(தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறுகிற நிகழ்வுகளை ஜூனியர் விகடனில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தொடர்ந்து விமர்சன கட்டுரை எழுதி வந்தார். அப்படி எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஜூனியர் விகடன் 28.4.1993 இல் வெளிவந்தது. அக்கட்டுரை இங்கே வேண்டும் வெளியிடப்படுகிறது.)
காங்கிரஸ் கட்சி தந்திருந்த பேரவைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம், திங்கட்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பத்திரிகையாளர்களும் சபை அலுவலர்களும் மிகவும் பரபரப்பாகக் காட்சியளித்தார்கள். ‘ஏதாவது காரணம் காட்டித் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று ஆளுங்கட்சித் தரப்பில் உறுதியாக இருப்பதாக எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. நாங்களும் அதை எதிர்பார்த்துச் சமாளிக்கத் தயாராக இருந்தோம்.
பேரவை கூடியதும் துணைத் தலைவர் வந்து ஆசனத்தில் அமர்ந்தார். ஆளுங் கட்சி சார்பாக நடக்கப்போகும் நிகழ்ச்சிகள் அவருக்கு நன்கு தெரிந்திருந்த காரணத்தால், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று பதட்டத்தோடு காணப்பட்டார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவை கூடும் நேரத்துக்குச் சற்று முன்பாகவே வந்திருந்தார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் பொன்னுசாமி எழுந்து, ”மாண்புமிகு சேடப்பட்டி முத்தையாவைப் பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்தப் பேரவை தீர்மானிக்கிறது என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் உட்பட முப்பத்தாறு பேர் கொடுத்திருக்கிறார்கள்…” என்று அறிவித்து விட்டு, தீர்மானத்தைத் தந்த உறுப்பினர்களின் பெயர்களை வாசித்தார்.
பிறகு, பேரவைத் துணைத் தலைவர் “இந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதை அறிய, முப்பத்தைந்து உறுப்பினர்களுக்கு அதிகமானவர்கள் எழுந்து நிற்க வேண்டும்” என்று கேட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் அறுபது பேரும், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கழக உறுப்பினர் திருநாவுக்கரசு, எந்தக் கட்சியையும் சாராத டாக்டர் குமாரதாஸ் ஆகியோரும் எழுந்து நின்று ஆதரவு தந்தனர். உடனே ‘விதி 70(2)இன் கீழ் இந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாம்” என்று அறிவித்தார்.
இந்த நேரத்தில் முதலமைச்சர் பேரவைக்குள் நுழைந்தார். அவருடைய வருகையும் அவர் அமர்ந்த விதமும் எங்களைப் பார்த்து அவர் சந்தோஷமாகச் சிரித்த விதமும் – விவாதத்தை ஆளுங்கட்சி அனுமதிக்கப் போவதில்லை என்பதை எங்களுக்குத் தெளிவாக உணர்த்தியது.
அந்த நேரத்தில், ”எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பி. தீர்மானத்தை முன்மொழியலாம்…” என்று பேரவைத் துணைத் தலைவர் அறிவித்தார்.
அவர் அறிவித்தவுடன், எஸ்.ஆர்.பி. பேரவைத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை ஆங்கிலத்தில் முன்மொழிந்தார். உடனே பேரவைத் துணைத்தலைவர் எழுந்து, “விதி 97(2)இன் படி இந்தத் தீர்மானத்தை யாரும் வழி மொழியாததால் தீர்மானம் கைவிடப்படுகிறது…” என்ற ஒரு தீர்ப்பைக் கூறி, அனைவரையும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பட வைத்தார். உடனே ஆளுங்கட்சி தரப்பில் ஒரே ஆரவாரம்… முதல்வரின் முகமோ, மகிழ்ச்சியில் பிரகாசித்தது. காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் எழுந்து நின்று மிகக் கடுமையாகப் பேரவைத் துணைத் தலைவரின் தீர்ப்பைக் கண்டனம் செய்தோம்.
அப்போது எஸ்.ஆர்.பி. எழுந்து, “தீர்மானத்தை வழிமொழிவதற்கே எங்களுக்கு அவகாசம் கொடுக்காமல் தள்ளுபடி செய்திருக்கிறார்கள்…. இது என்ன நியாயம்….?” என்று மிகக் கடுமையாகக் கேட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து, பேரவைத் துணைத் தலைவரின் தீர்ப்பை மிகக் கடுமையாகக் குறை கூறினார்.
உடனே நான் எழுந்து, ‘எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிந்து விட்டு, தீர்மானத்தின் மீது விவாதத்தைத் தொடங்கியிருந்தால் தான் வழிமொழியவில்லை என்ற பிரச்சினையே எழும். அவர் விவாதத்தை இன்னும் தொடங்கவில்லை. தீர்மானத்தை முன் மொழிந்திருக்கிறார். வழிமொழிய நான் எழுவதற்குள் நீங்கள் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறீர்கள்…” என்று நானும் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக ஆட்சேபித்தேன்.
உடனே, ”இங்கே உள்ள 235 ஜோடி கண்களும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எழுந்ததாக யாரும் சொல்லவில்லை. நீங்கள் வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறீர்கள்!” என்றார் பேரவைத் துணைத்தலைவர்.
உடனே அமைச்சர் செல்வகணபதி எழுந்து, “எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒரு சிலர் வழிமொழியத் தேவையில்லை என்று வாதிடுகிறார்கள். ஆனால், உறுப்பினர் அழகிரியேதான் வழிமொழிய எழுந்ததாகக் கூறுகிறார். இதில் எது சரி என்று தெரியவில்லை …” என்று கூறினார்.
அப்போது முதல்வர் எழுந்து, ”எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விதிகளைச் சரியாகப் படிக்காமல் துணைத் தலைவரைக் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை …” என்று கூறினார்.
எங்களது எதிர்ப்புக் குரலுக்குப் பேரவைத் துணைத் தலைவர், தம்முடைய தீர்ப்பை மாற்றிக்கொள்ளும் அறிகுறி தெரியாத காரணத்தினால், எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்பு செய்தோம்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை….. சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் ஜனநாயகத்தின் மீதும் தார்மீகப் பண்புகள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்குக் கிடைத்த பலத்த அடியாகும். எங்களால் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாது என்று பட்டவர்த்தனமாகவே அன்று ஆளுங்கட்சியினர் கோரத்தாண்டவம் ஆடினர். அவர்களின் அந்த நடவடிக்கை ‘உண்மை சுடும்’ என்பதை எங்களுக்கு உணர்த்தியது.
போலீஸ் மானியத்தில் நாவன்மை மிக்க சத்தியமூர்த்தி, துணிவுமிக்க முத்துராமலிங்கத் தேவர், பெருமைமிக்க பேரறிஞர் அண்ணா …. இப்படிப் பல ஆற்றல்மிக்க அறிஞர்களின் தீரம் மிக்க வாதங்களைக் கேட்டுப் பழகிப்போன தமிழகச் சட்டப் பேரவை, அன்றைய தினம் ஆளுங்கட்சி உறுப்பினர் தென்னவன் பேச்சைக் கேட்டது.
ஒரு கட்டத்தில் அவர் பேசும்போது, ”கருப்பையா மூப்பனாரைச் செருப்பால் அடித்தார்கள்…” என்று கூறினார். உடனே தாராள மனம் படைத்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ”செருப்பு அவர்மீது வீசப்பட்டது என்று திருத்திக் கொள்ளவும்” என்று ஆலோசனை சொல்ல…… பேரவைத் துணைத் தலைவர் ”அப்படியே திருத்திக் கொள்ளலாம்” என்றுகூற, முதல்வரும் தலையசைத்து அங்கீகாரம் அளித்தார்.
ஒரு கட்டத்தில் “கொள்ளைக்காரன் வாழப்பாடி” என்று ஒரு கணம் சொல்லி நிறுத்திவிட்டு, ”தி.மு.க. ஆட்சியில் அப்படி வழக்குப் போட்டார்கள்…” என்று சொன்னார். மேலும் சிலேடையாகப் பேசியபோது, எங்கள் தலைவிதியை நொந்து நாங்களும் அமர்ந்திருந்தோம்.
நண்பர் பீட்டர் அல்போன்ஸ் பேசும் போது, ”அண்ணாமலை நகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பத்மினியின் வழக்கில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்குப் பிறகுதான் முறையான வழக்கே தொடுக்கப்பட்டது. அதுவரை காவல்துறையினர் தங்களுக்குச் சாதகமான முறையிலேயே விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார்கள்…” என்று கூறியவுடன், ”அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட காவலர்களை வேலை நீக்கம் செய்து, கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டேன்…” என்று முதல்வர் கூறினார்.
உடனே நான் எழுந்து, ”முதல்வர் சொல்வது சரியான தகவல் அல்ல… பொது மக்களின் தீவிரமான போராட்டத்துக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் தான் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்கள்…” என்று கூறியவுடன், ஆளுங்கட்சித் தரப்பில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், எனது நிலையை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பழனிசாமியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தம்புசாமியும் உறுதியாக வாதிட்டார்கள்.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் பேச முடியுமோ, அவ்வளவு நேரம் பேசி அமர்ந்த பிறகு திருநாவுக்கரசு பேச எழுந்தார். அதுவரை அமைதியாக இருந்த பேரவைத் தலைவர், ”திருநாவுக்கரசு பத்து நிமிடத்தில் முடித்துக் கொள்ள வேண்டும்…” என்று கூறினார். அவர் பேசுகிறபோது, ”புகளூர் சர்க்கரை ஆலையில் போராட்டம் செய்த தொழிலாளர்கள், காவல் துறை யினரைத் தாக்கினார்கள். எனவே, காவல்துறையினர் தொழிலாளர்களைப் பார்த்துச் சுடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’ என்று முதல்வர் கூறுகிறார். இது ஒரு பாசிசப் பேச்சு ஆகும்…..” என்று கூறியவுடன், ஆளுங்கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் எழுந்து ஆளுக்கு ஆள் திருநாவுக்கரசுக்குப் பதில் சொன்னார்கள்.
இவற்றில் எல்லாம் திருப்தியடையாத முதல்வர், தன் பங்குக்கு அவரும் பதிலளித்தார். முதல்வர் அமர்ந்தவுடன் மீண்டும் திருநாவுக்கரசு எழுந்தபோது, பேரவைத் தலைவர் ”திருநாவுக்கரசு, உங்கள் நேரம் முடிந்து விட்டது…. வேண்டுமானால் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொள்ளுங்கள்…” என்று கூறியவுடன் திருநாவுக்கரசு ”எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் எட்டு நிமிடத்தை முதல்வர் எடுத்துக்கொண்டு விட்டார். இரண்டு நிமிடம்தான் நான் பேசியிருக்கிறேன். எனவே, முழு நேரத்தையும் தாருங்கள்…” என்று வாதிட்டார்.
இப்படியாக, திருநாவுக்கரசுவுக்கும் பேரவைத் தலைவருக்கும் சொற்போர் நடக்க….. வழக்கம் போல் திருநாவுக்கரசுவை வெளியேற்றப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். திருநாவுக்கரசு வெளியேறாமல், பேரவைத் தலைவருடன் தமது வாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த போது, ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து ‘போடா வெளியே…..’ என்று ஒரு குரல் அழுத்தம் திருத்தமாக அவை முழுவதும் கேட்டது.
எஸ்.ஆர்.பி.யும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் “சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டார்கள்.
”இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்…” என்று பொதுவாகச் சொல்லி விட்டு, காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம். கிருஷ்ணனைப் பேச அழைத்தார் பேரவைத் தலைவர். பேரவைத் தலைவரின் இந்தச் செயல் எங்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
முதல்வரும் மௌனமாக இருந்தது, ”ஆளுங்கட்சி உறுப்பினரின் அந்த வசை பாடலை அங்கீகரிக்கிறாரோ…..’ என்ற ஐயத்தை எங்களுக்குக் கொடுத்தது. மௌனம் ஒரு பாஷை தானே!
அந்த பாஷையை நன்றாகவே அறிந்து வைத்திருந்த பேரவைத் தலைவர், ”எஸ்.எம்.கிருஷ்ணன் பேச விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். எனவே, இதோடு அவையை ஒத்தி வைக்கிறேன்…” என்று கூறி, தமக்கு இடப்பட்ட கடமை இதோடு முடிந்ததாக எண்ணி வெளியேறினார்.
இவர்களின் இந்தப் போக்கை இப்படியே விட்டு விடக் கூடாது என்று அந்த நேரத்தில் அத்தனை உறுப்பினர்களும் ஒருமித்துக் குரல் கொடுத்தோம். இந்தக் கொடிய செயலுக்கு எதிராக நாங்களெல்லாம் உணர்வுப்பூர்வமாக ஒன்றுபட்டிருப்பது பளிச்சென்று தெரிந்தது.
”இதற்கு முடிவு கட்டும் வரை பேரவையை விட்டு வெளியே செல்லக் கூடாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பி. சொன்னபோது, நாங்கள் மட்டு மல்ல … சி.பி.ஐ., சி.பி.எம். உறுப்பினர்கள்கூட அதற்கு உடன்பட்டு, அவரவர் இருக்கைகளில் அப்படியே அமர்ந்தார்கள்.
திடீரென்று பேரவையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. குளிர்சாதனம் நிறுத்தப்பட்டது. வெளியே செல்லும் கதவுகள் அடைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு பத்திரிகையாளர்கள் திகைத்து நின்றார்கள். காவல் துறையில் இருக்கும் உளவுத்துறையினர் பத்திரிகையாளர்களை வெளியே செல்லும்படி ஆணையிட்டனர்.
”பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டால் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று அஞ்சுகிறோம். மேலும் அவைக்குள் என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாமலே கூடப் போய்விடலாம். எனவே பத்திரிகையாளர்கள் எங்களுடன் இருக்க வேண்டும்…” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டோம்.
அவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிச் சீட்டு பறிக்கப்படும் என்று கூடப் பயமுறுத்தினார்கள். அச்சுறுத்தலுக்குச் சில பத்திரிகையாளர் அஞ்சவும் செய்தார்கள். ஆனால், பெரும்பான்மை பத்திரிகை அன்பர்கள் ”இது எங்கள் கடமை. இந்த உறுப்பினர்கள் இங்கே இருக்கும் வரை நாங்களும் இருப்போம். பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது அரசு கை வைக்கக்கூடாது” என உறுதியாகக் கூறி, பொறுமையாக அமர்ந்திருந்ததைப் பார்த்த போது ‘வாய்மையே வெல்லும்’ எனத் தமிழக அரசின் கோபுரச் சின்னத்தில் குறிக்கப்படும் வார்த்தை இந்த வகையிலாவது மெய்யாக இருக்கிறது என்று நாங்கள் மகிழ்ந்தோம்.
கதவுகள் அடைக்கப்பட்டு, காற்று போக முடியாமல் இருள் சூழ்ந்திருந்த பேரவையில் உறுதியோடு அமர்ந்திருந்தாலும் மனப்புழுக்கத்துடன் அல்லாமல் உடல் புழுக்கம் எங்களை வாட்டி வதைத்தது. வயதான சில உறுப்பினர்கள் ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு மூச்சு விடக்கூடச் சிரமப்பட்டார்கள். பெண் உறுப்பினர்கள் டாய்லெட் செல்லக்கூட அனுமதிக்காமல் காவல்துறையினரால் தடுக்கப்பட்டார்கள். தாகத்தின் காரணமாகக் குடிநீர் இருக்கும் இடம் சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த டம்ளர்கள் கூட அகற்றப்பட்டிருந்தன. எங்களுக்கு எதிரான செயல்கள் நீடிக்க நீடிக்க, எங்களது உறுதியும் போராட்ட உணர்வும் உறுதி பெற்றன.
இரவு ஏழு மணிக்கு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. குளிர்சாதனம் இயங்க ஆரம்பித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பி. கடைசி வரை எதுவும் உண்ணாமல், மிக உறுதியுடன் காந்திய வழியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது மன உறுதி எங்களையெல்லாம் பூரிப்படைய வைத்தது.
அன்றிரவு பத்து மணிக்கு மேல் உறுப்பினர் பலராமனும், குமரி அனந்தனும் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய பிறகு, சர்வமதப் பிரார்த்தனை நடந்தது. பிறகு, பேரவையிலேயே ஆளுக்கொரு இருக்கையில் படுத்துக் கொண்டோம். பேரவை ஆரம்பிக்கும்போது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காலை எழுந்தவுடன் மூத்த தலைவர்கள் ஆலோசித்தார்கள்.
சரியாக பத்து மணிக்குப் பேரவைத் தலைவர் உள்ளே நுழைந்தார். எதுவும் நடவாதது போல் வழக்கம்போல் திருக்குறள் படிக்க ஆரம்பிக்க.. உடனே நாங்கள் ”சாத்தான் வேதம் ஓதக்கூடாது.. பேரவைத் தலைவர் திருக்குறள் படிக்கக் கூடாது…” என்று ஒருமித்த கோஷம் போட்டோம். வலுவில் வரவழைத்துக் கொண்ட மெலிதான புன்னகையுடன், கேள்வி நேரத்தைத் தொடங்க ஆரம்பித்தார். உடனே, நாங்கள் அனைவரும் “நேற்று குற்றமிழைத்த உறுப்பினர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வற்புறுத்தினோம். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத பேரவைத் தலைவர் ஏதேதோ சொல்லித் திசை திருப்பப் பார்த்தார்.
இந்த நேரத்தில் பேரவைக்குள் முதல்வர் நுழைந்ததும், உடனே பேரவைத் தலைவர் எங்களையெல்லாம் வெளியேறும்படி ஆணையிட்டார். நாங்கள் தொடர்ந்து எங்களது கோரிக்கையை வலியுறுத்தவே, அவைக் காவலர்களை அழைத்து எதிர்க் கட்சித் தலைவரை அப்புறப்படுத்தச் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினார்கள். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் மற்ற உறுப்பினர்களும் வெளியே எறியப்பட்டோம். தி.மு.கழக உறுப்பினர் பரிதி இளம்வழுதி மட்டும் தன்னைத் தூக்க வந்த காவலரிடம் வாதாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று வந்த ஒரு காவலர், அவரைத் தாக்குவதை என்னால் காண முடிந்தது. அதைத் தொடர்ந்து உறுப்பினர் பரிதி இளம்வழுதியைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கினார்கள்.
அப்போது அங்கே ஓடிவந்த பெண் உறுப்பினர்கள் லோகாம்பாள், ரமணி நல்லதம்பி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பழனிசாமி, தம்புசாமி ஆகியோர் மிகக் கடுமையாகக் காவலர்களை நோக்கி, ”தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அடிக்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது ….” என்று ஆவேசமாகத் தடுத்து, தாக்குதலிலிருந்து காப்பாற்றினார்கள். உணர்ச்சிவசப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளியே வந்து, நீதி கேட்டு நெடுஞ்சாலையில் மறியல் செய்து கைது செய்யப்பட்டோம்.
ஜூனியர் விகடன், 28.4.93.