோழர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பெரியாரும் பெண்ணியமும் என்ற தலைப்பிலான இணைய வழியிலான நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது, பெண்களை அவமதிக்கும் மனுதர்ம நூலைப் பெரியார் விமர்சித்ததைச் சுட்டிக் காட்டினார்.
அவரது முழு உரையில் எந்தப் பகுதியிலும் அவர் தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. திருமாவளவன் பெண்களுக்கு எதிராகப் பேசிவிட்டதாகக் கூறி போராட்டம் நடத்தும் பாஜகவினர் பொங்கி எழும் அவரது உரை இதுதான்…
”இந்து தர்மத்தின்படி எல்லா பெண்களையும் விபச்சாரிகளாகக் கடவுள் படைத்துள்ளார். இந்து தர்மம்…அதாவது மனுதர்மத்தின்படி பெண்கள் விபச்சாரிகள். ஆண்களைவிட அனைத்து இந்து பெண்களும் கீழானவர்கள்.”
மனுதர்மத்தில் உள்ள இந்த வரிகளைத்தான் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால், பாஜக உள்ளிட்ட வலதுசாரிகள் பெண்களுக்கு எதிராக திருமாவளவன் சொன்னதாக செய்தியைத் திரித்து வெளியிட்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், திருமாவளவன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய சமுதாயத்தில் சாதிய முறையின் அடிப்படையிலும், பெண்களை இழிவாக நடத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் எழுதப்பட்ட மனுதர்ம நூலை, சாதியத்துக்கு எதிரான தலைவர்கள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்த சாதிய முறையில் சுதந்திரமற்ற, அதிகாரமற்றவர்களாகப் பெண்கள் இருக்க வேண்டும் என்பதையும், பிராமணிய ஆதிக்கத்தின் பிடியில் பெண்கள் சுதந்திரமானவர்களாகவும், அதிகாரமுள்ளவர்களாகவும் இருக்க முடியாது. இதனால் தான், மனுதர்மத்தை மகாத்மா ஜோதிராவ் புலே கடுமையாக எதிர்த்தார்.
கடந்த 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் முன்னிலையில், மனுதர்ம நூலை டாக்டர் அம்பேத்கர் தீயிட்டுக் கொளுத்தினார். அப்போது அவருக்கு 36 வயதுதான். 1922 ஆம் ஆண்டு மனுதர்ம நூலைத் தந்தை பெரியார் தீயிட்டுக் கொளுத்தினார். இதுவே, திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாகவும் மாறியது.
இந்த மாபெரும் தலைவர்கள் மனுதர்மத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தைத் தான், 100 ஆண்டுகளுக்குப் பிறகு திருமாவளவன் முன்னெடுத்து, மனுதர்ம நூலைத் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலக சமூக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ” இந்து மதத்தில் பெண்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. ஆண்களைவிடப் பெண்களுக்குச் சாதிய அடக்குமுறை அதிகமாக இருப்பதாக அம்பேத்கர் கூறியுள்ளார். எந்த மதத்திலும் மத அடிப்படை வாதம் இருந்தாலும், அது மற்ற மதத்துக்குத் தீங்கு விளைவிக்கும். இரண்டாவதாக, மத அடிப்படைவாதம் மற்ற மதங்களை மட்டும் பாதிப்பதில்லை. இந்துத்வாவில் உள்ள அடிப்படைவாதம் சாதிய முறையைத் தூக்கிப் பிடிப்பதாகவும், பிராமணிய ஆணாதிக்கம் நிறைந்ததாகவும் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், சமமற்ற வாழ்க்கையும், இந்துத்துவா ஆன்மாவும் இருக்கிறது” என்றார்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு, மனுதர்மத்தை நிராகரிக்க அவர் விடுக்கும் அழைப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. அதாவது, சாதிய மற்றும் சனாதன கொள்கைகளுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகளின் கொள்கைகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
மனுதர்மத்தால் முன் வைக்கப்பட்ட நச்சு சமத்துவமின்மையை நன்கு அறியாதவர்களுக்கு, அதன் சாதிய மேற்கோள்களின் தொகுப்பை இங்கே அணுகலாம். இதில் பிரபலமற்ற கட்டளையும் அடங்கும்:
சூத்திரர்கள் கல்வி கற்கத் தகுதியற்றவர்கள். உயர் சாதியினர் சூத்திரர்களுக்குக் கல்வி புகட்டவோ அல்லது அறிவுரை வழங்கவோ கூடாது. சட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் சூத்திரர்களுக்கு இல்லை. எனவே, அவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. (மனு நான்காம் பாகம் 78 முதல் 81 ம் பக்கம் வரை). சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது என்று மட்டும் மனுதர்மம் சொல்லவில்லை. ஒன்பதாவது பாகத்தில் 18 ஆவது பாராவில், வேதம் கற்பதற்கும் பெண்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மனுதர்மம் அறிவிக்கிறது. மனுதர்மத்தில் பெண்களுக்கு எதிராக உள்ள மேலும் பல வாசகங்கள்…
- ”ஸ்வபவ் ஏவ் நரினாம்”…- 2/213. இந்த உலகில் ஆண்களைக் கவர்ந்திழுப்பது பெண்களின் இயல்பு. அதற்காகத்தான் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
- ”அவிட்வம் சம்ளாம்”…- 2/224. பெண்கள் தங்கள் வர்க்கத் தன்மைக்கு உண்மையாக, இந்த உலகில் வழிதவறிய ஆண்களை வழி நடத்தும் திறன் கொண்டவர்கள். ஒரு முட்டாள் மட்டுமல்ல, கற்றறிந்த ஞானியும்கூட ஆசையின் அடிமைகளாக மாறுகிறார்கள்.
- ”மத்ரா ஸ்வஸ்த்ரா”… – 2/215. ஞானமுள்ளவர்கள் தாய், மகள் அல்லது சகோதரியுடன் தனியாக உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். சரீர ஆசை எப்போதும் வலுவாக இருப்பதால், உணர்ச்சிவயமாக்கும்.
”மனுதர்ம புத்தகத்தை நான் பார்த்தது இல்லை. இந்துக்களின் வீடுகளிலும் அந்த நூலைப் பார்த்ததில்லை. அப்படியிருக்கும் போது, இந்த காலத்துக்கு மனுதர்மம் எப்படிப் பொருந்தும்?” என்று அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது.
”மனுதர்மம் என்பது சட்டத்தை விட சக்தி வாய்ந்தது என்றும், இது காவல்துறை இல்லாத வன்முறை, குறுக்கீடு இல்லாத ஆதிக்கம்” என்றும் அம்பேத்கர் கூறியதைத் தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தனிப்பட்ட வழக்கங்கள் அரசின் சட்டத்தைவிட மக்களால் திறம்படச் செயல்படுத்தப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட மக்களின் நிர்ப்பந்த சக்தி, அரசின் நிர்ப்பந்த சக்தியைவிட அதிகம் என்பதே இதற்குக் காரணம்.
மனுதர்மம் எழுதப்படாத அரசியல் சாசனம் என்பதால், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. இது தலித்துகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு அடித்தளமாக உள்ள எழுதப்படாத சட்டம்.
இந்தப் போராட்டம் பெண்களை முன்களப் போராளிகளாகக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகப் பெண்கள் போராட, இந்த களம் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சனாதன மற்றும் மனு தர்மத்துக்கு எதிரான இந்தப்போராட்டம், ஒடுக்கப்பட்ட தலித்துகள், சூத்திரர்கள் மற்றும் ஆதிவாசிப் பெண்களைப் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மனுதர்ம நூலை அம்பேத்கர் எரித்தார். இந்த நாளை இந்தியப் பெண்கள் விடுதலை தினமாக அனுசரிக்க வேண்டும். மனு தர்மத்தை எதிர்த்து திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகளும் முன்னெடுத்திருக்கும் போராட்டத்துக்கு ஆதரவாகப் பெண்கள் அனைவரும் கைகோர்த்து அணிவகுப்போம்.
கட்டுரையாளர்: மீனா கந்தசாமி (கவிஞர், புனைக் கதை எழுத்தாளர், மொழிப் பெயர்ப்பாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்)