தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதை அடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிரித்த முகத்தோடு, மிகுந்த நம்பிக்கையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமார் “விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்” என்று அனைவரிடமும் கூறினார். ஆனால் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து மூச்சுத் திணறல் காரணமாக சுவாசக் கருவி பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இறப்பதற்கு முதல் நாள் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது.தொடர்ந்து உடலில் மற்ற பாகங்கள் கடுமையான பாதிப்பு அடைந்த காரணத்தால், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாலை உயிரிழந்தார் என்கிற அதிர்ச்சி செய்தி அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக இருந்தது.
இதையடுத்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அவரது உடலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அவர் மனைவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது உடல் தியாகராயநகர் வீட்டில் இருந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்க முகப்பிற்கு கொண்டுவரப்பட்டு, பிறகு சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வசந்தகுமாரின் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு முகுல் வாஸ்னிக், புதுச்சேரி மாநில முதலமைச்சகர் வி.நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வி.வைத்திலிங்கம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சி.டி.மெய்யப்பன், டாக்டர் ஏ.செல்லகுமார் எம்.பி., ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரஸின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் சென்னை தியாகராயநகர், நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அன்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வசந்தகுமார் அவர்களின் சவப்பெட்டி மீது முகத்தை பதித்து ‘ஓ’ என கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த அனைவரையும் சோகக் கடலில் ஆழ்த்தியது. குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் மல்க அழுததை அங்கு பார்க்க முடிந்தது. எந்த நிலையிலும் நிலை குலையாத அஞ்சா நெஞ்சனாக அரசியலில் வலம் வந்துகொண்டிருக்கிற தலைவர் அழகிரி மனம் நொறுங்கிய நிலையில், துக்கத்தை வெளிப்படுத்துகிற நிலை ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றது முதற்கொண்டு தலைவர் அழகிரிக்கு நம்பிக்கைமிக்க உற்ற தோழனாக, நண்பராக செயல்பட்டு வந்தவர் வசந்தகுமார். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் நாகர்கோவில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் பெரும் பணியை தமது தோளில் சுமந்து பம்பரமாய் பணியாற்றியவர் வசந்தகுமார். தலைவர் ராகுல் காந்தி பெரும் மகிழ்ச்சி அடைகிற வகையில் மக்கள் வெள்ளம் அந்த கூட்டத்திற்கு அணிதிரண்டு வந்ததற்கு காரணம் வசந்தகுமாரின் கடுமையான உழைப்புதான்.
குமரி மண்ணின் மைந்தரான வசந்தகுமாரின் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். இளமை பருவம் முதல் தமது சகோதரர் இலக்கிய செல்வர் குமரி அனந்தனின் வழிகாட்டுதலோடு காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டவர் வசந்தகுமார். காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்த வசந்தகுமார் தமது தோளில் மூவண்ண துண்டை அணிந்துகொண்டு தமிழக காங்கிரஸின் அடையாளமாக திகழ்ந்தவர். அவரது வசந்த் தொலைக்காட்சியிலும், வசந்த் அன் கோ விலும் பெருந்தலைவர் காமராஜரையும், அன்னை சோனியா காந்தியையும் பார்க்கலாம். அரசியலையும், தொழிலையும் வேறுபடுத்தி பார்க்காதவர்.
குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்த இவர், 1970 – களில் சகோதரர் குமரி அனந்தன் அரவணைப்பில் வளர்ந்தார். வி.ஜி.பன்னீர்தாஸ் நிறுவனத்தின் சைதாப்பேட்டை கிளையில் ரூ. 70 சம்பளத்திற்கு விற்பனையாளராக பணியில் சேர்ந்தார். இவரது கடுமையான உழைப்பின் மூலமாக சில ஆண்டுகளில் கிளை மேலாளராக பதவி உயர்வு அடைந்து ரூ. 300 சம்பள உயர்வு பெற்றார். பணியில் சேர்ந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு இவரை மும்பை கிளைக்கு பணிமாற்றம் செய்தார்கள். அதை ஏற்றுக்கொள்ள மறுத்து பணியில் இருந்து விலகினார்.
வி.ஜி.பன்னீர்தாஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு அங்கே கற்ற தொழில்நுட்ப அறிவை தவிர நிராயுத பாணியாக எந்த முதலீடும் இல்லாமல் ஒரு சில நண்பர்களின் ஆதரவோடு, சென்னை, தியாகராயநகர் உஸ்மான் சாலையில் 1978 இல் வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை தொடங்கினார். தமது தொழில் நுணுக்க அறிவின் காரணமாகவும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் அன் கோ நிறுவனம், இன்று 83 கிளைகளுடன் விரிவுபடுத்தப்பட்டு இந்தியாவிலேயே முதன்மை விற்பனையகம் என்ற பெருமையை பெற காரணமாக இருந்தவர் வசந்தகுமார். தேர்தல் ஆணையத்தில் தனது சொத்து மதிப்பு ரூ.450 கோடி என்று பதிவு செய்தவர்.
தொழிலில் உச்சத்தை அடைந்த அவர், அரசியலிலும், மக்களவை உறுப்பினராக அமோக வாக்கு வித்தியாசத்தில் உயர்நிலைக்கு வந்தார். சிலர் தொழிலில் வெற்றி பெறுவார்கள். ஆனால் அரசியலில் தோல்வி அடைந்து விடுவார்கள். இன்னும் சிலர் அரசியலில் வெற்றி பெற்று தொழிலை நடத்துவதில் கோட்டைவிட்டு பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள். ஆனால் அரசியலிலும், தொழிலிலும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி சாதனை நிகழ்த்தியவர் வசந்தகுமார்.
தமிழக காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வசந்தகுமார் அவர்களின் மறைவின் மூலம் தமிழக காங்கிரஸின் தூண் சாய்ந்துவிட்டது. நம்பிக்கை நட்சத்திரம் மறைந்து விட்டது. காங்கிரஸின் ஒளிவிளக்கு அணைந்து விட்டது. காங்கிரசுக்கு ஒளி வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக பறிக்கப்பட்ட பிறகு நம்மை இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி வெளியே வருவது?
ஆனால், வசந்தகுமார் உயிர் பறிக்கப்படுவதற்கு அவர் காரணமல்ல. மக்களவை காங்கிரஸ் உறுப்பினரான வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட தமது தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வது தமது கடமை என்று கருதினார். அவர் அதற்கு அரசு நிதியை எதிர்பார்க்கவில்லை. தமது சொந்த நிதியை பெருமளவில் செலவிட்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார். இதனால் கொரோனா தொற்று தம்மையும் பாதிக்கும் என்று சிறிதும் கவலையோ, அச்சமோ கொள்ளாமல் துணிவுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அத்தகைய துணிவின் காரணமாக மக்கள் தொண்டர் வசந்தகுமாரை கொரோனா நோய் தொற்றிக்கொண்டு நம்மிடமிருந்து பறித்துவிட்டது.
தமிழக காங்கிரஸில் இன்னொரு வசந்தகுமாரை பார்க்கவும் முடியாது, உருவாக்கவும் முடியாது. அவருக்கு முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை . அவரைப் போல மக்கள் தொண்டு ஆற்றுவதற்கு இன்னொரு வசந்தகுமார் எங்கே கிடைக்கப் போகிறார்?