”மாத்துவோம்… எல்லாத்தையும் மாத்துவோம்” என சமீபத்தில் தமது ட்விட்டர் பதிவில் ரஜினி காந்த் குறிப்பிட்டுள்ளார். ”ஏமாத்துவோம்…ஏமாத்துவோம் எல்லாத்தையும் ஏமாத்துவோம்” என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது.
சினிமாவைப் போல் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, பின்னர் காணாமல் போவது ரஜினிகாந்த்துக்குப் புதிதல்ல. இதற்கு 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
1996 ஆம் ஆண்டு, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற டயலாக் தான், அவரது முதல் அரசியல் பஞ்ச் டயலாக். 1996 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், கோபமும் திமுக-தமாகா கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தது என்பது தான் உண்மை. ரஜினிதான் காரணம் என்று அவரது ஆதரவுக்கூட்டம் இன்னும் சொல்லி வருகிறது. ரஜினியே எதிர்க்காவிட்டாலும், அந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
எட்டு ஆண்டுகளுக்குள் ரஜினியில் நிலைப்பாடு அப்படியே மாறியது. திருட்டு விசிடிகளை ஒழித்ததற்காக, 2004 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் பாராட்டு விழா நடத்தியது. தைரியலட்சுமி இருக்கும் பக்கம்தான் வீரலட்சுமி, வீரலட்சுமி இருக்கும் பக்கம்தான் விஜயலட்சுமி. இப்படி ஒவ்வொரு லட்சுமியும் தன்னால வருவாங்க. இங்கே ஜெயலலிதா தைரிய லட்சுமி என்று ரஜினிகாந்த் பாராட்டினார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொன்ன அதே வாயால், ஜெயலலிதாவைத் தைரிய லட்சுமி என்று ரஜினியால் பாராட்ட முடிந்தது என்றால், ரஜினி என்பவர் யார்? என்பது அப்போதே வெளிப்பட்டுவிட்டது.
2018 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு ரஜினி சென்றார். போராட்டத்தில் வன்முறை வெடிக்க சமூக விரோதிகள் தான் காரணம். போலீஸாரை அடித்தால் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றார்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று போராட்டங்களைக் கொச்சைப்படுத்திய அதே ரஜினி தான், கடந்த மார்ச் மாதம் சென்னை லீலா பேலஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், அதிமுக, திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் புரட்சி வந்தால் தான், நான் அரசியலில் இறங்கமுடியும். அத்தகைய புரட்சியை மக்கள் மத்தியில் ரசிகர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த பேச்சு வன்முறையாகாதா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய ரஜினி, கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலில் இருப்பதாக ஊடகங்கள் சொல்லி வருகின்றன. அது தவறு. கடந்த 3 ஆண்டுகளாகத் தான் நான் அரசியலில் இருக்கிறேன் என்றார்.
கூர்ந்து கவனித்தால், தனது படம் வெளியாகும் முன், அந்த படத்தை விளம்பரப்படுத்தி, ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவழைப்பதற்காகவே இது போன்ற பஞ்ச் டயலாக்குகளை பேசி ஊடகங்கள் துணையுடன் பரபரப்பைப் பற்ற வைப்பது ரஜினியின் வாடிக்கை என்பது புரியும்.
திரைப்படம் வெளியானதும் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது. பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் யாரும் நேரில் வரவேண்டாம், நான் வெளியூரில் இருக்கிறேன் என்பார். பல சமயங்களில் அவர் வீட்டிலேயே இருந்திருக்கிறார். பாவப்பட்ட ரசிகர்கள் வெளியே நின்று தொண்டை வற்ற கோஷமிட்டுவிட்டுக் கலைந்து செல்வார்கள்.
இப்போதுகூட டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவேன். ஜனவரி முதல் கட்சி தொடங்குவேன் என்று ரஜினி அறிவித்துள்ளார். அதுசரி! எந்த ஆண்டு என்று சொல்லவில்லையே என கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிஜன்கள்.
1996 ஆம் ஆண்டு முதல் 2020 வரை ரஜினி பேசிய பேச்சுகள் ரசிகர்களை ஏமாற்றுவதாக இருந்துள்ளது. எந்தத் தேர்தலிலும் அவரது பஞ்ச் டயலாக்குகளை மக்கள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தபோது, அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தபோது திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்பதே வரலாறு.
ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி படம் பார்த்த ரசிகர்கள் வீட்டுக்கு வெளியே கத்திக் கொண்டிருக்க, ஆர்எஸ்எஸ் அர்ஜுன மூர்த்தியை இதயத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி என்ற விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.
காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயின் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த அர்ஜுன் மூர்த்தியை வலது புறமும், காந்தியைப் போற்றும் தமிழருவி மணியனை இடது புறமும் எப்படி வைத்துக் கொள்ள முடியும்?.
முரண்பாடுகளின் மொத்த உருவமாக ரஜினி இருக்கிறார் என்பதற்கு, இதைவிடச் சிறந்த சான்று தேவையா?
ரஜினி முகத்திரை கிழியும்.