தூத்துக்குடியில் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் 7 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துள்ளது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் மோசமாகத் தாக்கப்பட்டதில் அவர்கள் உடலிலிருந்து ரத்தம் தெறித்து சுவரில் படிந்துள்ளது. ஆடைகளில் படிந்த ரத்தத்தைச் சுத்தம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இரவு 7.45 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து இருவரும் மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படிந்திருந்த ரத்தக்கறையும், தந்தை, மகனது ரத்தமும் ஒன்று என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இருவரையும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியது உறுதியாகியுள்ளது. டெல்லியில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்தில் செய்யப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தந்தை ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் இறப்பதற்கு, காவல் துறையினர் தொடர்ந்து சித்ரவதை செய்ததே காரணமாக இருந்துள்ளது.
இவ்வாறு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.